தலையங்கம்
விமானப்பயணத்தை எளிதாக்குவோம்
விண்ணில் பறப்பது என்பது கண்ணுக்கு மட்டும் எட்டிய கனவாக இருந்த நிலைமாறி, இப்போது கைக்கு எட்டிய நனவாக ஆகிவிட்டது.
செப்டம்பர் 26 2018, 04:00
விண்ணில் பறப்பது என்பது கண்ணுக்கு மட்டும் எட்டிய கனவாக இருந்த நிலைமாறி, இப்போது கைக்கு எட்டிய நனவாக ஆகிவிட்டது. ஒருகாலத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் பார்க்கப்போகும் இடங்களில் ஒன்று விமான நிலையங்கள் என்றநிலை இருந்தது. அப்போதெல்லாம் வானில் பறக்கும் விமானங்களை அண்ணாந்து பார்த்த சிறுவர்கள் இன்று விமானத்தில் ஏறி பயணம்செய்வதற்கு காலம் கைகொடுத்திருக்கிறது. எளியவர்களை அது எட்டியிருப்பதும், பலருடைய பொருளாதார நிலைமை மேம்பட்டிருப்பதும் பயணம் செய்யவேண்டிய கட்டாயத்தில் பறந்துவிரிந்த உலகம் தினமும் சுருங்கி வருவதுமே இன்று ஏராளமானவர்கள் விமானப்பயணத்தை நாடுவதற்கு முக்கிய காரணங்களாகும்.
ஒருகாலத்தில் பயணத்தை தூரம் நிர்ணயித்தது. ஆனால் இப்போது நேரம் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களினால் தான், இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக இருந்த சிக்கிமில் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் விமானநிலையம் இல்லாத நிலைமாறி, நேற்று முன்தினம் முதல்முறையாக அங்குள்ள பாக்யாங் நகரில் அமைக்கப்பட்டுள்ள முதல் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். இந்தியாவின் 100–வது விமானநிலையமான இந்த விமானநிலையம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதிலிருந்து 60 கி.மீ. தூரத்தில்தான் இந்தியா–சீனா எல்லை இருக்கிறது. 4,590 அடி உயர மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.605 கோடி செலவிலான இந்த விமானநிலையம் கட்டும் திட்டம் 2000–ம் ஆண்டில் உருவாகியது. 2002–ல் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் அடிக்கல் நாட்டினார். 2012–ல்தான் கட்டுமானப்பணிகள் தொடங்கின. இந்த விமானநிலையம் கட்டியதின்மூலம் சிக்கிம் மாநிலத்திற்கு செல்லும் பயணநேரம் வெகுவாக குறைந்துள்ளது. இப்போது தொடங்கப்பட்டுள்ள விமான சேவைமூலம் கொல்கத்தாவிலிருந்து பாக்யாங் விமானநிலையத்திற்கு 1¼ மணிநேரத்தில் சென்றுவிட்டு, அங்கிருந்து ஒரு மணிநேரத்தில் சாலைமார்க்கமாக ‘காங்டாக்’ நகருக்கு சென்றுவிடலாம்.
இந்த விழாவிற்காக விமானத்தில் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, விமானத்தில் இருந்தே சிக்கிம் மாநிலத்தின் எழில்மிகு தோற்றத்தை படம் எடுத்திருப்பது பரவசமூட்டுகிறது. பயணிகள் போக்குவரத்திற்கு ஒருபக்கம் பயனுள்ளதாக இருந்தாலும், மறுபக்கம் இந்தியா–சீனா எல்லைக்கு அருகில் இருப்பதால் பாதுகாப்பு பணிகளுக்காகவும் இந்த விமானநிலையத்தை பயன்படுத்தலாம். பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது இந்தியாவில் 65 விமான நிலையங்கள்தான் இருந்தன. அடுத்த 4 ஆண்டுகளில் 35 விமானநிலையங்களை கட்டிமுடித்து, பிரதமர் மகிழ்ச்சியுடன் இந்தியா சதம் அடித்துவிட்டது என்று கூறியதுபோல, இன்று 100 விமானநிலையங்கள் நாட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக பெருமிதம் அளிக்கிறது. இப்போதெல்லாம் விமானபயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மாதாமாதம் உயர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் உள்நாட்டில் விமானபயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் உயர்ந்து, ஒருகோடியே 13 லட்சத்து 50 ஆயிரம்பேர் விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்கள். பெருகிவரும் தேவையை கருத்தில் கொண்டு, எங்கெங்கு சிறிய விமானநிலையங்கள் அமைக்கமுடியுமோ அங்கெல்லாம் அமைக்க மத்திய அரசாங்கம் முன்வரவேண்டும். விமான கட்டணங்களையும் இன்னும் குறைக்கமுடியுமா?, சாதாரண நடுத்தர மக்களும் பயன்படுத்தும் அளவிற்கு டிக்கெட் கட்டணம் இருக்குமா? என்பதை பரிசீலிக்கவேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவ பயன்பட்டிற்காக கட்டப்பட்டு, இப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் விமானநிலையங்களை பயணிகள் போக்குவரத்திற்காக மாற்றமுடியுமா? என்பதையும் அரசு முயற்சிக்கவேண்டும்.
No comments:
Post a Comment