'இ -பேப்பர்' சேனல்களை நீக்க: டெலிகிராம் நிறுவனத்திற்கு 'கெடு'
Updated : ஜூன் 01, 2020 23:25 | Added : ஜூன் 01, 2020 22:33
புதுடில்லி: 'காப்புரிமை சட்டத்தை மீறி, 'இ - பேப்பர்' வெளியிடும் சேனல்களை, 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும்' என, 'டெலிகிராம்' சமூக வலைதள நிறுவனத்திற்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதம்
டில்லியைச் சேர்ந்த, ஜாக்ரண் பிரகாஷன் நிறுவனம், 'தைனிக் ஜாக்ரன்' பத்திரிகையை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:எங்கள் நிறுவனம், தைனிக் ஜாக்ரன் பத்திரிகையின், மின்னணு பதிப்பான, 'இ - பேப்பர்' படிக்கும் வசதியை, சந்தா செலுத்துவோருக்கு மட்டும் வழங்குகிறது. இந்நிலையில், துபாயைச் சேர்ந்த, டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தில், எங்கள் அனுமதியின்றி, சட்ட விரோதமாக, தைனிக் ஜாக்ரன் இ - பேப்பர், தினமும் வெளியிடப்படுகிறது. அதை வெளியிடும் சேனல் குறித்த விபரங்களை தர, டெலிகிராம் நிறுவனம் மறுக்கிறது.
எங்கள் மின்னணு பத்திரிகை இலவசமாக பகிரப்படுவதால், அதை வெளியிடும் சேனலில், மே, 20 நிலவரப்படி, 19ஆயிரத்து, 239 சந்தாதாரர்கள் இணைந்துஉள்ளனர். இதனால், எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, காப்புரிமை சட்டத்தை மீறி, மின்னணு பத்திரிகையை வெளியிடும் சேனல் மற்றும் அதற்கு தளம் அமைத்துக் கொடுத்துள்ள, டெலிகிராம் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்னணு பத்திரிகை பகிர்வதை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெலிகிராம் நிறுவனம்
இந்த மனுவை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், காப்புரிமை சட்டத்தை மீறிய சேனல்களை, 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என, டெலிகிராம் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சேனல் உரிமையாளர்களின் விபரங்களையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், டெலிகிராம் நிறுவனம், துபாயில் உள்ளதால், அதை கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கில்லை என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊடகங்களும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதால், 'டெலிகிராம்' நிறுவனம் மீது, மேலும் பல வழக்குகள் தொடரப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment