பி.டி.எஸ்., கவுன்சிலிங் வரும் 30 வரை அனுமதி
Added : செப் 27, 2018 22:48
சென்னை, நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஏதுவாக, வரும், 30ம் தேதி வரை கவுன்சிலிங் நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் பல் மருத்துவ கல்லுாரிகள், மனுக்கள் தாக்கல் செய்தன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் கோரியபடி கவுன்சிலிங் நடத்த, அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், 330 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. சென்னை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன்படி, மருத்துவ கவுன்சிலிங்கில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தகுந்த சான்றிதழ்களுடன், இன்று காலை, 11:00 மணியளவில், கீழ்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும்.மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து, இடங்கள் கிடைக்காதவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை கைவிட்டோர் என, அனைவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கை, நாளை காலை, 11:00 மணியளவில், கீழ்பாக்கம் மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இன்று நேரில் வர முடியாதவர்களும், சான்றிதழ்களுடன், நாளை நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். நீட் தேர்வில், பொது பிரிவினர், 119 மதிப்பெண்ணிற்கு குறையாமலும், இதர வகுப்பினரில், 96 மதிப்பெண்ணிற்கு குறையாமலும் உள்ளோர், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment