உணவகங்களுக்கான வழிகாட்டி விதிமுறைகள்
Updated : ஜூன் 07, 2020 00:21 | Added : ஜூன் 07, 2020 00:07
சென்னை; 'உணவகங்களில், 'ஏசி' பயன்படுத்தக் கூடாது; நோய் அறிகுறி உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், நாளை முதல் உணவகங்களில், 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதையொட்டி, உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி விதிமுறைகளை, தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
* உணவகங்கள் நுழைவு வாயிலில், உணவகங்களுக்கு வரும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின், உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்
* காய்ச்சல் இருந்தால், அவர்களை அனுமதிக்கக் கூடாது; டாக்டர்களை அணுகும்படி, அறிவுரை கூறி அனுப்ப வேண்டும்
* நுழைவு வாயிலிலே, கை கழுவ சோப் அல்லது கிருமி நாசினி, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்* உணவகங்களில், 'ஏசி' பயன்படுத்தக் கூடாது; அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும்
* உணவு அருந்தும் மேஜைகளிலும், கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்; உணவகங்களில் உள்ள, கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அங்கும் கை கழுவ, கிருமி நாசினி வைக்க வேண்டும்
* சமையல் அறை உட்பட, உணவகங்களின் அனைத்து பகுதிகளையும், கிருமி நாசினியால் தினமும் சுத்தப்படுத்த வேண்டும்
* உணவகங்களில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்
* பயன்படுத்தப்படாத இருக்கைகளில், 'சேவை இல்லை' என, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் ரொக்கமாக பணம் வாங்காமல், மின்னணு முறையில் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
*வீடுகளுக்கு உணவு எடுத்து செல்லும் ஊழியர்களின், உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகு அனுப்ப வேண்டும்
* முதியோர் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்களை, பணியில் ஈடுபடுத்தினால், கூடுதல் கவனம் செலுத்தவும்
* ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய மெனு கார்டுகளை பயன்படுத்த வேண்டும்; நோய் அறிகுறி உள்ள ஊழியர்களை, பணிக்கு வர வேண்டாம் எனக்கூறி, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்
* உணவக ஊழியர்கள் அனைவரும், முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். உணவை கையாளும் ஊழியர்கள், கைக்கடிகாரம் மற்றும் அணிகலன் அணிவதை தவிர்க்கவும்
* காய்கறிகள், பருப்பு, அரிசி போன்றவற்றை, சமைப்பதற்கு முன், குளோரின் நீரில் சுத்தம் செய்யவும்
* சமையல் அறை ஊழியர்கள், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை, தங்கள் கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்
* உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அனுமதிக்க வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment