Wednesday, October 31, 2018

சேலம்- - சென்னை விமானம் மாலை நேரத்தில் இயக்கப்படுமா?

Added : அக் 31, 2018 03:27

சேலம்: சேலம் - சென்னைக்கு, மாலை நேரத்தில் விமானம் இயக்க, அனுமதி கிடைக்காததால், சிக்கல் உருவாகியுள்ளது. முதல்வர் பழனிசாமி தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சேலம், காமலாபுரத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில், ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பின், மார்ச், 25ல், சேலம் - சென்னைக்கு, 'ட்ரூஜெட்' விமான சேவை துவங்கப்பட்டது.மத்திய விமான போக்கு வரத்து அமைச்சகத்தின், 'உதான்' திட்டத்தின் மூலம், 72 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம், தினந்தோறும் சென்னையில், காலை, 10:20க்கு புறப்பட்டு, 11:10க்கு சேலம் வந்து, இங்கிருந்து, 11:30 மணிக்கு கிளம்பி, 12:20க்கு சென்னை செல்கிறது.ட்ரூஜெட் நிறுவனத்தின் சார்பில், மாலை நேரத்தில், மற்றொரு முறை, இதே விமானத்தை இயக்க, உதான் திட்டத்தில் அனுமதி பெறப்பட்டது

. அக்., 28 முதல், தினமும் மாலை, 4:00 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, 5:10க்கு சேலம் வந்து, இங்கிருந்து, 5:40க்கு புறப்பட்டு, மாலை, 6:45க்கு சென்னை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், விமான போக்கு வரத்து அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவு, இப்பயணத்துக்கு அனுமதி வழங்கவில்லை.சேலம், காமலாபுரம் விமான நிலையம், காடுகளை ஒட்டி இருப்பதால், மேக மூட்டம் மற்றும் வெளிச்சம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், மாலை, 4:30 மணிக்கு மேல் விமானத்தை இயக்க முடியாத சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சேலம் சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் கூறியதாவது:மாலை, 5:40க்கு சேலத்தில் இருந்து கிளம்பும் வகையில், மாலை நேர விமான சேவை திட்டமிடப்பட்டிருந்தது.பனிமூட்டம் மற்றும் வெளிச்சமின்மை காரணமாக, மாலை, 4:30 மணிக்கு மேல், விமானத்தை இயக்க, விமான போக்குவரத்து துறை பாதுகாப்பு அலுவலர்கள், அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.விமான நிலைய விரிவாக்கம், மின் விளக்கு வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே, 4:30 மணிக்கு மேல் விமானத்தை இயக்க முடியும். மாலை, 3:00 மணிக்கு சென்னையில் கிளம்பி, 4:30க்குள் சேலத்திலிருந்து கிளம்பும் வகையில், ட்ரூஜெட் நிறுவனம் திட்டமிட்டது.ஆனால், சென்னை விமான நிலையத்தில், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. மின் விளக்கு வசதி அல்லது, 3:00 மணிக்கு அனுமதி என, இரண்டில் ஏதாவது ஒன்று கிடைத்தால் மட்டுமே, மாலை நேர விமான சேவை சாத்தியம். இது குறித்து நடவடிக்கை எடுக்க, முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024