அண்ணா பல்கலையில் கொரோனா கட்டுப்பாடு
Added : ஏப் 13, 2021 00:28
சென்னை : அண்ணா பல்கலையில் பணியாற்றும் பலருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பல்கலை வளாகத்தில், கொரோனா கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்தில், மாநிலம் முழுதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், கல்லுாரி மாணவர்களுக்கு, மார்ச், 31 உடன் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதேநேரம், பல்கலையில் பணியாற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், தினமும் பல்கலைக்கு வந்து, பணிகளை கவனிக்கின்றனர்.
அவர்களில் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், கொரோனா சோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலை வளாகத்தில் பணியாளர்கள், பேராசிரியர்கள் கூடி நிற்க வேண்டாம். அலுவலகங்களில் அருகருகே இருக்கைகளை அமைத்து கொள்ள வேண்டாம். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என, பல்கலை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment