தமிழ்நாடு
ஒரே ஆண்டில் இரு பட்டம் பெற அங்கீகாரம் இல்லை: ஐகோர்ட்
Added : மே 21, 2021 22:21
சென்னை:'ஒரே ஆண்டில், ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் பெறுவதை, அரசு அனுமதிக்காத வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருத முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஜெகதீஸ்வரி என்பவர் விண்ணப்பித்தார். ஒரே கல்வியாண்டில், பி.ஏ., மற்றும் பி.எட்., படிப்பை முடித்தார். ஒன்றை ரெகுலரிலும்,மற்றொன்றை திறந்தவெளி பல்கலையிலும் படித்தார். ஒரே ஆண்டில், ஒரே நேரத்தில் பட்டம் பெற்றதால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை, உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து, மேல்முறையீடு செய்தார். அதையும் தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, 'ஒரே கல்வியாண்டில், ஒரே நேரத்தில், இரண்டு பட்டங்கள் பெறுவதை பல்கலை அங்கீகரிக்காததால், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யும்படி கோர முடியாது' என உத்தரவிட்டது.
உத்தரவு
இதேபோன்ற மற்றொரு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது.இரண்டு அமர்வுகள், வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, மூன்று நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நீதிபதிகள் வி.பாரதிதாசன், எம்.தண்டபாணி, பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
ஒரே நேரத்தில், இரண்டு பட்டங்கள் பெறுவதற்கு சாதகமான பரிந்துரைகளை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,க்கு, நிபுணர் குழு அனுப்பி உள்ளது. அதற்கு, யு.ஜி.சி.,யும் ஒப்புதல் அளித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது.அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. ஒப்புதல் வரும் வரை, யு.ஜி.சி.,யால் முறையான அறிவிப்பு வெளியிட முடியாது.
சிறப்பு விதிகள்
எனவே, ஒரு படிப்பை கல்லுாரியில் சேர்ந்தும், மற்றொரு படிப்பை தொலைதுார முறையிலும் என, இரண்டு படிப்பை, ஒரே கல்வியாண்டில் தொடர, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., இதுவரை அங்கீகரிக்கவில்லை. யு.ஜி.சி., விதிமுறைகளில், இதற்கு ஒப்புதல் இல்லை.
ஒரே நேரத்தில், இரண்டு பட்டங்கள் பெறுவதை, யு.ஜி.சி., அங்கீகரிக்காத நிலையில், மத்திய அரசும் ஒப்புதல் வழங்காத நிலையில், அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருத முடியாது. இப்போது வரை, ஒரே கல்வியாண்டில், ஒரே நேரத்தில், இரண்டு படிப்புகளை படிக்க, யு.ஜி.சி., அங்கீகரிக்கவில்லை.
கல்வி பணிகளை பொறுத்தவரை, பல்வேறு சிறப்பு விதிகள் உள்ளன. வெவ்வேறு பணிகளுக்கு என, கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே கல்வியாண்டில், இரண்டு பட்டங்கள் பெறுவது, இணையான பட்டப்படிப்பாக, பணி விதிகளில் கருதப்படவில்லை.எனவே, எந்த விதிகளும் இல்லாத நிலையில், ஒரே நேரத்தில், இரண்டு பட்டங்கள் பெறுவதை, யு.ஜி.சி., அங்கீகரிக்கும் வரை, அவற்றை பல்கலையோ, தேர்வு நிறுவனங்களோ அங்கீகரிக்க வேண்டியதில்லை.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment