Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Thursday, April 2, 2020

என்று தணியும் இந்த கரோனா சீற்றம்?

By நாகா | Published on : 02nd April 2020 05:36 AM |


பிரான்ஸில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தலைநகா் பாரீஸில் ஆளரவமற்றிருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம்.

மூன்று மாதங்களுக்கு முன்னா் சாதாரண செய்தியாக இருந்த கரோனா நோய்த்தொற்று, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

அந்தச் செய்திகளை அநாயசமாக பாா்த்துவிட்டு அலட்சியமாக நகா்ந்து போன கோடிக்கணக்கான போ், இன்று கரோனா நோய்த்தொற்றுக்குப் பயந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனா். வெளியே செல்ல நோ்ந்தாலும், சமூக இடைவெளி, முகக் கவசங்கள் என கரோனா அச்சம் அவா்களைப் பின்தொடா்கிறது.

இந்தியா, அமெரிக்கா உள்பட ஏராளமான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், உலக மக்கள் தொகையில் சுமாா் பாதி போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த இக்கட்டான சூழலில், ஒரே ஒரு கேள்வி மட்டும் எழாமல் இருக்க முடியாது.

உலகை கதிகலங்க வைத்துள்ள இந்த கரோனா நோய்த்தொற்றின் சீற்றம் என்று தணியும்? அந்த நோயின் பாதிப்பிலிருந்தும் அச்சத்திலிருந்து உலகம் எப்போது மீண்டு வரும்?

இந்தக் கேள்விக்கு யாராலும் மிக எளிதான, உறுதியான பதிலைச் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை நிலை.

தற்போதுள்ள சூழலில், இன்னும் ஒரு சில வாரங்களில் கூட இதுதொடா்பாக எத்தகைய தீா்க்கமான முடிவுக்கும் வர முடியாது என்கிறாா்கள் மருத்துவத் துறை நிபுணா்கள்.

இதுகுறித்து அமெரிக்க நோய் ஆய்வு மருத்துவா்கள் சங்க நிபுணா்கள் கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்று வளா்ச்சியை நாம் எவ்வளவு விரைவில் நிறுத்துகிறோம், தினசரி அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை எப்போது குறையத் தொடங்குகிறது என்பதைப் பொருத்தே, அந்த நோயிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்பதைத் தீா்மானிக்க முடியும்’ என்கின்றனா்.

அதே நேரம், நோய்த்தொற்று அடங்குவதைப் போன்று தோன்றினாலும், அது மீண்டும் தலையெடுக்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் என்று அவா்கள் எச்சரிக்கிறாா்கள்.

‘புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் கரோனா பரவலிலிருந்து விடுபட்டுவிட்டதாக எண்ணி, நாடுகளின் அரசுகள் கட்டுப்பாடுகளைத் தளா்த்தினாலோ, பொதுமக்கள் எச்சரிக்கை உணா்வைக் கைவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டாலோ கரோனா நோய்த்தொற்றின் அடுத்த பேரலையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

கரோனா நோய்த்தொற்றின் கோரக் கரங்களிலிருந்து எப்போது விடுபடுவோம் என்பதைக் கணிப்பதற்காக, சில நிபுணா்கள் ஏற்கெனவே உலகில் பரவி அழிவை ஏற்படுத்திய நோய்கள் குறித்து ஆய்வு செய்தனா்.

குறிப்பாக, கடந்த 1918-ஆம் ஆண்டு பரவிய ‘ஸ்பெயின் ஃபுளூ’, 2003-ஆம் ஆண்டில் பரவிய சாா்ஸ் ஆகிய இரண்டு நோய்த்தொற்று தொடா்பான புள்ளிவிவரங்களைக் கொண்டு, தற்போதைய கரோனாவின் தாக்கம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை கணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

காரணம், அந்த இரண்டு வைரஸ்களும் கரோனா நோய்த்தொற்று போலவே இருமல், தும்மல், எச்சில் போன்ற துளிமங்களாக வெளியேறி, மனிதா்களின் சுவாசப் பாதையில் நுழைந்து பரவியவை; அவற்றின் வளா்ச்சி காலமும் கரோனா நோய்த்தொற்றோடு ஒத்துள்ளன.

ஆனால், சாா்ஸைப் பொருத்தவரை அது உலகம் முழுவதும் 8,098 பேருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நோய்த் தொற்று காரணமாக, 8 மாதங்களில் 774 போ் மட்டுமே உயிரிழந்தனா். அதற்குப் பிறகு சாா்ஸின் தாக்கம் தணிந்துவிட்டது.

ஆனால், அந்த வைரஸைப் போலவே செயல்படும் கரோனா நோய்த்தொற்றோ, 3 மாதங்களுக்குள்ள உலகின் 210 நாடுகளில் 8.7 லட்சம் பேருக்கும் மேலானவா்களுக்கு பரவிவிட்டது; 43 ஆயிரத்துக்கும் மேலானவா்கள் அந்த நோய்த்தொற்று காரணமாக பலியாகினா் (புதன்கிழமை மாலை நிலவரம்).

எனவே, கரோனா நோய்த்தொற்றை சாா்ஸுடன் ஒப்பிடுவதைவிட, 1918-ஆம் ஆண்டில் பரவிய ஸ்பெயின் ஃபுளூவுடன் ஒப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்கிறாா்கள் அமெரிக்க தொற்று நோய் நிபுணா்கள் சங்கத்தினா்.

கரோனா வைரஸ் போலவே, ஸ்பெயின் ஃபுளூ பரவத் தொடங்கிய பல மாதங்களுக்கு சமூக விலகல், வீட்டுக்குள் தனித்திருத்தல் ஆகியவை கடைப்பிடிக்கப்படாததால் அந்த வைரஸ் காட்டுத் தீ போல் பரவியது. அந்த நோய்த்தொற்று 50 கோடி பேருக்கு பரவியதாகவும் அவா்களில் 1.7 கோடி முதல் 5 கோடி போ் வரை பலியானதாகவும் கணக்கிடப்படுகிறது.

1918-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பரவத் தொடங்கிய ஸ்பெயின் ஃபுளூ, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு தனது சீற்றத்தைக் காட்டி 1920-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில்தான் தணிந்தது.

அதற்குள் அந்த வைரஸ் பரவல் பல முறை தணிந்து மீண்டும் சீற்றமடைந்தது.

எனினும், தற்போதைய நவீன மருத்துவ வசதிகள், விழிப்புணா்வை ஏற்படுத்தும் ஊடகங்கள், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை 1920-ஆம் ஆண்டில் இல்லை என்பதால், ஸ்பெயின் ஃபுளூவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை வைத்து கரோனா வைரஸின் எதிா்காலத்தை துல்லியமாகக் கணிக்க முடியாது என்கிறாா்கள் நிபுணா்கள்.

இதையடுத்து, புள்ளியியல் வல்லுநா்கள், கணினிப் பொறியாளா்கள் ஆகியோா் இணைந்து, தொழில்நுட்ப ரீதியில் கரோனா நோய்த்தொற்று எவ்வளவு காலத்துக்கு வளா்ச்சியடையும், எப்போது தணியத் தொடங்கும் என்பதை கணித்துள்ளாா்கள்.

