Wednesday, September 26, 2018

மாநில செய்திகள்

ரஜினிகாந்துடன் புதிய நீதிக்கட்சி இணைந்து பயணிக்கும் ஏ.சி.சண்முகம் பேட்டி



ரஜினிகாந்த் கட்சி தொடங்கியதும், புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

பதிவு: செப்டம்பர் 26, 2018 04:24 AM
சென்னை,

புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் நேற்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் கண் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கினார்.

புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் ராணிசீதை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை கவர்னர் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நூற்றாண்டு நினைவாக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவேண்டும். முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதிய நீதிக்கட்சி தற்போதுவரை பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வரும்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதிக்கு பிறகு சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை. எல்லோரையும் மதிக்கக்கூடியவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கியதும் புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.சி.சண்முகம் பிறந்தநாளையொட்டி அமைச்சர் கே.பாண்டியராஜன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024