Tuesday, October 30, 2018


நாளை முதல் சிவகங்கையில் மழை

Added : அக் 30, 2018 00:58

சென்னை, அக்.30-தென்மேற்கு பருவமழை அக்., 21ல், முடிவுக்கு வந்த நிலையில் அக்., 26 முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசத் துவங்கியது. ஆனாலும் மழை தீவிரம் அடையவில்லை. தமிழகத்தின் சில மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் வகையில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று வலுப்பெற்று பருவமழை தீவிரம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் 'வரும், 1 முதல், 3ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது' என ஏற்கனவே கணித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்திய வானிலை ஆய்வு மையமும் நேற்று மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை முதல் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை, 3ம் தேதி வரை நீடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 1ம் தேதி மிக கனமழையும் பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய கணிப்பிலும் 11 செ.மீ., வரை மழை பெய்யலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024