Wednesday, October 24, 2018

அண்ணாமலை பல்கலை.யில் ரூ.60 கோடி மோசடி :மாஜி' துணைவேந்தர், பதிவாளர் மீது வழக்கு
சென்னை:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் ராமநாதன், முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி ஆகியோர், 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



dinamalar 24.10.2018

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலை செயல்படுகிறது. இதன் துணைவேந்தராக, 2008 ஜன., 29 முதல், 2013 ஏப்., 6 வரை, ராமநாதன் என்பவர் பணியாற்றினார். பதிவாளராக, 1999 ஏப்., 12 முதல், 2012 ஜூன், 30 வரை, ரத்தினசபாபதி பணிபுரிந்தார். இவர், 2012 ஜூலை, 9 முதல் ஆக., 3 வரை, ஆலோசகராகயும் பணியாற்றி உள்ளார்.

இவர்கள் இருவரும், தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க, தொழிலாளர் பங்களிப்புடன் கூடிய, ஓய்வூதிய திட்டத்தை துவக்கினர். இதற்காக, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து, 10 சதவீதத்தை பிடித்தம் செய்தனர். இதற்கு, பல்கலையும் பங்களிப்பு செலுத்தியது.

இவ்வாறு பிடித்தம் செய்த தொகையை, வங்கியில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகையை, தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கியுள்ளனர். மேலும், பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று, சட்ட விரோதமாக, பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களை நியமித்து, அவர்களுக்கும், ஓய்வூதிய திட்டநிதியில் இருந்து, சம்பளம் வழங்கி உள்ளனர்.

ஓய்வூதிய திட்டத்தின்படி, பல்கலை பங்களிப்புடன் சேர்த்து, 20 சதவீதம் நிதி
உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால், 2008 - 2009 மற்றும், 2012 - 13 வரை, ஓய்வூதிய திட்ட நிதியில், 60 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இந்த தொகையை, ராமநாதன் மற்றும் ரத்தினசபாபதி ஆகியோர் கையாடல் செய்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, நம்பத்தகுந்த வகையில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, டி.எஸ்.பி., சங்கர் தலைமையிலான போலீசார் விசாரித்து, ராமநாதன் மற்றும் ரத்தினசபாபதி மீது, வழக்கு பதிந்துள்ளனர். இருவரும், விரைவில் கைது செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...