'ஓட்டல்களில் வியாபாரம் இல்லை': நிபந்தனைகளை தளர்த்த கோரிக்கை
Updated : ஜூன் 10, 2020 23:15 | Added : ஜூன் 10, 2020 22:02
சென்னை,: ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட, 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளித்தும், வியாபாரம் இல்லாததால், நிபந்தனைகளை தளர்த்தும்படி, தமிழக அரசுக்கு, ஓட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஏப்ரலில் ஓட்டல்கள் மூடப்பட்டன. மே மாதம், ஓட்டல்களில், 'பார்சல்' மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டது. அதனால், அனைத்து ஓட்டல்களும் செயல்படவில்லை. மேலும், பார்சல் வியாபாரமும், 10 சதவீதத்திற்கு கீழ் தான் இருந்தது. இம்மாதம், 8ம் தேதி முதல், ஓட்டல்களில், வாடிக்கையாளர்கள் அமர்ந்து, சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க, 'காலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை செயல்பட வேண்டும். 'ஒரே நேரத்தில், மொத்த இருக்கையில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்'மேஜை, நாற்காலிகளை கிருமி நாசினியால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு, மூன்று நாட்களான நிலையிலும், வியாபாரம் இல்லாததால், நிபந்தனைகளை தளர்த்தும்படி, தமிழக அரசுக்கு, ஓட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக ஓட்டல்கள் சங்க தலைவர், வெங்கடசுப்பு கூறியதாவது:ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பார்சலின் போது இருந்ததை விட, தற்போது, கூடுதலாக,- 3 சதவீதம் தான் வியாபாரம் நடக்கிறது.
அதேசமயம், துாய்மை பணிகளை மேற்கொள்வதால், 10 சதவீதம் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.எனவே, ஓட்டல்களில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்துவதுடன், இரவு, 10:00 மணி வரை செயல்பட, அரசு அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, முக கவசம், கிருமி நாசினி வழங்குவது உட்பட, அனைத்து துாய்மை பணிகளையும், ஓட்டல் நிர்வாகத்தினர் ஏற்றுக் கொள்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment