வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு சான்றிதழ் வழங்க ஐகோர்ட் நிபந்தனை
Added : செப் 29, 2018 01:15
'தகுதி தேர்வில், ௮௦ சதவீத மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்களுக்கு, வெளிநாடுகளில் மருத்துவ படிப்பில் சேர, தகுதி சான்றிதழ் வழங்க கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்த, தாமரை செல்வன் என்பவர், தமிழகத்தில் மருத்துவ பயிற்சி பெற, பதிவு சான்றிதழ் வழங்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.விண்ணப்பத்தின் மீது, இரண்டு வாரங்களில் முடிவெடுக்கும்படி, மருத்துவ கவுன்சிலுக்கு, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:தரமான மருத்துவ சேவை வழங்கும் தகுதியை, டாக்டர்கள் பெற்றிருக்க வேண்டும். தகுதியான, திறமையான டாக்டர்கள் கிடைக்க வேண்டும் என்றால், மருத்துவ கல்லுாரிகளில், தகுதியானவர்கள் சேர்க்கப்பட வேண்டும். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்த்தால், நாட்டின் ஆரோக்கியத்துக்கே ஆபத்து ஏற்பட்டு விடும். இதனால், தகுதி மட்டுமே, மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கு, அடிப்படையாக இருக்க வேண்டும்.'நீட்' தேர்வு வருவதற்கு முன், தகுதி தேர்வில், ௯௫ சதவீத மதிப்பெண்ணுக்கும் கூடுதலாக பெற்றவர்களுக்கும், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை.
நீட் தேர்வு வந்த பின், ௯௦ சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கும், இடம் கிடைக்கவில்லை.அப்படி இருக்கும் போது, வெளிநாட்டு மருத்துவ கல்லுாரிகளில் சேர, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக, ௫௦ சதவீதத்தை, மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் நிர்ணயித்துள்ளன. இதை, மாற்றி அமைக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்ணாக, ௮௦ சதவீதம் நிர்ணயிக்க வேண்டும். இந்த விஷயத்தில், மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, தகுதி தேர்வில், ௮௦ சதவீத மதிப்பெண்ணுக்கும் குறைவாக எடுத்தவர்களுக்கு, வெளிநாட்டு மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கான, தகுதி சான்றிதழை வழங்க, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்
No comments:
Post a Comment