Saturday, September 29, 2018

மாநில செய்திகள்

தகாத உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பு நியாயமானது’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி




தகாத உறவு குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு நியாயமானது என கமல்ஹாசன் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 29, 2018 05:15 AM

சென்னை,

நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் ஊரெங்கும் தண்டோரா போட்டு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் அரசு அதை சரிவர செய்யவில்லை. மக்கள் நீதி மய்யம் அதை செய்ய இருக்கிறது. கிராமத்தை பலப்படுத்த வேண்டும். கிராமமே தேசியம் என்பதை மக்கள் நீதி மய்யம் நம்புகிறது. கிராமசபை கூட்டம் எங்கும் சரிவர நடப்பதில்லை. மக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து.

அதன்படி அக்டோபர் 2-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். இதை கடமையாக ஏற்றுக்கொண்டு அவர்கள் பங்கேற்க வேண்டும்.

நாங்கள் கண்டிப்பாக அங்கு இருப்போம். மக்கள் மனதை புரிந்து கொள்வதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் அங்கு எடுக்கப்படும் தீர்மானத்தின் நகல் எங்கள் கையெழுத்துடன் தர மறுக்கிறார்கள். அதை அவர்கள் தர வேண்டும். இல்லையென்றால் போராடி பெறுவோம். மாநில சுயாட்சி கேட்டது நம் தமிழகம், அதன் மீட்சியாக நான் கிராம சுயாட்சி கேட்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-மக்கள் நீதி மய்யம் 3 அமாவாசைக்குள் காணாமல் போய் விடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறாரே?

பதில்:-அமாவாசை பற்றி பேசுபவர்கள், அந்த கட்சியில் இருப்பவர்கள் நிஜமான சந்திரனை பார்த்ததில்லை. அவர்கள் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள்.

கேள்வி:-தகாத உறவு குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியிருகிறதே?

பதில்:-நான் முன்னோக்கி செல்ல ஆசைப்படுகிறேன். தீர்ப்பு நியாயம் தான். புராணங்களில் கூட இந்த அளவு திறந்த மனது நமக்கு இருந்திருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில், ஆண், பெண் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக தான் இருக்கிறது.

கேள்வி:-இது கலாசார சீரழிவு இல்லையா?, பண்பாட்டுக்கு பாதிப்பு இல்லையா?


பதில்:-கலாசாரம் என்பது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே தான் இருக்கும். இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். இதை பற்றி விவாதிக்க, இதுவல்ல மேடை.

கேள்வி:-மக்கள் நீதி மய்யத்தில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறதே?

பதில்:-மக்கள் நீதி மய்யம் வளர்ந்திருக்கிறதா? என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? என்பது எனக்கு தெரியாது. எவ்வளவு எண்ணிக்கை என்பது பிறகு உங்களுக்கு சொல்கிறேன்.

கேள்வி:-எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா?

பதில்:- இல்லை.

கேள்வி:-சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு வந்துள்ளதே?

பதில்:-விருப்பம் இருப்பவர்கள் கோவிலுக்கு செல்லலாம். ஆண், பெண் அனைவரும் சமம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக, மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கிராமசபை கூட்டம் தொடர்பாக தண்டோரா அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிராமிய கலைஞர் தண்டோரா அடித்து, கிராம சபை கூட்ட அறிவிப்பை உரக்க கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024