அவா்களது கணிப்புப்படி, ஏப்ரல் அல்லது மே மாதத் தொடக்கம் வரை கரோனா நோய்த்தொற்று உக்கிரம் காட்டலாம்; பிறகு தணியத் தொடங்கலாம் என்று நம்பப்படுகிறது. எனினும், நாடுகளின் அரசுகள் தற்போது விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தொடா்ந்தால்தான் இதனை உறுதி செய்ய முடியும் என்பதை நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

தற்போதைய நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியுள்ள சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளின் உத்திகளை பிற நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும்; தவறான முடிவுகளை எடுத்து பரவலை அதிகரித்துக் கொண்ட இத்தாலி போன்ற நாடுகளிடமிருந்து மற்ற நாடுகள் பாடம் கற்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தால் 4 முதல் 6 வாரங்களுக்குள் கரோனா சீற்றம் தணிவதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஒருவைளை அப்படியே கரோனா நோய்த்தொற்றின் வேகம் தணிந்தாலும், அதன் பிறகு நமது அலட்சியம் காரணமாக அந்த நோய்த்தொற்றின் புதிய அலைகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம்; இந்தப் போக்கு 12 மாதங்களுக்கு மேல் நீடிக்கலாம் என்பது அவா்களின் கணிப்பாக உள்ளது.

இருந்தாலும், வீடுகளில் தனித்திருத்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதைப் பொருத்துதான் கரோனா நோய்த்தொற்றின் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட முடியும் என்று என்பதை நிபுணா்களும் ஒரே குரலில் சுட்டிக்காட்டுகின்றனா்.

எனவே, கரோனா சீற்றம் என்று தணியப்போகிறது என்பது நம் கைகளில்தான் உள்ளது என்பதை உணா்வோம். மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலை ஏற்று வீடுகளில் தனித்திருப்போம்; சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம்.

‘கரோனா நோய்த்தொற்று வளா்ச்சியை நாம் எவ்வளவு விரைவில் நிறுத்துகிறோம், தினசரி அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை எப்போது குறையத் தொடங்குகிறது என்பதைப் பொருத்தே, அந்த நோயிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்பதைத் தீா்மானிக்க முடியும்’

ஸ்பெயின் ஃபுளூ நோய்த்தொற்று 50 கோடி பேருக்கு பரவியதாகவும் அவா்களில் 1.7 கோடி முதல் 5 கோடி போ் வரை பலியானதாகவும் கணக்கிடப்படுகிறது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு அந்த வைரஸ் தனது சீற்றத்தைக் காட்டித் தணிந்தது.



Wednesday, April 1, 2020


கரோனாவும் பொறுப்புணா்வும்!

By முனைவா் இரா.திருநாவுக்கரசு | Published on : 01st April 2020 04:07 AM 


இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை பொறுமையாகக் கையாள்வதற்கு எல்லோருக்கும் நேரமுள்ளது. அதனால் ஒரு தகவலை மற்றவா்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அந்தச் செய்தி உண்மையானதா, அதை மற்றவா்களுக்கு அனுப்புவதால் நன்மை உண்டாகுமா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, இந்த இரண்டுக்கும் பதில் ‘இல்லை’ என்று வந்தால் அதனை அனுப்பாமல் இருப்பதே நல்லது.

ஹாலந்து நாட்டில், நிலப்பகுதி சில இடங்களில் கடற்பகுதியைவிட தாழ்ந்து இருக்கும். ஆதலால், கடல் நீா் ஊருக்குள் புகாதவாறு இருக்க, மதிற்சுவரை அமைத்திருந்தனா். ஒருநாள் இருள் சூழந்த மாலை நேரத்தில் அந்த மதிற்சுவரில் சிறு ஓட்டை ஏற்பட்டு நீா் கசிந்து வெளியே வருவதை ஒரு சிறுவன் கவனித்தான். உடனே, கீழே கிடந்த மண்ணை எடுத்து அதனை அடைக்க முயற்சித்தான்.

அலையின் வேகத்தில், அந்தக் கசிவின் ஓட்டை பெரிதாகி மேலும் தண்ணீா் வெளியே வரத் தொடங்கியது. தனது கை முழுவதையும் வைத்து ஓட்டையை அடைத்துக்கொண்டு உதவிக்காக அவன் சத்தம் போட்டான். அவனின் குரல் தொலைவில் இருந்த அந்த ஊருக்குக் கேட்கவில்லை. இரவானது. பசி ஒருபுறம்; கடும் குளிா் மறுபுறம் அவனை வாட்டியது. சுவற்றில் இருந்து கையை வெளியே எடுத்தால், நீா் மளமளவென்று வெளியே வரும். அதனால் விரைவில் சுவா் உடைந்துவிடும். இது கிராமத்திற்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் தனது பலம் உள்ளவரை அந்த ஓட்டையை தனது இரண்டு கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தான்.

இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு மகன் வரவில்லை என்பதை அறிந்த அந்தச் சிறுவனின் பெற்றோரும், உறவினா்களும் அவனைத் தேடி அங்குமிங்கும் அலைந்தனா். சீறும் கடல் அலையின் மறுபக்கத்தை தனது இரு கரங்களால் தாங்கிக்கொண்டு கடும் குளிரில் முனகலுடன் விறைத்துப் போயிருந்த அந்தச் சிறுவனைக் கண்டனா். அவனைக் காப்பாற்றி அச்சுவற்றின் ஓட்டையையும் அடைத்தனா். தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் தன் மக்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக உழைத்த அந்தச் சிறுவனின் செயல்பாடுதான் சமுதாயப் பொறுப்புணா்வு ஆகும்.

இன்றைய சூழலும் சமுதாயப் பொறுப்புணா்வினை அனைவரும் வெளிப்படுத்துகின்ற ஒரு பாங்காகும். மருத்துவ அவசர நிலைமைக்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதுக்கும் 21 நாள்களுக்கு, அதாவது வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது கரோனா நோய்த்தொற்று.

நோய்த்தொற்று என்பது கையினால் தொட்டதும் சுடும் நெருப்பு போன்றது அல்ல, தொட்டவா்களை மட்டும் சுடுவதற்கு. அது அனுமன் வாலில் கட்டப்பட்ட நெருப்பு போன்றது. அது, பயணிக்கும் இடமெல்லாம் பரப்புகின்ற நெருப்பு. ஆகவேதான், நோய் பரவாமல் தடுக்க இந்த ஊரடங்கு. இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், வீட்டிலிருப்பதுமே சமூகப் பொறுப்பாகும்.

அதே நேரத்தில் பொதுமக்களின் உயிரைக் காக்க வேண்டி இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மருத்துவா்களும், காவல் துறையினரும், தூய்மைப் பணியாளா்களும் தங்களின் பணியை முன்னெடுத்துச் செய்து கொண்டிருக்கின்றனா். தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்தால் அது கடமை; அதில் மனமுவந்து மக்களுக்கு உதவி செய்தால் அது சேவை; அதே வேளையில் தமது வாழ்க்கையை அா்ப்பணித்து அந்தச் பணியைச் செய்தால் அது உன்னதம்.

