Wednesday, October 31, 2018


சுற்றுலாப் பயணிகளைக் காக்க வைத்த விவகாரம்: 2 போலீஸார் ஆயுதப் படைக்கு மாற்றம்


By திருவாரூர் | Published on : 31st October 2018 08:02 AM |

திருவாரூர் அருகே விசாரணை என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை நீண்ட நேரம் காக்க வைத்த சம்பவத்தில் 2 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குடும்பத்தினர், தஞ்சை வரை ரயிலில் வந்து, அங்கிருந்து மினி பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர், அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு, கங்களாஞ்சேரி வழியாக திங்கள்கிழமை மாலை திரும்பிக் கொண்டிருந்தனர். சோழங்கநல்லூர் பகுதியில் இவர்கள் சென்ற மினி பேருந்தை சோதனைக்காக மதுவிலக்கு போலீஸார் நிறுத்த முயன்றனராம். ஆனால், அந்த பேருந்து நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.


இதனால், சாதாரண உடையிலிருந்த போலீஸார் இருவர், இருசக்கர வாகனத்தில் சென்று, மினி பேருந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், பேருந்தை நிறுத்தாமல் சென்றது குறித்து அதன் ஓட்டுநரிடம் தகராறு செய்த போலீஸார், சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வைப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, இரவு 7 மணிக்கு ரயிலுக்குச் செல்ல வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கூறியும், அவர்களை அனுப்பி வைக்காமல், காக்க வைத்தனராம்.

 இந்த சம்பவம் உயர் அலுவலர்கள், மாவட்ட வருவாய் துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, 4 மணி நேரத்துக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், சோழங்கநல்லூரில் போலீஸார் சாதாரண உடையில் இருந்ததால், "லிப்ட்' கேட்கிறார்கள் என நினைத்து நிறுத்தவில்லை என்றும், இதற்காக பேருந்தில் ஏறிய போலீஸார் முறைதவறி நடந்து கொண்டதுடன், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் காக்க வைத்தனர் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் இளவரசன், சங்கர் ஆகியோர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024