Wednesday, September 26, 2018

மாவட்ட செய்திகள்

ரூ.50-க்கு நிரப்பி விட்டு ரூ.250 வசூல்: பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாகன ஓட்டிகள் முற்றுகை



சேலத்தில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி விட்டு 250 ரூபாயை வசூலித்ததால், பெட்ரோல் விற்பனை நிலையத்தை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: செப்டம்பர் 26, 2018 04:15 AM
சேலம்,

சேலம் 4 ரோடு அருகே ராமகிருஷ்ணா சாலையில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நேற்று காலை வின்சென்ட் பிள்ளையார் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் (வயது 66) என்பவர், தனது ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார். அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் ரூ.50-க்கு பெட்ரோல் நிரப்புமாறு 500 ரூபாயை கொடுத்தார்.

அப்போது பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் ரூ.250 மட்டும் மீதியை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனபால் அந்த ஊழியரிடம் ரூ.50-க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, 200 ரூபாயை ஏமாற்றுகிறாய் என சத்தம் போட்டார்.

இதைகேட்ட ஊழியர் ரூ.250-க்கு தான் பெட்ரோல் நிரப்பியதாக கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த தனபால் தனது வண்டியில் இருந்த பெட்ரோலை கேனில் நிரப்பி பார்த்தார் அதில் ரூ.50-க்கு உரிய பெட்ரோல் மட்டும் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நின்ற வாகன ஓட்டிகள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டனர். பின்னர் தனபால் மற்றும் அங்கு நின்ற வாகன ஓட்டிகள் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து வாகன ஓட்டிகளும், தனபாலும், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் நேரில் வர வேண்டும். அப்போது தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர். இதையறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்தவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் தனபால் ஸ்கூட்டருக்கு ரூ.50-க்கும் மட்டுமே பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது. இதையடுத்து மீதமுள்ள தொகையை தனபாலிடம் பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகத்தினர் திருப்பி கொடுத்தனர். இதேபோல் அங்குள்ள புகார் புத்தகத்தில் இது தொடர்பாக தனபால் தனது புகாரை பதிவுசெய்தார்.

இந்த முற்றுகை போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, ‘சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இதுபோன்று பணத்தை ஏமாற்றி வருகிறார்கள். ரூ.100 கொடுத்து பெட்ரோல் போடச்சொன்னால் ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் லிட்டர் அளவு வேறு வேறு உள்ளது. இதுகுறித்து அங்கிருக்கும் ஊழியர்களிடம் கேட்டால் நாங்கள் நிரப்பும் பெட்ரோல் அளவு சரிதான் என கூறுகிறார்கள். எனவே பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு பெட்ரோல் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...