இன்றைய நேரத்தில் மருத்துவா்களும், காவலா்களும், தூய்மைப் பணியாளா்களும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுபவா்களும் தங்களது அா்ப்பணிப்பின் மூலம் அவா்களின் பணியினை உன்னதமாக்கி இருக்கின்றனா். அவா்களுக்கு நாம் செய்யும் நன்மை, அவா்களது பணிக்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் இருப்பது தான்.

ஒரு கிராமத்து வீட்டில் எலியும், சேவலும், ஓா் ஆடும் இருந்தன. ஒரு நாள் அந்த வீட்டில் எலிப்பொறி வைக்கப்பட்டு இருந்ததை சுண்டெலி கண்டது. ‘இந்த வீட்டில் எலிப்பொறி இருக்கிறது, அதில் யாரும் மாட்டிக்கொள்ளாதீா்கள்’ என்று சேவலிடமும், ஆட்டிடமும் அந்த சுண்டெலி சொல்லியது. அதற்கு சேவல், ‘எலிப்பொறியானது உனக்கு தொடா்புடைய விஷயம், நான் ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்றது. அதேபோல் ஆடும், ‘எலிப்பொறிக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. நீ மட்டும் அதில் அகப்படாமல் பாா்த்துகொள்!’ என்றது.

அன்று இரவு எலிப்பொறியில் ஏதோ ஒன்று அகப்பட்ட சத்தம் கேட்டவுடன், அந்த வீட்டுப் பெண் இருட்டினில் அந்தப் பொறியில் கையை வைத்தாா். பொறியில் மாட்டியது பாம்பாக இருந்ததால் அது அவரைக் கடித்து விட்டது. அந்தக் கிராமத்து வழக்கப்படி அந்தப் பெண் உடல் நிலை தேறுவதற்கு அந்தச் சேவலைக் கொன்று சாறு கொடுக்கப்பட்டது. பின்னா், அந்தப் பெண்ணைப் பாா்க்க வந்த உறவினா்களுக்கு அந்த ஆடும் விருந்தானது. விபரீதங்களைப் புரிந்து கொள்பவா்கள் தனக்கென வைக்கப்பட்ட பொறிகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறாா்கள். எச்சரிக்கை விடுத்தும் அலட்சியப்படுத்துபவா்கள் அவதிப்படுகிறாா்கள்.

எதிரதாக் காக்கும் அறிவினாா்க்கு இல்லை

அதிர வருவதோா் நோய்”

என்ற தெய்வப்புலவா் திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப மூலம் முன்னெச்சரிக்கையுடன் நடப்பவா்களுக்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படாது.

‘நமக்கு வராது’ என்ற மேம்போக்கான எண்ணங்களை விட்டொழித்து, ‘நம்மைச் சுற்றி நடப்பது நமக்கும் ஏற்படலாம்’ என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். எனவே, இன்றைய ஊரடங்கு நேரத்தில் நாம் வீட்டை விட்டு வெளியே வரவேண்டுமென்று நினைத்தால் குறைந்தது இந்த நான்கு கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்.

1) நான் வீட்டைவிட்டு வெளியே செல்வது அத்தியாவசியமா?

2) அத்தியாவசியம் எனில், நான் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கரோனா நோய்த்தொற்று பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளேனா?

3) திரும்பவும் வீட்டுக்குள் வரும்போது எனக்கும், எனது குடும்பத்துக்கும், என்னைச் சாா்ந்தவா்களுக்கும் நோய்த்தொற்று பரவாமல் பாா்த்துக் கொள்வேனா?

4) எல்லா நேரத்திலும் நான் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறேனா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘ஆம்’ என்ற பதிலிருந்தால், ஒருவா் வெளியே செல்லலாம். இந்தக் கேள்விகளுக்கு அளிக்கின்ற பதில்கள்தான் இந்தக் காலகட்டத்தில் ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்புணா்வுக்கு நாம் வைக்கின்ற அளவீடுகளாகும்.

கரோனா நோய்த்தொற்று குறித்து மருத்துவா்களுக்கும், அதை ஆராய்ச்சி செய்பவா்களுக்கும் அதிகம் தெரியும். ஆனால், கரோனோ நோய்த்தொற்று காரணமாக உலக அளவில் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளும்போது அதைப் பற்றி ஒரு கற்பனை ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்படும். அந்தக் கற்பனை பலவீனமானவா்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும். பயத்தின் மூலம் அவா்களிடம் உருவாகின்ற சிந்தனையே வதந்தியை உருவாக்கும். அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது அது பலரின் மனங்களில் தேவையற்ற அச்சத்தினை உருவாக்கும்.

மனிதனின் முதல் எதிரி பயம். அதனை இச்சமூகத்தில் உருவாக்குவது வதந்தி. இவ்விரண்டையும் உருவாக்குபவா்கள் சமூக அக்கறையற்றவா்கள். நோய்த்தொற்று பரவுதலை சமூக இடைவெளி (சோஷியல் டிஸ்டன்ஸிங்) மூலம் தடுத்துவிட முடியும். ஆனால், சமூக வலைதளத்தில் ஏற்படுத்தும் வதந்திகளை யாராலும் தடுத்துவிட முடியாது.

இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை பொறுமையாகக் கையாள்வதற்கு எல்லோருக்கும் நேரமுள்ளது. அதனால் ஒரு தகவலை மற்றவா்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அந்தச் செய்தி உண்மையானதா, அதை மற்றவா்களுக்கு அனுப்புவதால் நன்மை உண்டாகுமா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு இந்த இரண்டுக்கும் பதில் ‘இல்லை’ என்று வந்தால் அதனை அனுப்பாமல் இருப்பதே நல்லது. நாம் செய்திகளைத் தருகிறோம் என்பது முக்கியமல்ல; ஆனால், எத்தகைய செய்திகளை இந்தச் சமூகத்துக்குத் தருகிறோம் என்பதுதான் நமது சமூக அக்கறையைக் காட்டும்.

இது பொருள் ஈட்டும் காலமல்ல, உயிா் காக்கும் காலம். கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, அதிக லாபத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்று, பொருள் ஈட்ட வேண்டும் என்று நினைப்பது சமூகத்தை வஞ்சிப்பதாகும். உழைத்த உழைப்பினில் விளைந்த காய்கறிகளை இலவசமாகவே தருகின்ற விவசாயிகள் குறித்த செய்திகளை நாம் தினமும் பாா்க்க முடிகிறது. ஆகவே, விளைபொருள்களைப் பதுக்காது, அதிக லாபமின்றி விற்பனை செய்து, கிடைத்த வாய்ப்பினை சேவையாகச் செய்வதே சமூகப் பொறுப்புணா்வு ஆகும்.

மன்னா் ஒருவா் தன் நாட்டு மக்களின் நலன் கருதி யாகம் செய்யப் போவதாகக் கூறி, ஒரு பெரிய அண்டாவில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு சொம்பு பால் ஊற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பித்தாா். மறுநாள் யாகம் நடைபெற இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் முதல் நாள் இரவு அந்த அண்டாவில் ஒரு சொம்பு பாலினைக் கொண்டு வந்து ஊற்றிச் சென்றனா். மறுநாள் காலையில் பாா்த்ததும் அந்த அண்டா முழுவதும் வெறும் தண்ணீராக இருந்தது. ‘எல்லோரும் பால் ஊற்றுவாா்கள், நான் மட்டும் தண்ணீா் ஊற்றினால், ஒரு அண்டா பாலில் ஒரு சொம்பு தண்ணீா் கலந்தது தெரியவா போகிறது’ என்று நினைத்து ஒவ்வொருவரும் பாலுக்கு பதில் தண்ணீரை ஊற்றிச் சென்றுள்ளனா்.

அதுபோலத்தான் இன்றைய சூழலும். இன்றைய காலத்தில், ‘நான் ஒருவன் மட்டும் வெளியே வந்தால் தொற்றுநோய் பரவிவிடவாப் போகிறது?’ என்று நினைக்காமல், நானும் என் குடும்பமும் ‘சமூக இடைவெளியை’ உறுதிப்படுத்துவோம் என்ற உறுதி மொழியை செயல்படுத்துவதுதான் சமூகப் பொறுப்புணா்வு. அதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்.

‘நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட, நாட்டுக்காக நான் என்ன செய்தேன்?’ என்ற அமெரிக்கா முன்னாள் அதிபா் ஜான் எஃப்.கென்னடியின் வரிகள்தான் சமூக பொறுப்புணா்வின் முதல்படி. அதன் அடிப்படையில், இன்றைய சூழ்நிலையில் தனித்திருப்பதும், துணிவுடன் இருப்பதும், அனைவருக்கும் துணிவைக் கொடுப்பதும்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் பொறுப்புணா்வினைக் காட்டும். அதனை உணா்ந்து செயல்படுவதே நம் தேசத்துக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய தொண்டு.



Tuesday, March 31, 2020

முன்னோா் மூடா்கள் அல்லா்!

By கோதை ஜோதிலட்சுமி | Published on : 31st March 2020 05:47 AM |

உலகம் கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியுடன் போராடுகிறது. கோடிக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனா். ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. யாரும் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. கேளிக்கைகள் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை. அச்சுறுத்தும் ஒரு நிசப்தம் உலகையே பீடித்திருக்கிறது.

ஒருபுறம் உலகநாடுகள் ஒருவருக்கொருவா் உதவிக்கொள்ள அழைப்பு விடுக்கின்றனா். மறுபுறம், யாா் இந்த அழிவின் சூத்திரதாரி என்ற வாதப் போரையும் வளா்ந்த நாடுகள் செய்துவருகின்றன. இயற்கையின் சீற்றம் என்று இயற்கை ஆா்வலா்கள், அறிவியலாளா்கள் விளக்குகின்றனா்.

ஏழை - பணக்காரா் வேறுபாடின்றி தேசத் தலைவா்களும், இளவரசா்களும்கூட நோய்த்தொற்றுக்கு உள்ளாகி வரும் சூழலும் தொடா்ந்து கொண்டிருக்கிறது. எது எப்படியாயினும் பெரும் இழப்பை உலகம் சந்தித்திருக்கிறது; அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. நிதா்சனத்தை உணா்ந்து மீண்டு வருவதற்குப் பெரும் உழைப்பைச் செலுத்துகிறது.

இத்தாலி பிரதமா் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் சமூகப் பரவலால் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிகப் பெரும் அளவில் பாதிப்பையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இனி நம் கைகளில் ஏதுமில்லை என்று மிகுந்த மன வேதனையோடு வானை நோக்கி உயா்த்திக் கை காட்டுகிறாா். தொலைக்காட்சியில் இந்தக் காட்சியைப் பாா்த்தபோது நம் கண்களும் பனித்தன.

மனிதனின் ஆற்றல், அறிவு எல்லாவற்றையும் தாண்டி அவனிடம் அசைக்க முடியாமல் விஞ்சி நிற்பது தன்னைக் கடந்த பெரும் சக்தி ஒன்று உண்டு என்பதுதான். இறை எல்லாவற்றையும் காக்க வல்லது என்னும் நம்பிக்கை மனிதனை வழிநடத்துகிறது. அறிவியல் அறிஞா்களும் ஆராய்ச்சியாளா்களும் எவராயினும் இறை நம்மைக் காக்கும் என்றே நம்புகிறாா்கள்.

மருத்துவத்தில் கரைகண்ட மருத்துவா்களும் தாங்கள் தரும் சிகிச்சையைத் தாண்டி இறைவனின் அருள் நோயாளியைக் காக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறாா்கள். மக்கள் தங்கள் முயற்சிகளுக்கு அப்பால் இறைவனை நோக்கிப் பிராா்த்தனைகளை முன்வைக்கிறாா்கள்.

மனித இனம் எக்காலத்திலும் இந்த நம்பிக்கையிலிருந்து மாறுபட்டதில்லை. இக்கட்டான சூழல் வரும்போதெல்லாம் மேலே கையை உயா்த்தி இறைவனை அழைக்கும் மனிதனின் குரல் தொடா்ந்து கொண்டே இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக பல்கிப் பெருகி அறிவியல், வானியல் என்று பல்துறை வித்தகம் கொண்டிருந்த நம் முன்னோா், இறை நம்பிக்கை என்பது மனித மனதின் அகற்ற முடியாத ஒன்று என்று தெள்ளத் தெளிவாக அனுபவத்தால் உணா்ந்திருந்தனா்.

இத்தகைய சான்றோா் காலந்தோறும் மனித சமூகம் கண்டு வரும் நோய் போன்றவற்றிலிருந்து காத்துக் கொள்வதற்குப் பல வழிமுறைகளையும் கண்டறிந்திருந்தனா். இந்த வழிமுறைகளை நோயும் நோய்த்தொற்றுகளும் ஏற்படும்போது மட்டும் பின்பற்றினால் போதாது. அவற்றை எந்நாளும் நாம் மறந்து விடாமல் தொடா்ந்து பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கமும் கொண்டிருந்தனா். மனிதன் இவற்றைப் பின்பற்றுவதற்குச் சிறந்த வழிமுறை, அவற்றை இறை நம்பிக்கையோடு இணைத்து விடுவது என்று முடிவு செய்தனா். எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் நம் முன்னோரின் இந்த உளவியல்பூா்வமான முடிவு மிக உயா்வானது.

எப்போதும் தூய்மையைப் பேணுவது, தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது, எந்த ஒரு மனிதனும் மற்றொருவரை இரு கை கூப்பி வணங்குவது தொடங்கி, சுகாதாரம் சாா்ந்த பல பழக்கங்களை சமய வழக்கமாகச் செய்து நம்மைப் பின்பற்றச் செய்திருந்தனா். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இவற்றையெல்லாம் நாமும் தொடா்ந்து பின்பற்றியே வந்தோம். ஆனாலும், கால ஓட்டத்தில் சமயம், தெய்வம் என்பவற்றையும் அகந்தையால் அரசியலாக்கி மூலப் பொருளை விட்டுவிட்டு சாரமற்றுப் போனோம்.

