Wednesday, October 24, 2018

இரு மேதைகள்

Published : 12 Oct 2018 11:29 IST





திரை நடிப்பை மேலும் துலக்கிக் காட்டும் கண்ணாடி திரையிசை. மற்ற தேசங்களின் திரைப்படங்களில் இசை உண்டு. ஆனால் இசைப் பாடல்கள் நமது படங்களின் தனித்த அடையாளம். இனிய ஒலியின் வடிவில் காற்றில் கலந்திருக்கும் நமது சமூக வரலாற்றின் ஒருபகுதி அது. கதாபாத்திரத்தின் உணர்வுகளை இசைப்பாடல் எனும் வடிவத்தின் துணையோடு நடிகன் இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த மேடை அமைத்துத் தருகிறது திரையிசைப் பாடல்.

நடிப்புக்கு இலக்கணமாய்க் கொள்ளப்படும் ‘ நடிகர் திலகம்’ சிவாஜியின் திரைப்பயணத்தில் திரைப்பாடல்கள் வகிக்கும் இடம் மகத்தானது. குறிப்பாக நடிகர் திலகம் பங்கேற்ற படங்களுக்கு ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி வழங்கிய இசை, அந்த இருவரையும் அவரவர் துறைகளில் இருபெரும் மேதைகளாக மிளிரவைத்தது.

மெல்லிசை மன்னரின் கைவிரல்கள் போடும் நர்த்தனம், வார்த்தைகளில் அடங்கா மகத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, இவரின் பின்னணி இசை நடிகர் திலகத்தின் நடிப்புக்கு மிகப் பெரும் ஜீவநாடியாக விளங்கியது என்றால் மிகையில்லை. மெல்லிசை மன்னர் இசையமைத்த பாடல் காட்சிகளில் நடிகர் திலகம் தன் நடிப்பின் கொடியை நாட்டினார் என்றால், அவர் நடித்த காட்சிகளில் இவர் தன் பின்னணி இசைக்கொடியை நாட்டி, அவரது நடிப்புடன் போட்டியிட்டார் என்பது மிகையல்ல.

யாரை நம்பி நான் பொறந்தேன்

இந்த இணையின் பாடல் காட்சிகளாகட்டும், பின்னணி இசைக் கோவைகளாகட்டும் மனத்தின் ஆழத்துக்குச் சென்று உணர்வுகளுடன் உறவாடக்கூடியவை. 1968 அக்டோபர் 21-ல் வெளியாகி 2018 அக்டோபர் 21-ல் பொன்விழாக் காணும் ‘எங்க ஊர் ராஜா’ படத்தில் இடம்பெற்றது, ‘யாரை நம்பி நான் பொறந்தேன்’ பாடல். கவியரசர் கண்ணதாசனின் வரிகள், டி.எம்.சௌந்தர்ராஜனின் குரல் என்ற யுகக் கலைஞர்களின் கூட்டணியில் பிறந்து வலம் வரும்போது, திரையில் அவை நடிகர் திலகம் என்னும் மேதையுடைய நடிப்பின் ஆன்மாவோடு கலக்கும் பேறு பெறுகின்றன.

கொடிகட்டிப் பறந்த கொடை வள்ளல் விஜயரகுநாத சேதுபதி, காலப்போக்கில் தன் உடைமைகளை இழந்து, தன் பிள்ளைகளும் தன்னைத் தவிக்க விட்டுப் போய்விட்டபின் தனியாக வாழ்கிறார்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தன்னுடைய ரகுபதி பவனத்தை மீட்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. பாடுபட்டுப் பணத்தைச் சேர்க்கிறார் சேதுபதி. எல்லோரும் தன்னை விட்டுப்போனாலும் கவலையில்லை, தன்னால் தனியாய் வாழ முடியும், தன் காலம் வெல்லும், அப்போது அனைவரும் தன்னிடம் சரணடைவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்கிறார். இப்படிப்பட்ட காட்சியமைப்பில் அவருடைய மனநிலையைச் சொல்வதற்காக அமைக்கப்பட்ட பாடல்தான் ‘யாரை நம்பி நான் பொறந்தேன்’ பாடல்.

பாடலின் தொடக்கத்திலேயே அந்தக் கதாபாத்திரத்தை நிலைநிறுத்தி விடுகிறார் நடிகர் திலகம். நிமிர்ந்து நின்று மீசையை முறுக்கி வாசலை நோக்கி ‘வாங்கடா வாங்க’ என்று சொல்லும் அந்தத் தொடக்கமே அப்பாடல் காட்சியில் மனத்தை ஊன்றச் செய்து விடுகிறது. ‘என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க’ எனும்போது, அந்த மன உறுதியானது உடலுக்கும் வலுவைத் தருகிறது.

பல்லவி முடிந்து சரணம் தொடங்குதற்கு முந்தைய பின்னணி இசையில், வயலின், புல்லாங்குழல் கருவிகளின் மூலம் பதற்றமான நாட்களை சேதுபதி கழிப்பதைச் சித்தரித்திருக்கிறார் இசையமைப்பாளர். பதைபதைப்போடு காலண்டரைப் பார்க்கும்போது அந்த உணர்வை அப்படியே தன் முகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறார் சிவாஜி.

சரணம் தொடங்குகிறது

‘குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே...

பெட்டியிலே பணமில்லே பெத்த பிள்ளே சொந்தமில்லே...’

–எனும் வரிகளின்போது இரு கைகளையும் சேதுபதி அகல விரித்து தன் மார்போடு அடித்துக்கொள்ளும்போது பார்ப்போர் நெஞ்சம் கலங்கும். தலை, மேல் நோக்கி இருக்கிறது. கைகளும் மேலே நோக்கி பாய்கின்றன. என்னமோ இவரைத் தேடி அவர்கள் வருவார்கள் என்ற ஒரு அசட்டு நம்பிக்கையை இவரே உருவாக்கிக்கொண்டு, நீங்கள் வந்தால் சேர்க்க மாட்டேன் என்று அவர்களிடம் சொல்வதற்காகவே காத்திருப்பவர் போல் வாசலைப் பார்ப்பது, எந்த அளவுக்கு சேதுபதியின் உணர்வுகளை நடிகர் திலகம் தனக்குள் உருவகப்படுத்தி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை எடுத்துச் சொல்கிறது.


இப்போது அந்தப் பதற்றத்தைக் காற்றும் சேர்த்து அதிகரிக்கிறது. இதை அந்தத் தோல் இசைக் கருவியின் மூலம் கொண்டு வருகிறார் மெல்லிசை மன்னர். சேதுபதிக்கோ கேட்கவே வேண்டாம். அவர் கோபம் காற்றின் மீதே திரும்புகிறது. மனிதர்களின் உள்ளத்தைக் காற்றும் அறிகிறது போலும். அவர் “உஸ்…” என்று எச்சரிக்கை விடுத்தவுடன் காற்றின் ஓசையும் அப்படியே அடங்கி விடுகிறது.

காலச்சக்கரம் வேகமாகச் சுழல்கிறது. இப்போது சேதுபதிக்கு தெளிவு பிறக்கிறது. மனதை தைரியப்படுத்திக்கொண்டு விடுகிறார். நிமிர்ந்து நிற்கிறார். இத்தனை நேரம் சற்றே சாதாரண நிலையில் ஒலித்த குரலை இப்போது உயர்த்தி பாடவைக்கிறார் இசையமைப்பாளர்.

அந்தத் துணிவு என்ற வார்த்தை வரும்போது அதை இசையிலேயே கொண்டு வரவேண்டும் என்று தீர்மானித்து, டி.எம்.எஸ்.ஸைக் குரலை உயர்த்திப் பாடவைத்து தான் நினைத்ததை சொல்லி விடுகிறார் மன்னர். ஒவ்வொரு உணர்வும் சேதுபதியாக வாழ்ந்து காட்டியுள்ள நடிகர் திலகத்தின் முகத்தில் அப்படியே அவைப் பிரதிபலிப் பதைக் காணலாம்.

ஒரு மூன்று நிமிட பாடல் காட்சியில் ஒரு காவியத்தை அரங்கேற்றிவிட்ட இந்த இரு மேதைகளை எப்படிப் பாராட்டுவது.

கதாபாத்திரத்தின் மனநிலையைத் துல்லியமாக இசையில் கொண்டு வந்த மெல்லிசை மன்னரையா, தன் நடிப்பில் கொண்டுவந்த நடிகர் திலகத்தையா, இவர்களுக்கு இவ்வளவு வேலை கொடுத்த கவியரசரையா, தன் குரலால் கோட்டை கட்டிய டி.எம்.சௌந்தர்ராஜனையா? சிவாஜி - எம்.எஸ்.வி. என்ற இந்த இரு மேதைகளின் படைப்பில் இது போல் இன்னும் எத்தனையோ காவியங்கள் உள்ளன. ஒவ்வொன்றுமே விரிவான ஆய்வுக்குள் நம்மை மூழ்கித் திளைக்க வைப்பவை.

- வீயார்
தொடர்புக்கு: beeveeyaar@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024