Friday, September 28, 2018

தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு




சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வெளியாகிறது.

பதிவு: செப்டம்பர் 28, 2018 06:18 AM

புதுடெல்லி,

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர்.

இந்த கேள்விகள் குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்து, அரசியல் சாசன அமர்வுக்கு மனுக்களை நீதிபதிகள் பரிந்துரை செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடத்தியது.

தையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனர். இதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வெள்ளிக்கிழமை (செப்.28) வெளியிடவுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024