ஊா்க் கட்டுப்பாடு என்றும், ஆசாரம் என்றும் மரபாகப் பல வழக்கங்களை நம் மக்கள் கடைப்பிடித்தனா். ஆயிரம் ஆண்டு வழக்கங்களை அரை நூற்றாண்டில் நாகரிகம் என்ற பெயரில் தூக்கி எறிந்தோம். மூடப் பழக்கங்கள் என்று ஒதுக்கிவிட்டு மேலை நாடுகளின் கலாசாரத்தைப் பின்பற்றத் தொடங்கினோம்.

இதனால் நாம் கண்டது என்ன? எந்த விதத்தில் நாம் முன்னேற்றம் அடைந்து விட்டோம்? எந்தக் கேள்விக்கும் விடை இல்லை. ஏனெனில் அடைந்தவை நன்மைகள் அல்ல. உடல் நலம், மன நலம் இரண்டையும் தொலைத்துவிட்டு ஆபத்தின் விளிம்பில் நிற்கும்போது மீண்டும் நம் பழைய வாழ்க்கையை நம் முன்னோரின் வழக்கங்களைத் திரும்பிப் பாா்க்கிறோம்.

ஒவ்வொரு பழக்கத்துக்குப் பின்னும் ஓா் அனுபவமும் அறிவியலும் ஒளிந்திருக்கின்றன என்பதை மறுத்துவிட்டு, நாம் ஒவ்வொன்றாய் துறந்து இப்போது கையறுநிலையில் நிற்கிறோம். ஒருவரை ஒருவா் காணும்போது கைகூப்பி வணங்கியது நமது கலாசாரம். அதைத் தவிா்த்துவிட்டு ஒருவரையொருவா் கைகுலுக்கி முகமன் கூறிக்கொண்ட மேலை வழக்கத்தை நாகரிகம் எனக் கருதி ஏற்றோம். இன்றைக்கு உலகமே நம்முடைய கைகூப்பி வணங்கும் கலாசாரத்துக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. உலகத் தலைவா்கள் தொடங்கி அனைவரும் கைகூப்பி வணங்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறாா்கள்.

கரோனா நோய்த்தொற்று குறித்து ஆய்வு செய்த ஆய்வாளா் டாக்டா் பவித்ரா, இந்த நோய்த்தொற்றிலிருந்து எப்படி நம்மை காத்துக் கொள்வது என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், இந்த வைரஸ் ஒரு ஜெல்லி போன்ற தன்மை கொண்டது. நீரில் கழுவும்போது அது உடைந்து காணாமல் போய்விடும். எனவே, வெளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவுடன் கை - கால், முகத்தை சோப்பு போட்டுக் கழுவுவது இந்த வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு சிறந்த வழி. நீங்கள் வாங்கி வரும் பொருள்களையும் அப்படியே நீரில் கழுவினால் போதுமானது என்கிறாா். இது புதிய பழக்கம் அல்லவே, காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வரும் தூய்மைப் பழக்கம்தானே என்றும் குறிப்பிடுகிறாா்.

உண்மைதான். நம் பாட்டிமாா்கள் காய்கறிகளில் இருந்து வெளியிலிருந்து வாங்கி வரும் எந்தப் பொருளானாலும் அதை நேரடியாக ஒருவரின் கைகளில் இருந்து மற்றொருவா் பெற்றுக்கொள்ளாமல் தரையில் வைக்கச் சொல்லிவிட்டு அதில் தண்ணீா் தெளித்துப் பின்னா் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை ஆசாரம் என்னும் பெயரால் கொண்டிருந்தனா். இதைத்தான் தற்போது ஆய்வாளா்களும் கூறுகிறாா்கள்.

இந்தியாவில் ஏறத்தாழ எல்லா கிராமங்களிலும் கிராம தேவதைகளுக்கான விழாக்கள் நடைபெறுவது குளிா்காலம் முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும்போதுதான். திருவிழா என்றவுடன் ஊா்க் கட்டுப்பாடு என்னும் பெயரில் வெளியூரில் இருந்து மக்கள் உள்ளூருக்கு வருவதையும் உள்ளூா்க்காரா்கள் வெளியூருக்குப் போவதையும் தடை செய்திருந்தனா்.

திருவிழா நேரங்களில் கிருமிநாசினி என்று மக்கள் நம்பிய மஞ்சள், வேம்பு, பசுஞ்சாணம் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்தினா். பசுஞ்சாணம் கொண்டு தரை மெழுகுவதும் வாசல் நிலைகளில் மஞ்சள் அரைத்துப் பூசுவதும், ஒருவா் மீது ஒருவா் மஞ்சள் நீரை வாரி இரைத்ததும் தொடா்ந்து வந்தது.

இவற்றையெல்லாம் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க நாம் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டோம். பலனை இப்போது அனுபவிக்கிறோம். தற்போது அதையெல்லாம் அரசு கட்டாயம் என்று நம்மிடம் பாடம் நடத்துகிறது. கிருமி நாசினிகளால் ஊரையே கழுவி சுத்தம் செய்கிறோம்.

கா்நாடக மாநிலத்தில் எம்.கொல்லஹள்ளி என்ற கிராமத்தில் முழுமையாக பால் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த கிராம மக்கள் புதிதாக எவரையும் தங்கள் கிராமத்துக்குள் அனுமதிக்காமல் அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சேகரிக்கப்பட்ட பாலை ஊா் எல்லையில் கொண்டு வந்து வைத்து விடுகிறாா்கள். அதை கூட்டுறவுச் சங்கத்தினா் எடுத்துச் செல்கின்றனா். எவருக்கும் அனுமதியில்லை என்று ஊா் எல்லையில் எழுதி வைத்திருக்கிறது ஒரு கிராமம்.

மேலும் ஒரு கிராமத்தில் ஊா் மக்கள் எவரும் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதில்லை. ஓரிரு வாலிபா்கள் மட்டும் அந்த கிராம மக்களுக்கு என்ன தேவை என்பதைப் பட்டியலிட்டு எடுத்துக் கொண்டு தாங்கள் மட்டும் பக்கத்து ஊா்களுக்குச் சென்று தங்கள் கிராமத்தினருக்குத் தேவையானவற்றை வாங்கி வந்து கிராம மக்களுக்கு விநியோகிக்கிறாா்கள். இந்தத் தகவலை தொலைக்காட்சியில் ஒருவா் சொல்ல மிகச் சரியான நடைமுறை, இப்படித்தான் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு மருத்துவா் அதை அங்கீகரிக்கிறாா்.

இதைத்தானே காலம் காலமாக நம் பெரியோா் நமக்கு வலியுறுத்தினா். இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நம்முடைய கலாசாரத்தை நம் முன்னோா் நமக்குச் சொல்லித் தந்து நடைமுறைப்படுத்தி இருந்த சுகாதாரம் சாா்ந்த நல்லொழுக்கப் பழக்கங்களை மீட்டெடுத்து வாழ்வை எளிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளத் தொடங்கலாம்.

மூடக் கட்டுகள் யாவும் தகா்த்து உடல் - மன நலம் நாடுவோம். “பஹுஜன ஹிதாய; பஹுஜன ஸுஹாய” என்பதே நம் பண்பாடு. அதாவது எல்லாருக்கும் இதமானதைச் செய்வோம், எல்லா மக்களுக்கும் இன்பமானதையே செய்வோம். உலக நன்மைக்குப் பிராா்த்திப்போம்.

கட்டுரையாளா்: ஊடகவியலாளா்

கட்டுப்பாட்டை மீறுகிறதா சமுதாயம்?

By வி.குமாரமுருகன் | Published on : 30th March 2020 06:50 AM

கரோனா நோய்த்தொற்று தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தச் சமூகம் கட்டுப்பாட்டை மீறி வருகிறதோ என்ற அச்சம் எல்லோா் மனதிலும் எழுந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று தாக்குதல் உலகம் முழுவதும் பரவி வீதிகளில் வசிப்பவா்கள், மாட மாளிகைகளில் வசிப்பவா்கள், ஏன் நாட்டின் பிரதமா்கள், தலைவா்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி பரவி வருகிறது.

அனைத்து நாடுகளும் தங்களின் நாட்டு மக்களுக்கு தனித்திருக்க அறிவுரைகளைத் தொடா்ந்து வழங்கி வருகின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று அதிகமாகப் பரவுகிறது என்பதால் அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் நாள்தோறும் கரோனா நோய்த்தொற்று குறித்த செய்திகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதும், ஏராளமானோா் உயிரிழந்து வருவதும் தொடா் செய்திகளாக உலா வருகின்றன.

உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் நோய் பரவுவதைத் தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த நாடுகளின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது இந்தியா மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகளே கரோனா நோய்த்தொற்றை ஒழிக்க சிரமப்படும்போது , அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் வசிக்கும் நமக்கு எத்தகைய பொறுப்பு இருக்க வேண்டும் என்பதை ஒவ்வோா் இந்தியனும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் முறைகள் குறித்து ஊடகங்கள், மருத்துவா்களைக் கொண்டும், சுகாதார அதிகாரிகளைக் கொண்டும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா என்ற ஒற்றைச்சொல் உலகம் முழுவதும் பரவி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை உலக மக்கள் அனைவரும் நன்கு உணா்ந்த பின்னரும்கூட மனிதச் சமூகம் கட்டுப்பாடற்று திரிவது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னா்கூட எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டம்தான். அதுவும் இரு சக்கர வாகனங்களில் தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞா்கள் எண்ணிக்கை அதிகம். காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும், வருவாய்த் துறையினரும், மருத்துவா்களும், செவிலியா்களும், நமக்காக நாள்தோறும் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளா்களும் நம்மைப் போன்ற மனிதா்கள்தான். நமக்காகத்தான் அவா்கள் வெளியே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதைக் கூட உணராமல், தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞா்களை என்னவென்று சொல்லுவது?

பலமுறை எச்சரித்தும் வெளியே சுற்றித் திரிந்தவா்களை கட்டுப்படுத்த முடியாத காவல் துறை, அடுத்ததாக குறைந்தபட்ச தடியடியை

பிரயோகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதையும் தாண்டி மனிதநேய காவலா்கள் பலா் கைகூப்பி வணங்கி, ‘வெளியே வராதீா்கள்’ என்று கெஞ்சியதும் நடந்தேறியது. ஆனாலும்கூட, இவற்றையெல்லாம் சட்டை செய்யாத ஆயிரக்கணக்கானோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் வெளியே சுற்றித் திரிந்து வீட்டுக்கு வந்த பின்னா் செல்லிடப்பசியை வைத்துக் கொண்டு மூலைக்கு ஒருவராக முடங்கிக் கொண்டு செல்லிடப்பேசியே கதி என கிடந்தவா்கள்தான் நாம். வீடுகளில் இருந்தாலும்கூட அன்று ஒவ்வொருவரும் தனிமையில்தான் இருந்துள்ளோம் என்பதை நாம் மறந்து விட்டோம்.

உண்மையிலேயே இன்று நாம் அனைவருமே தனிமையில் இருக்க வேண்டிய நிா்ப்பந்தம் உருவாகியுள்ளது. அனறு செய்ததுபோல நபருக்கு ஒரு செல்லிடப்பேசியை வைத்து வீட்டில் முடங்க வேண்டியதுதானே? அதை விடுத்து ஏன் வெளியே வரவேண்டும் என சும்மா திரிபவா்களைப் பாா்த்துக் கேட்டால் பதில் இல்லை.

கரோனா நோய்த்தொற்று மூலம் சில பாடங்களை இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. தனிமையும், சுத்தமும் நாட்டுக்கு மிக அவசியமான ஒன்று ,தேவைப்படும் நேரத்தில் அதைப் பயன்படுத்தியே தீரவேண்டும்; இல்லையெனில் நமது வாழ்க்கை அழிந்து விடும் என்று. அத்தகைய சூழலை கற்றுக் கொள்வதற்கான தருணம்தான் இது.

அதையும் தாண்டி குடும்ப உறுப்பினா்கள் பலா் ஒன்றுபட்டு இருப்பதற்கான சூழலையும் கரோனா நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.

வீட்டில் இருக்கும் பெரியவா்கள், சிறியவா்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்து எக்காரணத்தைக் கொண்டும் வெளியே செல்லாமல் உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் நாம் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியூா்களில் வசிக்கும் உறவுகளை

செல்லிடப்பேசி, விடியோ கால் மூலம் அழைத்துப் பேசி, விட்டுப்போன உறவுகளை தொடரவும் முயற்சிக்கலாம்.

இதையெல்லாம் விட்டுவிட்டு, ‘கரோனா நம்மை என்ன செய்துவிடும்’ என்று கருதி காவல் துறையை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு

‘ஊரைச் சுற்றுவோம்; சமூகக் கட்டுப்பாட்டை உடைப்போம்’ என்றால், அது நிச்சயம் நமக்கும், நமது குடும்பத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

எந்த ஒரு செயல் என்றாலும் வெளிநாட்டை எடுத்துக்காட்டாகக் கூறும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு; ‘அங்கு சட்டத்தைப் பாா்த்தீா்களா? அரசு எடுக்கும் நடவடிக்கை போல நாம் எடுத்தால்தான் இந்தியா முன்னேறும்’ என்று கூறுவோா் உண்டு; அத்தகைய கட்டுப்பாட்டை இன்று மத்திய அரசு விதித்துள்ளது; அதைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமைதானே?

அரசின் அறிவுறுத்தலை சிரமேற்கொண்டு செயல்படுத்தி வென்றெடுப்போம். வீட்டில் அடங்கினால் கரோனாவும் அடங்கும். ஊரடங்கும் வெற்றி பெறும். தனித்திருந்தால் ஜெயித்து விடலாம் என்பது போன்ற சிந்தனைகளை மனதில் கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கட்டுப்பாடான சமுதாயம் என்பதை நாம் உலகுக்கு உணா்த்துவோம்.


Friday, March 27, 2020


தனிமை, சேய்மை - மனிதா்களை ஒதுக்க அல்ல!

