Monday, October 1, 2018

மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் பஸ் மாறி ஏறிச்சென்ற கண்டக்டர் நடிகர் வடிவேலு பட நகைச்சுவை காட்சி போல் ருசிகரம்






சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் ஆத்தூரில் பஸ் மாறி ஏறிச்சென்ற அரசு பஸ் கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: அக்டோபர் 01, 2018 04:45 AM

ஆத்தூர்,

சிதம்பரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் ஆத்தூரில் பஸ் மாறி ஏறிச்சென்ற அரசு பஸ் கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் வடிவேலு நகைச்சுவை காட்சி

ஏ.பி.சி.டி. என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பஸ் கண்டக்டராக நடித்த ஒரு நகைச்சுவை காட்சி வரும். அதில், ஒரே மாதிரியாக இருக்கும் 2 அரசு பஸ்களில் ஒன்றில் ஏறி பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும்போது, மற்றொரு நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவிடம் தகராறு ஏற்பட்டு வடிவேலுவை அவர் விரட்டுவது போன்ற காட்சி இருக்கும். சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த நகைச்சுவை காட்சி போன்ற ருசிகர சம்பவம் சேலம் மாவட்டம், ஆத்தூரில் நேற்று நடந்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தினமும் காலை 6.25 மற்றும் 6.40 மணிக்கு 2 அரசு பஸ்கள் சேலத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட இந்த இரு அரசு பஸ்களும், சேலம் வரும் வழியில் ஆத்தூருக்கு காலை 9.15 மற்றும் 9.25 மணிக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

அதுபோல் நேற்று முன்தினம் காலையில் சிதம்பரத்தில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஆத்தூருக்கு காலை 9.15 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர். பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர், அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார்.

தனியார் பஸ்சில் ஏறினார்

சிறிது நேரத்தில் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம்-சேலம் என்று போர்டு வைத்திருந்த அரசு பஸ் வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த கண்டக்டர், தான் இல்லாமல் பஸ்சை டிரைவர் ஓட்டிச்செல்வதாக கருதி அந்த பஸ்சை பிடிக்க ஓடினார். அதற்குள் அந்த பஸ் அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறிய அந்த கண்டக்டர், முன்பு செல்லும் அரசு பஸ்சின் கண்டக்டர் தான் என்றும், அந்த பஸ்சை பிடிக்குமாறும் கூறி உள்ளார். தனியார் பஸ் டிரைவரும் வேகமாக சென்று பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு பஸ்சை முந்திச்சென்று நிறுத்தினார்.

அதிர்ச்சி அடைந்த கண்டக்டர்

அந்த பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர் உடனடியாக சேலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி டிரைவரிடம் பஸ்சை நிறுத்தாமல் சென்றது குறித்து கேட்க முயன்றார். அப்போது அதில் இருந்த டிரைவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அந்த கண்டக்டர்.

அவர் பணியில் இருந்தது 9.15 மணிக்கு ஆத்தூர் வந்த பஸ். அவர் விரட்டிப்பிடித்து ஏறிய பஸ் சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு 9.25 மணிக்கு வந்த பஸ். தன் தவறை உணர்ந்த அந்த கண்டக்டர் செய்வதறியாது விழித்தார்.

சிதம்பரத்தில் இருந்து 2-வதாக புறப்பட்ட பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் அந்த பஸ் ஆத்தூரில் அதிக நேரம் நிற்காமல் 9.15 மணிக்கு பஸ் புறப்படுவதற்கு முன்பாக புறப்பட்டதால் அவருக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது பின்னர் தெரியவந்தது. அதன்பிறகு அந்த கண்டக்டர், தான் வந்த பஸ் ஆத்தூரில் நிற்கும் விவரம் தெரிந்து அங்கிருந்து வேறு ஒரு பஸ்சில் மீண்டும் ஆத்தூருக்கு புறப்பட்டு வந்தார்.

வேறு பஸ்சில் பயணிகள்

இதற்கிடையே ஆத்தூர் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் 9.15 மணி பஸ் நின்றதால், அதில் இருந்த 28 பயணிகளும் பரிதவிப்புக்குள்ளானார்கள். மேலும் அவர்கள் ஆத்தூர் பயணிகள் நேர காப்பாளரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த பஸ் டிரைவரும், கண்டக்டர் வேலைக்கு வந்து ஓராண்டே ஆகும் புதியவர் என்பதால் அவரின் செல்போன் எண் கையில் இல்லை என்றதுடன், அவர் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடையில் சாப்பிட்டு கொண்டு இருக்கலாம் என்றும் கூறி தேடிச்சென்றார்.

பயணிகளின் கோரிக்கை காரணமாக, அவர்கள் ஆத்தூரில் இருந்து சேலம் செல்லும் மற்றொரு அரசு பஸ்சில் 28 பயணிகளும் ஏற்றி சேலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு அரை மணி நேரம் கழித்து வந்து சேர்ந்த பஸ் கண்டக்டரிடம் சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024