Sunday, September 30, 2018

சிறப்புக் கட்டுரைகள்

தனிநபர் கடனும், தங்க நகை கடனும்







நிதி நெருக்கடியின்போது, திடீர் பொருளாதார நெருக்கடியின்போது நமக்கு உடனே நினைவில் வருபவை, கடன்கள். அதிலும் தனிநபர் கடன், தங்க நகை கடன் போன்றவை உடனடியாகக் கைகொடுப்பவை.

பதிவு: செப்டம்பர் 29, 2018 11:56 AM
தனிநபர் கடனையும் தங்க நகை கடனையும் ஒப்பிட்டால் எதைப் பெறுவது எளிதானது, அதிக அனுகூலம் மிக்கது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்...

தனிநபர் கடன், தங்க நகை கடன் இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவிலான வட்டி விகிதம்தான். தங்க கடன் பொதுவாக 9.6 முதல் 24 சதவீதம் இடையிலான வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது. தனிநபர் கடன் 10.99 முதல் அதிகபட்சம் 18 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

தங்க கடன் அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை அளிக்கப்படும் நிலையில், தனிநபர் கடன் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. உடனடியாகப் பணம் தேவைப்படும்போது தங்க கடனே எளிமையாகக் கிடைக்கும். தங்க கடனை 1000 ரூபாய் முதல் பெற முடியும். ஆனால் தனிநபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது 5000 ரூபாயை கடனாகப் பெற வேண்டும்.

தங்க கடன் வாங்கும்போது அடமானம் வைக்கும் தங்க நகையே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பெரியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் இதுவும் குறிப்பிட்ட அளவிலான தொகை வரை கடன் பெறும்போது மட்டுமே ஆகும். அதிக மதிப்புடைய கடன் பெறும்போது கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மறுபக்கம், தனிநபர் கடனுக்குக் கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதம் மற்றும் கடனைச் செலுத்தும் கால அளவு மாறும். கடன் பெற முயலும்போது குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் விண்ணப்பம் ரத்தாக வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால், வட்டி விகிதம் உயரும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளபோது வங்கிகளிடம் வட்டி விகிதம் போன்றவை தொடர்பாக எந்தப் பேரமும் செய்ய முடியாது.

தங்க நகை கடனுக்கு அடையாளம் மற்றும் முகவரிச் சான்றை சமர்ப்பித்தால் போதும். உடனே கடன் கிடைக்கும். இதுவே தனிநபர் கடன் என்றால் முகவரி மற்றும் அடையாளச் சான்று, வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவைச் சமர்ப்பிக்க வேண்டும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதை திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள். வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனிநபர் கடன் வாங்கும் போது கிடைக்காது.

தங்க நகை கடனை ஓராண்டு காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருவாய் மற்றும் மாத தவணை செலுத்துக்கூடிய திறனைப் பொறுத்து கடனைப் பெறலாம்.

தங்க நகை அடமான கடன் பெறும்போது தங்கத்தை நேரடியாக வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பைக் கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். எனவே, நீங்கள் விரும்பும் வங்கி நிறுவனத்தின் கிளை உங்கள் அருகில் இல்லை என்றால் சிரமம் ஏற்படும்.

ஆனால் இன்றைக்கு, வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலம் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து வங்கி அலுவலர்களை வீட்டுக்கு வரவைத்து கடனைப் பெற முடியும்.

இவையெல்லாம், தனிநபர் கடன், தங்க நகை கடன் குறித்த ஒப்பீட்டு விவரங்கள். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் கடனைப் பெற விரும்பு பவர்கள்தான்.

கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள, தங்கம் வைத்துள்ளவர்கள் சில மணி நேரங்களில் கடன் வேண்டும் என்றால் தங்க நகை கடனை தேர்வு செய்யலாம். அதுவே கிரெடிட் ஸ்கோர் அதிகமாக வைத்திருப்பதுடன், கடனைச் செலுத்துவதற்கான கால அளவு 3 வருடத்துக்கும் அதிகமாக வேண்டும் என்பவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...