புதிய மருத்துவ கல்லுாரிகள் கட்டுமானப் பணிகள் துவக்கம்
Added : ஜூன் 06, 2020 23:38
சென்னை; இரண்டு புதிய மருத்துவ கல்லுாரிகள் கட்டுமான பணிகளை, பொதுப்பணி துறை துவங்கி உள்ளது.
விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலுார் ஆகிய, 11 மாவட்டங்களில், அரசு மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது.
ஒவ்வொரு மருத்துவ கல்லுாரிக்கும், தன் பங்களிப்பாக, 195 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநில அரசு, தலா, 130 கோடி ரூபாயை, ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, ஒன்பது மருத்துவ கல்லுாரிகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.கள்ளக்குறிச்சி மற்றும் அரியலுார் மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரிகள் அமைக்க, ஜன., மாதம் ஒப்புதல் கிடைத்து விட்டது. ஊரடங்கு காரணமாக, இதற்கான பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது, ஊரடங்கு விதிகளில் தளர்வு கிடைத்துள்ள நிலையில், கட்டுமான பணிக்கான ஒப்பந்ததாரர் தேர்வை, பொதுப்பணி துறை துவங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சியில், மருத்துவமனை கட்டடம், 144 கோடி ரூபாய்; கல்லுாரி கட்டடம், 102 கோடி ரூபாய்; மருத்துவர் மற்றும் ஊழியர் குடியிருப்புகள், 55 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளன. அரியலுாரில், மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவ மனை கட்டடம், 188 கோடி ரூபாய்; குடியிருப்புகள், 95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ளன. இம்மாதம், ஒப்பந்ததாரர் தேர்வை முடித்து, கட்டுமான பணிகளை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment