Saturday, October 27, 2018

வற்றவில்லை பாலியல் ஆறுகள்

By தி. இராசகோபாலன் | Published on : 27th October 2018 03:05 AM |

பாலியல் வன்முறைகள் இன்றைக்குப் போல் என்றைக்கும் பெருக்கெடுத்து ஓடியதில்லை எனலாம். தொடக்கப்பள்ளியில் கல்வியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களில் சிலர், கலவியைச் சொல்லித் தரத் தொடங்கிவிட்டார்கள். அதனால் பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் முகத்திரை கிழிக்கப்பட்டு மானபங்கப்பட்டு நிற்கின்றனர்.
பல்கலைக்கழகங்களில் பாலியல் வன்முறை ஓர் அங்கீகரிக்கப்பட்ட பாடமாகவே அரங்கேற்றப்படுகிறது. பேராசிரியர்களும் துணை வேந்தர்களும் கூச்சநாச்சம் இன்றி பந்தியில் அமர்வது, பாலியல் விருந்தில் மட்டுமே! 

கல்விக் கழகங்களில் பால பாடமாக இருக்கும் பாலியல் வன்முறையில் சிக்கிய குட்டி ஆடுகள்தாம் வெட்டப்படுகின்றனவே தவிர, ஓநாய்கள் இன்னும் ஓலமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அரசு அலுவலகங்கள், பலரும் நடமாடுகின்ற இடமாக இருப்பதால், பாலியல் வன்முறைகளுக்கு வாய்ப்புகள் குறைவு. மேலும், பெண்பாலரின் நோக்கம் அறியாமல் வழிசல் விடும் ஆடவர் திலகங்கள் உரிய அவமானங்களை வாலாட்டியவர்களிடமே பெற்று விடுவதால், பாலியல் வன்முறை அரசு அலுவலகங்களில் ஒரு கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கிறது எனலாம். அரசு ஊழியர்கள் வாகனங்களில் பயணிக்கும்போதுதான், அவர்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்தக்கூடிய சம்பவங்கள் நேருகின்றன.
கலைத்துறையிலே தொன்றுதொட்டுக் கலப்பு கலாசாரம் உண்டு என்றாலும், அக்காலத்தில் அது பெரிதுப்படுத்தப்படவில்லை. காரணம், இணக்கம் உள்ளவர்களே கலப்பு கலாசாரத்தில் ஈடுபட்டதால், அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. பால் வியாபாரத்தில் தண்ணீர் கலப்பதை எவ்வாறு தடுக்க முடியாதோ, அது போல கலைத்துறையிலும் கலப்பு கலாசாரத்தைத் தவிர்க்க முடியாது. 

பாலியல் வன்முறை இன்று மத பீடங்களில் பாம்புபோல் படமெடுத்து ஆடுகின்றது. மத பீடத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை, மடாலயங்கள் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களைப் பாதுகாப்பதற்கே பெரிதும் முயலுகின்றன. அதனால் பாவமன்னிப்பு வேண்டி வருபவர்களே, பாவ மன்னிப்புத் தருகின்றவர்களுக்குப் பாவமன்னிப்புத் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. மதபீடங்களின் துவராடைகள் சில அப்பாவி ஆடுகளின் கழுத்தை நெரிப்பதால், பாலியல் வன்முறை, அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறது.
பாலியல் வன்முறை மற்ற துறைகளைக் காட்டிலும், அரசியல் கூடாரங்களிலும், அதிகார மையங்களிலும் ஏகோபித்து நடந்து கொண்டிருக்கிறது. சட்டம் அவர்களுடைய கரங்களிலே இருக்கின்ற காரணத்தால், பாலியல் வன்கொடுமைகளில் உச்சத்திற்கே அவர்களால் செல்ல முடிகிறது. உதாரணத்திற்கு 1970-களில் உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் முதல்வராக இருந்த ஒருவருடைய லீலையைச் சொல்லலாம் (மறைந்து விட்ட அவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை).

இரண்டு மாநிலங்களில் முதல்வராக இருந்த அவர், பின்னர் ஆந்திர மாநில ஆளுநரானபோதும் தம்முடைய பாலியல் பரிபாலனத்தை நிறுத்தவில்லை. அதனால், அவர் மேலதிகாரத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடைசியாக அவரிடத்து மரபணு சோதனைகளை நிகழ்த்தி, மருத்துவர்கள் நிரூபித்த பிறகுதான், பாவத்தின் சம்பளங்களைப் பெற்றுக் கொண்டார்.
காமம் வேட்டை நாய் போன்றது. அதற்குரிய இரையை அது பற்றுகின்ற வரையில் அதன் வேகம் அடங்காது. எனவேதான், தேசியக்கவி பாரதியார், "மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு' எனப் பாடினார். ரோம சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பதற்கு ஜுலியஸ் சீசர், ஆண்டனி, லிபிடஸ் ஆகிய மூன்று பெரும் தளபதிகளும் மூன்று திசைகளை நோக்கிப் புறப்பட்டார்கள். ஆனால், கிளியோபாட்ராவின் மேல் கொண்ட மோகத்தால் மூன்று பேரும், கிளியோபாட்ராவின் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள். அதனை ஷேக்ஸ்பியர், "ரோம சாம்ராஜ்ஜியத்தின் மூன்று பெரும் தூண்களாகிய மூவரும் ஒரு பெண்ணின் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்' என எழுதினார்.

1960-களில் இங்கிலாந்தில் ஹெரால்ட் மாக்மில்லன் என்பவர் பிரதமராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த புரொபியூமா, உலகப் பேரழகியும் உளவாளியுமான ஹெலன் கீலரிடம் கள்ளக்காதல் கொண்டிருந்தார். கீலர், வல்லரசுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களோடு உறவாடி, அந்த நாட்டுப் பாதுகாப்பு இரகசியங்களை உளவாய்ந்து, அடுத்த நாட்டுக்குச் சொல்லக்கூடியவள். புரொபியூமா - கீலர் பாலியல் உறவுகள், இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சிகளுக்குத் தெரிய வரவே, அவர்கள் அதனைக் காட்டி ஹெரால்ட் மாக்மில்லனின் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். 

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் உடைய இராவணன் ஒரு "கற்பின் கனலி'யின்மேல் கொண்ட காமத்தால், களப்பட்டான். அதனால், இறந்து கிடக்கின்ற இராவணனைப் பார்த்து, அவனுடைய இளவல் வீடணன், "உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா' என ஏசினான். இன்னோர் இளவலான கும்பகருணனும், "சிட்டர் செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்' என இராவணனை எச்சரித்தான். மற்றைய குற்றங்கள் ஒருவனுடைய நிகழ்காலப் பெருமைகளை மட்டுந்தான் அழிக்கும். ஆனால், காமம் ஒருவன் வாழ்நாள் முழுமையும் சேர்த்து வைத்த புகழையும் பெருமையையும் கொன்றுவிடும்.காமத்தின் கொடுமையையும் சீரழிவையும், சீத்தலைச் சாத்தனார் இயற்றிய "மணிமேகலை'யைப்போல், வேறு எந்த நூலும் எடுத்துச் சொல்லவில்லை எனலாம். சங்க காலத்திலும், காப்பிய காலத்திலும் பரத்தையர் ஒழுக்கத்திலும் சிற்றின்பத்திலும் மூழ்கிச் சீரழிந்த சமுதாயத்தைக் கண்டிப்பதற்காகவே, சாத்தனார் மாதவியையும் மணிமேகலையையும் துறவி ஆக்குகின்றார். ஆடவர் சமுதாயத்தின்மேல் கொண்ட ஆத்திரத்தின் காரணமாகவே இருவரையும் பெளத்த துறவிகள் ஆக்குகிறார். மேலும், இல்லற வாழ்வியலையே "தீத்தொழில்' எனப் பேசவும் செய்கிறார், சீத்தலைச் சாத்தனார்.

ஆடவர் கண்டால் அகலமுடியாத பேரழகையுடைய மணிமேகலையின் மேல் மையல் கொள்ளுகின்றான், அரசிளங்குமாரனாகிய உதயகுமாரன். அவள் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து செல்லுகின்றான். பல வழிகளில் அவனிடமிருந்து தப்பிக்கின்றாள் மணிமேகலை. அவனோ "மணந்தால் மணிமேகலை; அன்றேல் மரணதேவி' எனக் கூறிக்கொண்டு ஒருதலைக் காதலினாலேயே வெட்டுப்பட்டுச் சாகின்றான். 

மணிமேகலை துறவியானாலும், உதயகுமாரனுடைய நேசத்தை எண்ணியபொழுது, அவன் மேல் மணிமேகலைக்கு ஆசை பிறக்கின்றது. துறவியான பிறகும் உதயகுமாரன் மேல் மணிமேகலையின் நெஞ்சம் அலைபாய்வதை வைத்துச் சாத்தனார், "இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை' என்பார். இது ஒவ்வொரு ஆடவருடைய நெஞ்சிலும் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரி ஆகும்.
இன்றைக்குப் பாலாறாகப் பாலியல் வன்முறைகள் பெருக்கெடுத்ததற்கு, நம்மிடையே இராமகிருஷ்ணப் பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிகத் தலைவர்கள் இல்லாமல் போனமையும் ஒரு காரணமாகும். பரமஹம்சர் திருமணத்திற்குப் பிறகு சாரதாமணி அம்மையாரைப் பராசக்தியின் அம்சமாகவே பார்க்கத் தொடங்கியதுடன், அவரை வழிபடவும் ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் பேச்சில் விருப்புற்று வந்த நிவேதிதாவை, அவர் ஒரு சகோதரியாகவே பார்க்கத் தொடங்கினார். அமெரிக்கா சென்றபோதும் அங்குள்ள பெண்களை "சகோதரிகளே' என்றுதான் அழைத்தார்.

கல்விக்கூடங்கள் ஒரு காலத்தில், கலைக்கூடங்களாக இருந்தன. ஆசிரியர்களுக்கு ஒரு சுதர்மம் இருந்தது. இப்பொழுது ஊதியத்தை எண்ணியே ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்கள் அதிகமாகிப் போனதால், கல்விக்கூடங்கள் சர்க்கஸ் கொட்டகைகள் ஆகிவிட்டன.
காந்தியடிகள், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தியாகவுள்ளம் கொண்ட தலைவர்கள் இருந்ததால், இந்தத் தேசம் புண்ணிய பூமி ஆயிற்று. "இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தால்தான் திருமணம்' என வைராக்கியம் கொண்ட தலைவர்கள் பலர் வாழ்ந்தார்கள்.

இந்திய நாட்டில் பாலியல் வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால், குடும்பங்கள் கோயில்களாக மாற வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.கல்வி நிலையங்கள் கெளரவர்களின் கூடாரமாக மாறாமல், பாண்டவர்களின் புண்ணிய பூமியாக மாற வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் பாலியல் வியாபாரிகளின் ஆதிக்கத்திற்குக் கீழ் வராமல், இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும்.
பாலாறு வறண்டு கிடக்க, பாலியல் ஆறுகள் பெருகி ஓடும் அவலத்துக்கு யார் அணை கட்டுவது? சந்தைப் பொருளாதாரமும் நுகர்வோர் கலாசாரமும் நமது அடிப்படைப் பண்பாட்டு விழுமியங்களை அகற்றிவிட்டு, சிம்மாசனம் ஏறிவிட்டிருக்கின்றன. மேலை நாட்டு கலாசார மோகத்திலும் நாகரிகத்திலும் மயங்க முற்பட்டிருக்கிறோம். கண்களை விற்று சித்திரம் வாங்கி மகிழும் மனநிலையில் மாற்றம் ஏற்படாதவரை, வற்றிவிடாது பாலியல் ஆறுகள்.

கட்டுரையாளர்:பேராசிரியர் (ஓய்வு).

No comments:

Post a Comment

Surgeries save 20-year-old youth who swallowed razor after spat with father

Surgeries save 20-year-old youth who swallowed razor after spat with father TIMES NEWS NETWORK  28.12.2024 New Delhi : Doctors at a private ...