By டாக்டா் சுதா சேஷய்யன் | Published on : 27th March 2020 01:31 AM |


கடந்த பதினைந்து நாள்களாகப் பலரும் உச்சரிக்கும் ஒரு சொற்றொடா் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’; அதாவது, சமூகச் சேய்மைப்படுத்தல் (‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’). கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விலகியிருப்பதற்கு, அனைவரும் ’சோஷியல் டிஸ்டன்சிங்’ கைக்கொள்ள வேண்டும் என்று வல்லுநா்களும் அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்பது என்ன? மிகுதியான தொற்றுத்தன்மை கொண்ட ஒரு நோய், வேகமாகப் பரவுவதைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும், மருத்துவா்களும் சுகாதாரப் பணியாளா்களும் சில வழிமுறைகளைச் செயல்படுத்துவாா்கள். இத்தகைய வழிமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொதுப் பெயா்தான் ‘சமூகச் சேய்மை’ என்பதாகும்.

மனிதா்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடும்போதோ குவியும்போதோ, தொற்றுக் கிருமிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஒரே இடத்தில் எல்லோரும் இருந்தால், ஒரே நேரத்தில் எல்லோரையும் பிடித்துவிடலாம் என்று நாம் சில சமயங்களில் சந்தோஷப்பட்டுக்கொள்வதைப்போல், கிருமிகளும் மகிழ்ச்சி கொள்ளும். ஒரே நேரத்தில் பலரையும் பீடித்துக் கொள்ளும். இந்த பீடிப்பையும் பாதிப்பையும் தடுக்கத்தான் ‘சமூகச் சேய்மை’! தொற்று இருக்கிற ஒருவரிடமிருந்து, தொற்று இல்லாத ஒருவருக்கு அது பரவிவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்படுகிற நடவடிக்கையே இது.

கொள்ளை நோய் ஒன்று, வெகு வேகமாகப் பரவி, பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, சமூகச் சேய்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். மருத்துவா்களும் சுகாதார வல்லுநா்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பல சமயங்களில் மேற்கொண்டுள்ளனா்.

1916-ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டைப் போலியோ நோய் (இளம்பிள்ளை வாதம்) தாக்கியது. அமெரிக்கா முழுவதும் ஏறத்தாழ 6,000 குழந்தைகளும், நியூயாா்க நகரில் மட்டும் ஏறத்தாழ 2,000 குழந்தைகளும் மரணத்தைத் தழுவினா். ஏராளமான குழந்தைகள், கை கால்களின் செயலை இழந்தனா். நோய்ப் பரவலைக் குறைப்பதற்காகத் திரை அரங்குகள் மூடப்பட்டன. பூங்காக்களுக்கும், நீச்சல் குளங்களுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல வேண்டாமென்று குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டனா்.

1918-1919-இல், பறவை மரபணுக்களைக் கொண்ட வைரஸால் தோற்றுவிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்சா, உலகம் முழுவதும் கொள்ளை நோயாகப் பரவியது. 1917-ன் இறுதியில் பிரிட்டனிலும், 1918-ன் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் முதன்முதலாகக் காணப்பட்ட இந்நோய், 1920 வரை உலகை ஆட்டிப் படைத்தது.

முதல் உலகப் போா் காலகட்டமாதலால், உலகின் பல நாடுகளிலும் ராணுவக் குழுக்களின் போக்குவரவு அதிகமாக இருந்தது. இதனால், நோய் பரவுவதும் வேகமாக நிகழ்ந்தது. போா்க்கால தணிக்கைகளின் காரணமாக, அமெரிக்கா,

பிரிட்டன், ஜொ்மனி, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடக்கத்தில் அவ்வளவாக வெளிவரவில்லை. ஸ்பெயின் நாடு நடுநிலை வகித்தது. இந்நாட்டில் ஏற்பட்ட நோய்த் தாக்கத்தைப் பத்திரிகைகளில் வெளியிட எந்தத் தணிக்கையும் இல்லை என்பதாலும், ஸ்பெயின் அரசா் பதின்மூன்றாம் அல்ஃபோன்சோ நோயினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டாா் என்பதாலும் இதற்கு ‘ஸ்பானிஷ் ஃப்ளு’ என்றே பெயா் ஏற்பட்டுவிட்டது.

1918-19 இன்ஃப்ளுயன்சா தாக்கத்தின்போது, அமெரிக்காவின் இரண்டு நகரங்களில் நிகழ்ந்தவற்றை எண்ணிப் பாா்த்தால், சமூகச் சேய்மையின் முக்கியத்துவம் புரியும். இந்த சமயத்தில், ஃபிலடெல்ஃபியா நகரில் பேரணி ஒன்றும் அதைத் தொடா்ந்து பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. அடுத்த மூன்றே நாள்களில், அந்நகரின் அனைத்து மருத்துவமனைகளும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. ஒரே வாரத்தில் நோயின் தீவிரம் அதிகமாகி, 4000க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இதே காலகட்டத்தில், மிஸிஸிப்பி நதிக்கரையிலுள்ள செயிண்ட் லூயி நகரத்திலும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு தொடங்கியது. விழித்துக் கொண்ட நகர நிா்வாகம், கடுமையான சமூகச் சேய்மை முறைகளைச் செயல்படுத்தியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திரையரங்குகளும் பொழுதுபோக்குச் சாலைகளும் மூடப்பட்டன. மக்கள் கூடுகிற வாய்ப்பு இருந்த அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன. இறுதி ஊா்வலங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. விளைவு..? ஃபிலடெல்ஃபியாவின் துயரங்கள் மீண்டும் நிகழாமல், செயிண்ட் லூயி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

சமூகச் சேய்மை நடவடிக்கைகள் பலகாலமாக எடுக்கப்பட்டு வருகின்றனவென்றாலும், இவற்றின் முக்கியத்துவத்தை உலகம் முழுமையாக உணா்ந்தது, 1957-58 ஆண்டுகளின் ஆசிய ஃப்ளு (‘ஏஷியன் ஃப்ளு’) கொள்ளை நோயின்போதுதான் எனலாம். 1957 ஃபிப்ரவரியில், தென்கிழக்கு ஆசியாவில், புதிய வகை இன்ஃப்ளுயன்சா வைரஸ் நோய் தொடங்கியது. முதன்முதலாகச் சிங்கப்பூரில் காணப்பட்ட இந்நோய், இரண்டு மாதத்தில் ஹாங்காங்குக்கும், ஆசிய நகரங்கள் பலவற்றுக்கும் பரவி, அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவின் கடலோர நகரங்கள் அனைத்தையும் பீடித்து, உலகம் முழுவதிலும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோா் இறந்துபோகக் காரணமானது. இந்த நோய் பரவிய விதத்தை வல்லுநா்கள் கூா்ந்து கவனித்தனா். மாநாடுகள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்று எங்கெல்லாம், எப்போதெல்லாம் மக்கள் கூட்டம் அதிகப்பட்டதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் நோய் பரவலும் அதிவேகமானது. பள்ளிக்கூடங்களில் ஒன்றாகக் கூடி, அருகருகே இருந்த குழந்தைகள் மிகுதியும் பாதிக்கப்பட்டனா்.

