சித்த மருத்துவர் கைது பிரச்னை கமிஷனர் பதிலளிக்க உத்தரவு
Added : ஜூன் 01, 2020 23:42
சென்னை : குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, சித்த மருத்துவ சிகிச்சை அளித்தவர் தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னையில், சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்த, திருத்தணிகாசலம் என்பவர், கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக, சமூக வலைதளங்களில் தெரிவித்தார். இவருக்கு எதிராக,போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்டார். பின், குண்டர் சட்டத்தின் கீழ், காவலில் வைக்க, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருத்தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் தாக்கல் செய்த மனுவில், 'பரம்பரை சித்த வைத்தியரான திருத்தணிகாசலத்துக்கு, 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது; பல மருந்துகளை கண்டுபிடித்துள்ளார். அவசரகதியில், கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள்கிருபாகரன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன்பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், கே.பாலு ஆஜராகி, ''வைரஸ் பரவாமல் தடுக்க, கபசுர குடிநீர் குடிப்பதை, திருத்தணிகாசலம் ஊக்குவித்தார். அரசு பற்றி, சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்காக, குண்டர் சட்டத்தில் கைது செய்தது, சட்ட விரோதமானது,'' என்றார்.போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி, ''சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க, திருத்தணிகாசலம் தகுதி பெற்றிருக்கவில்லை. மனுவுக்கு பதில் அளிக்க, அவகாசம் வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, 'கபசுர குடிநீர் குடிக்கும்படி ஆலோசனை கூறியதற்காக, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, மாநகர போலீஸ் கமிஷனருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment