Wednesday, September 26, 2018

3 நாள் குழந்தையை 7 முறை கொட்டிய விஷத் தேள்: சுவாசம் நின்ற பிறகு உயிர் பிழைத்த அதிசயம்

Published : 25 Sep 2018 13:03 IST



தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது | 3 வாரக் குழந்தையாக சோபியா.

பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை, கொடிய விஷத் தேள் 7 முறை கொட்டியதால், ஆபத்தான கட்டத்துக்குச் சென்றது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் பிரேசில் நாட்டில் நிகழ்ந்துள்ளது.

பச்சிளங்குழந்தை மரியா சோபியாவுக்கு டயப்பர் மாற்றும்போது அதில் ஒளிந்திருந்த விஷத் தேள், குழந்தையை 7 முறை கொட்டியுள்ளது.

இதுகுறித்த தனது கடினமான நேரங்களைப் பகிர்ந்துகொள்கிறார் குழந்தையின் தாய் ஃபெர்னாண்டா.

''செப்டம்பர் 6-ம் தேதி என்னுடைய குழந்தையைக் குளிப்பாட்டி, புதிய டயப்பரை அணிவித்தேன். 10 நிமிடத்திலேயே சோபியா சோர்வாக இருப்பதை உணர்ந்தேன். பால் அருந்துவதை அவள் மறுத்துவிட்டாள். மூச்சு விடவும் சிரமப்பட்டாள். அவளுக்கு குமட்டல் ஏற்பட்டிருக்குமோ என்று யோசித்தேன்.

ஆனால் விஷத் தேள் கொடிய முறையில் 7 தடவை என் மகளைக் கடித்திருக்கும் என்று கனவில்கூட எண்ணிப் பார்க்கவில்லை.


சோபியாவுடன் தாய் ஃபெர்னாண்டா.

அவளை உடனடியாக பாஹியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவளுக்கு இதயத்துடிப்பு தாறுமாறாக இருந்தது. வாயில் இருந்து உமிழ்நீர் வடிந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அவளின் மூச்சே நின்றுவிட்டது.

மருத்துவமனையில் உடனடியாக மாற்று மருந்துகள் (antidote) கொடுக்கப்பட்டன. மூன்று நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோபியா இருந்தாள். இப்போது முழுமையாகக் குணமடைந்துவிட்டாள்.



சோபியாவைக் கொட்டிய தேள்.

2 முதல் 5 வயதுக் குழந்தைகள் சிலர் ஒருமுறை தேள் கடித்ததற்கே உயிரிழந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சோபியா காப்பாற்றப்பட்டு விட்டாள். அவளைக் கடவுள் எனக்குத் தந்த பரிசாகத்தான் பார்க்கிறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் பாஹியா மாகாணத்தில் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து 15,082 பேர் தேள் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை பிரிட்டனைச் சேர்ந்த 'தி சன்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024