13.48 கோடி முகக்கவசம் ரேஷன் கடைகளில் இலவசம்
Updated : ஜூன் 11, 2020 05:57 | Added : ஜூன் 11, 2020 04:52
சென்னை: தமிழகத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இலவசமாக முகக்கவசம் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, 13.48 கோடி முகக்கவசம் கொள்முதல் செய்ய, விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், துணியில் தயாரிக்கப்பட்ட, முகக்கவசங்களை இலவசமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 2.08 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில், 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு துணியில் தயாரிக்கப்பட்ட, தலா இரண்டு முகக்கவசங்கள் வீதம் வழங்க, 13.48 கோடி முகக்கவசங்கள் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக, முகக்கவசம் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில், விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு உறுப்பினர்களாக, பேரிடர் மேலாண்மை இயக்குனர், பொது சுகாதாரம் தடுப்பு மருந்து இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண் இயக்குனர், நிதித்துறை துணைச் செயலர்கள், வருவாய் நிர்வாக ஆணைய தலைமை கணக்கு அலுவலர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment