Monday, October 29, 2018


`இந்த வீட்டில் நீங்கள் இருக்கக் கூடாது' - 7 ஏக்கர் நிலத்தால் பெற்றோருக்கு மகனால் நேர்ந்த கொடூரம்!



சுரேஷ் அ Follow


சொத்துக்காகப் பெற்ற மகனே பெற்றோரை கூலிப்படை ஏவி அரிவாளால் வெட்டி காரில் கடத்தி வந்து சாலையில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது ராசிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மோர்பாளையத்தைச் சேர்ந்த சபாபதி, சரசு தம்பதியருக்கு பழனிவேல் என்ற மகனும் சுமதி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் தங்களது 27 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கரை மகன் பழனிவேலுக்கு எழுதிக் கொடுத்ததுடன், மகளுக்கு மீதமுள்ள 7 ஏக்கரை எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் சுமதிக்கு சொத்தைப் பிரித்து தரக்கூடாது என ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பழனிவேல், மொத்த சொத்தையும் தன் பெயருக்கே எழுதித் தருமாறு பெற்றோரை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தக் காரணத்தைக் காட்டி கொடுமைப்படுத்திப் பெற்றோர்களை துரத்தி விட்டதாக மகன் பழனிமேல் மீது கொடுக்கப்பட்ட வழக்கில் மாதம் 10,000/- பராமரிப்பு தொகை தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அதையும் தராமல் மிரட்டி வந்த மகன் மீது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவே, குடியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்திய நிலையில் தற்போது மிரட்டலாக மாறியிருக்கிறது.

இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை 6 கார்கள் 20-க்கும் மேற்பட்ட கூலிப்படை யை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்த பழனிவேல், தனது தந்தையையும் தாயையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மேலும் வீட்டின் கதவுகளை உடைத்து எரிந்ததுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து கார் டயர்களை கிழித்து ... 2 பசு மாடுகளையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தகராறு செய்த பழனிவேல், இந்த வீட்டில் நீங்கள் இருக்கக் கூடாது என்று அரிவாளால் முதுகு பகுதியில் வெட்டி , வாயில் துணியை வைத்து அடைத்து காரில் ஏற்றியுள்ளான். காரில் கடத்திச் சென்று அடித்துக் கொடுமைப்படுத்தி கோனேரிப்பட்டி ஏரி அருகே பெற்றோர் என பாராமல் தூக்கி வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் தம்பதியரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அடித்துத் துன்புறுத்தியதோடு அல்லாமல், அணிந்திருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் பழனிவேலின் தாய்.

சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் மல்லசமுத்திரம் காவல்துறையினர் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் மற்றும் கூலிப்படையினரை தேடி வருகின்றனர். 20 ஏக்கர் நிலத்தை எழுதிவைத்த பிறகும், பெற்று வளர்த்த தாய், தந்தை என்றும் பாராமல் மகனே காரில் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தி சாலையோரம் வீசிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் இராசிபுரம் பகுதியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024