கடுமையான பிதுர்தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஹோமம்!
Published on : 29th September 2018 11:27 AM
இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயச் சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் அமாவாசை வழிபாடு செய்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருவதாக ஐதீகம்.
ஒரு சிலர் வெளிநாடுகளில் சென்று வேலை செய்யும் நிலை ஏற்படும் பட்சத்தில், தன் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் என்று எதுவுமே கொடுக்காமல் அப்படியே விட்டுவிடுவர். அதனால், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், நாளடைவில் அது பிதுர் தோஷமாகவும், கால சர்ப்ப தோஷமாகவும் மாறி அவர்களது சந்ததியினரை பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்திவிடும்.
இதனால், வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்படுதல், திருமணத்தடை, உத்தியோக தடை, குழந்தைபேறு தாமதமாகுதல், விபத்து நேருதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழக்கூடும். மிகக் கடுமையான பிதுர் தோஷத்தால் அந்தக் குடும்பமே பாதிக்கப்படும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில், அவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால் தான் செய்ய வேண்டும்.
திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும், எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தம். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும். திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும். இந்தச் சம்பவம் நிகழ்ந்தால் தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிரவதிப்பதாக அர்த்தம்.
வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்து பித்ருக்களின் ஆசீர்வாதம் பெறலாம். கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம சேத்திரம் என்ற தலம் உள்ளது. அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா, ராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment