Thursday, October 25, 2018


கவனக்குறைவின் விலை!


By ஆசிரியர் | Published on : 24th October 2018 02:25 AM | 

ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் உறைய வைத்திருக்கும் பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் நடந்த தசரா கொண்டாட்டத்தையொட்டிய விபத்து, நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்க முடியும். கடந்த வெள்ளிக்கிழமை, ஜலந்தருக்கும் அமிருதஸரஸுக்கும் இடையேயான மின்சார ரயில், அமிருதசரஸை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயில் தண்டவாளத்துக்கு அருகில் தசரா பண்டிகையையொட்டி நடைபெறும் ராம் லீலா நிகழ்ச்சியில் ராவணனை எரிக்கும் இறுதிக்கட்ட நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தை ஒட்டியுள்ள ரயில்வே பாதை மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, வேகமாக விரைந்து வந்த மின்சார ரயிலில் சிக்கி 59 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வாண வேடிக்கைகளின் சப்தமும், வெளிச்சமும், ஆரவாரமும், ரயில் வந்து கொண்டிருப்பதை ரயில்வே பாதையில் குழுமி நின்றுகொண்டிருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்க்காமல் போனதில் வியப்பில்லை. ஆனால், இப்படியொரு வாண வேடிக்கை நடக்கும்போது ரயில்வே தண்டவாளத்தின் மீது தனது கவனத்தை செலுத்தாமல், ரயில் ஓட்டுநரும் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்ததுதான் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும். ரயில் நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது அதன் வேகம் குறைக்கப்பட்டிருந்தாலோகூட இந்த அளவுக்கு மோசமான விபத்து ஏற்பட்டிருக்காது. 

பாதுகாப்பு குறித்து இந்திய ரயில்வே எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் நிறையவே இருக்கின்றன. அனில் காகோட்கர் தலைமையிலான குழு ஒன்று ரயில் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளை வழங்கி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்னமும்கூட ரயில் பாதுகாப்பு ஒழுங்காற்று ஆணையம் ஏற்படுத்தப்படவில்லை. இந்தியாவின் 1.12 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதைகளில் ஆளில்லா கடவுப் பாதைகளை அகற்றும் பணியும் முடிந்தபாடில்லை. 

ரயில்வே ஓட்டுநர் மீதும், நிர்வாகத்தின் மீதும் இந்த விபத்துக்கான முழுப் பொறுப்பையும் நாம் சுமத்திவிட முடியாது. இதுபோன்ற பண்டிகை நிகழ்வுகள் நடக்கும்போது ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றாலும்கூட, அதைவிட முக்கியம், அமிருதசரஸ் மாநகர நிர்வாகமும் காவல் துறையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அமிருதசரஸ் ஜோதா பதக் சம்பவத்தைப் பொருத்தவரை, இந்த விபத்துக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டியது மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும்தான். அவர்கள்தான் சட்டம்- ஒழுங்குக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்.

ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தை நடத்துவதற்கு தாங்கள்அனுமதி வழங்கவில்லை என்று அமிருதசரஸ் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஆனால், காவல் துறையிடமிருந்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, காவல் துறை அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் சுற்றுப்பகுதிகளில் பாதுகாப்புக் குறைபாடு இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் ஏன் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது. அனுமதி வழங்காமல் போனாலும்கூட ஜோதா பதக் பகுதியில் ஆண்டுதோறும் கோலாகலமாக தசரா கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும் என்கிற நிலையில், அமிருதசரஸ் மாநகராட்சி இதுகுறித்து கவனக்குறைவாக இருந்திருப்பது விசித்திரமாக இருக்கிறது.

இந்த விபத்துக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் உள்ளிட்ட பல முக்கிய ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் காவல் துறை காட்டிய முனைப்பை, பொதுமக்களின் பாதுகாப்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் காட்டியிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும். நவ்ஜோத் கௌர் உள்ளிட்ட பிரமுகர்கள், விபத்து நேர்ந்தவுடன் பாதுகாப்பாக அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்களே தவிர, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்கிற குற்றச்சாட்டு அதைவிடக் கொடுமை. 

இந்தியாவின் முக்கியமான பண்டிகைகள் அனைத்திலுமே ஏதாவதொரு விபத்து நடந்திருக்கிறது. 2008-இல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சாமுண்டி தேவி ஆலயத்தில் நெரிசலில் சிக்கி 249 பேர் பலியானதில் தொடங்கி, 2013-இல் அலாகாபாத் கும்பமேளாவில் 33 பேர் இறந்தது உள்ளிட்ட எத்தனையோ விபத்துகள் நமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்படும் கவனக்குறைவை எடுத்துரைத்திருக்கின்றன. 

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநில அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பண்டிகைக் கூட்டங்களிலும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. அப்படியிருந்தும்கூட, அமிருதசரஸ் ஜோதா பதக்கில் நடந்தது போன்ற விபத்துகள் தொடர்வது பொதுமக்களின் கவனக்குறைவையும், நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும்தான் வெளிப்படுத்துகிறது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமலும், ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புணர்வு இல்லாமலும் இருக்கும் வரை இதுபோன்ற விபத்துகள் தொடரத்தான் போகின்றன!

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024