Wednesday, September 26, 2018

தேசிய செய்திகள்

ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு



ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.

பதிவு: செப்டம்பர் 26, 2018 05:00 AM
புதுடெல்லி,

ஆதாருக்கு எதிரான வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றை பகிர்வது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்தது.

அந்த விவகாரத்தை தனியாக விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிமனித சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் கருவிழி உள்ளிட்டவற்றை பகிர்வது தனிநபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலா? என்பது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். அதன் அடிப்படையில் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசை அனுமதிப்பதா? இல்லையா? என்று முடிவு செய்யலாம் என்றும் 9 நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

பின்னர் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

வாரம் 3 நாள் விசாரணை என்ற அடிப்படையில் 38 நாட்கள் தொடர் விசாரணை நடந்தது. கடந்த மே மாதம் விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர்.

அடுத்த வாரம் தலைமை நீதிபதி ஓய்வுபெற உள்ள நிலையில், ஆதார் கட்டாயமா? இல்லையா? என்ற இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024