Thursday, June 4, 2020

சென்னையில் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கம்


சென்னையில் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கம்

Updated : ஜூன் 04, 2020 02:18 | Added : ஜூன் 04, 2020 02:16 

சென்னை; கொரோனா பாதிப்புக்கு, பாரம்பரிய சித்த மருத்துவத்தில் நல்ல பலன் கிடைத்து வருவதால், தனித்த சித்தா சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மையம், சென்னையில் நேற்று துவக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும், சித்தா டாக்டர்களும் இணைந்து, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில், கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அலோபதி மற்றும் சித்தா இணைந்து அளித்த, கூட்டு மருந்து சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்தது.இதன் தொடர்ச்சியாக, பாதிப்பு அதிகமுள்ள கோடம்பாக்கம் மண்டலத்தில், கோயம்பேடு; ராயபுரம் மண்டலத்தில், ராயபுரத்தின் ஐந்து பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, சித்தா டாக்டர் வீரபாபு குழுவினரால், கப சுர குடிநீர், மூலிகை தேநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.இந்த பகுதிகளில், தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துஉள்ளது.

ஆய்வு செய்தார்

இதையடுத்து, கொரோனா பாதிப்பு உள்ளோருக்கு, சித்த மருத்துவ சிகிச்சை மட்டும் அளிக்க, அரசு அனுமதி வழங்கியது. இதற்காக, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான மையத்தை, சென்னை மாநகராட்சி அமைத்து உள்ளது.இங்கு, 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்த மையம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இந்த மையத்தை, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து, ஆய்வு செய்தார்.நிகழ்ச்சியில், மூத்த சித்தா டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயணன், தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்தா ஆராய்ச்சி மைய இயக்குனர் மீனாகுமாரி, டாக்டர் வீரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிகிச்சை குறித்து, சித்தா டாக்டர் வீரபாபு கூறியதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆங்கில மருத்துவத்துடன், சித்த மருத்துவமும் சேர்ந்த, கூட்டு சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. இதையடுத்து, நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, தனித்த சித்தா சிகிச்சை அளிக்கும் வகையில், பிரத்யேக மையம் துவக்கப்பட்டுஉள்ளது.சூரியக் குளியல் தாம்பரம் தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனம், அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து, சிகிச்சையை துவக்கி உள்ளனர்.

முதற்கட்டமாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 17 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 100 பேர் வர உள்ளனர். இங்கு சிகிச்சைக்கு வருவோருக்கு, கப சுர குடிநீர், சிறப்பு மூலிகை தேநீர் வழங்கப்படும். பின், மூலிகை ஆவி பிடிக்கப்படும். மேலும், காலை, 7:00 முதல், 8:00 மணி வரை; மாலை, 4:00 முதல், 5:00 மணி வரையும், சூரிய குளியலில் ஈடுபடுவர்.அப்போது, மூச்சு பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து கொள்ளு ரசம், கற்பூரவள்ளி ரசம் என, பாரம்பரிய உணவுகள் வழங்கப்படும். காரம், புளி அதிகமில்லாத உணவுகள் வழங்கப்படும்.

மத்திய அரசின், 'தேசிய ஆயுஷ்' அமைச்சகத்தின் அனுமதி பெற்ற மருந்துகள், நோயாளிகளின் அறிகுறிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.அவசர சிகிச்சைதொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதி மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம், தனித்த சித்த மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தால், அவர்கள் உரிய பாதுகாப்புடன், இந்த மையத்திற்கு அழைத்து வரப்படுவர்.

அவசர சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. ஆரம்ப கட்டத்திலேயே, சித்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டால், தீவிர கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024