Monday, October 29, 2018


தோல்வியில் முடிந்த எடப்பாடி முயற்சி! - தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆளுநர் கொடுத்த ஷாக்



கலிலுல்லா.ச

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் மூவரை விடுதலை செய்யவேண்டும் எனத் தமிழக அரசு சார்பில், ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுப்பு தெரிவித்துள்ளார்.



கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தனி நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.கவினர் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரியில் வேளாண் பல்கலைகழக்கத்துக்குச் சொந்தமான பேருந்துக்கு அவர்கள் தீவைத்தனர். இதில், பயணம் செய்த கோகிலவாணி (நாமக்கல்), காயத்திரி (விருத்தாசலம்), ஹேமலதா (சென்னை) ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகித் துடிதுடித்து உயிரிழந்தனர். அப்பாவி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பேருந்தில் பயணம் செய்த மற்ற 44 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர். இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.



இந்தத் தண்டனைக்கு எதிராக 3 பேரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து அவர்கள் மூவரது தூக்குத்தண்டனையும் குறைக்கப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகாலமாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுவிக்கத் தமிழக அரசு முடிவெடுத்தது. விடுவிக்கப்பட உள்ள கைதிகளில் விவரங்கள் அடங்கிய கோப்புகளில், தருமபுரி ரயில் எரிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரின் பேரும் சேர்க்கப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டுமென்றால் ஆளுநர் அனுமதி அவசியம். அந்த வகையில் அனுப்பப்பட்ட இந்தக் கோப்புகளைப் பார்த்த பன்வாரிலால் புரோஹித், அவர்களை முன்விடுதலை செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் 3 பேரை விடுவிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. மேலும் மற்ற கைதிகளை முன்விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024