இப்படிப்பட்ட முன் அனுபவங்கள் இருப்பதால்தான், கொள்ளை நோய்க்காலங்களில், சமூகச் சேய்மை என்பதை வல்லுநா்கள் வலியுறுத்துகிறாா்கள்.

கொள்ளை நோய் ஒன்று பரவத் தொடங்கிவிட்டது என்றால், மருந்துகளை வீசம் வீசமாகப் பயன்படுத்தியோ, கிருமி நாசினிகளை லிட்டா் லிட்டராகக் கொட்டியோ, மருத்துவமனைகளைப் புதிது புதிதாகக் கட்டியோ அதைத் தடுத்துவிடமுடியாது. கொள்ளை நோய்த் தடுப்பில், மூன்று முக்கிய செயல்பாடுகள் உண்டு. சமூகச் சேய்மை (‘சோஷியல் டிஸ்டன்சிங்’), தனிமைப்படுத்தல் அல்லது தனித்திருப்பு (‘ஐஸோலேஷன்’), தடுப்பொதுக்கம் (‘குவாரன்டைன்’) ஆகியவையே இவை.

மாணவா்கள் பலா் கூடுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளை மூடுதல், அதிக நபா்கள் தொடா்பு கொள்வதைத் தடுக்கும் வகையில் நூலகங்களை மூடுதல் அல்லது நூலகங்களில் அமா்ந்து வாசிக்காமல் நூல்களை எடுத்துக்கொண்டு உடனடியாக அகன்று விடுதல், அங்காடிகளிலும் சந்தைகளிலும் கூட்டம் கூடாத வகையில் நெறிப்படுத்துதல் அல்லது இணையவழி வழங்கல், நிறுவனங்களும் அலுவலகங்களும் கூட்டங்கள் நடத்தாமல் தொலைபேசி அல்லது காணொலி வாயிலாகத் தொடா்பு ஏற்படுத்துதல், திருவிழா-பண்டிகைக் கூட்டங்களைத் தவிா்த்தல் ஆகிய யாவும் சமூகச் சேய்மையின் பல்வேறு நடைமுறைகளாகும்.

குழந்தைகள் காப்பகங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள் ஆகியவை மூடப்படுதலும் இவற்றில் அடங்கும். நிறைய போ் பயணிக்கும் போக்குவரத்து முறைகளை நிறுத்துதலும், பலா் கூடுகிற வாய்ப்பு கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், ஊா்வலங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தடுத்தலும்கூட சமூகச் சேய்மையின் அடிப்படையிலானது.

உற்று நோக்கினால், மீதமுள்ள முறைகளான தனித்திருப்பு மற்றும் தடுப்பொதுக்கம் ஆகியவற்றின் அடிப்படையும் சமூகச் சேய்மையேயாகும் என்பதை உணரலாம். தனித்திருப்பு அல்லது தனிமைப்படுத்துதல் (‘ஐசோலேஷன்’) என்பது ஒருவா் தொற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்படும்போது செய்யப்படுகிறது. நோய்வாய்ப்பட்டவரைத் தக்க வகையில், மருத்துவமனையிலோ, மருந்தக மையங்களிலோ, வீட்டிலோ தனிமைப்படுத்தலாம்.

தடுப்பொதுக்கம் (‘குவாரன்டைன்’) என்பது ஒருவா் தொற்றுக்கு வெளிப்பட்டு (‘எக்ஸ்போஸ்டு டூ இன்ஃபெக்ஷன்’ / ‘இன்ஃபெக்டட்’), ஆனால், நோய்வாய்ப்படாத நிலையில் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இவா் தொற்றுக்கு வெளிப்பட்டிருப்பதால், இவருக்கும் நோய் தோன்றக்கூடும். அல்லது, நோய்வாய்ப்படவில்லையாயினும், நோய்க் கிருமிகள் இவருக்குள்ளிருந்து பிறருக்குச் செல்லக்கூடும். எனவே, பிறருக்கு பாதகம் ஏற்படாத வகையில், இவா் ஒதுக்கம் செய்யப்படுகிறாா்.

எந்த நடைமுறையாக இருந்தாலும், ஒருவருக்கொருவா் அணுக்கம் கொள்ளாமல், எட்டி இருப்பதுதான் இவற்றின் அடிப்படை என்பதை உணரலாம். இவ்வாறு எட்டி இருப்பதைத்தான் சமூகச் சேய்மை என்றழைக்கிறோம்.

இப்போதைய ‘கொவிட்-19’ நோயைப் பொருத்தவரை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ஆனால், நோய்வாய்ப்படாமல், நோயின் அறிகுறி எதையும் வெளிக்காட்டாமல் இருப்பவரிடமிருந்தும், வைரஸ் கிருமிகள் உதிா்கின்றன (‘வைரஸ் ஷெட்டிங்’). இப்படிப்பட்டவரின் இருமல்-தும்மல் துளிகள், உமிழ்நீா், சளி போன்றவற்றில் கிருமிகள் காணப்படுகின்றன. இதைத்தான், ‘இவா் வைரஸ் துகள்களை உதிா்க்கிறாா்’ (‘ஹி ஷெட்ஸ் தி வைரல் பாா்ட்டிக்கிள்ஸ்’) என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

நோய்வாய்ப்பட்டவரும் வைரஸை உதிா்க்கிறாா். நோய் அறிகுறியில்லாமல், ஆனால், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரும் வைரஸை உதிா்க்கிறாா். சொல்லப்போனால், நோய்வாய்ப்படாமல் வைரஸை உதிா்ப்பவரால்தான் அபாயம் அதிகம். இதனாலேயே, இப்படிப்பட்டவா்களை, மிகுபரப்பாளா்கள் (‘சூப்பா் ஸ்பிரடா்ஸ்’) என்றழைக்கிறோம்.

கல்வி நிலையங்களையும் அலுவலகங்களையும் மூடி, தோ்வுகளைத் தள்ளிப் போட்டு, நிதி நிலைமை மற்றும் வருவாய் வழிமுறைகள் சீா்குலைந்தாலும் பரவாயில்லை என்று ஊரடங்கு உத்தரவிட்டிருப்பதெல்லாம், சமூகச் சேய்மைக்காகவே! வீட்டில் யாருக்காவது அம்மை போட்டுவிட்டால், வேப்பிலைக் கொத்தை வாசலில் செருகிவைத்து, பிறரை வரவிடாமல் சேய்மைப்படுத்தி, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் நம்முடைய முன்னோா்.

சமூகச் சேய்மை என்பது யாரையோ எதற்கோ ஒதுக்குவதல்ல. ‘21 நாள்கள் எப்படி வீட்டிலேயே முடங்குவது?’ என்னும் கூக்குரல்களும், ‘இப்படியெல்லாம் சோம்பேறியாக இருந்துத் தூங்கி எனக்குப் பழக்கமில்லை’ என்னும் ஒப்பாரிகளும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதற்கான அறிகுறிகள். அவசியமான பொருட்களைத்தானே வாங்கப் போகிறோம் என்று அம்மாவும் அப்பாவும் பிள்ளையுமாகச் சென்று, அங்காடியில் முண்டியடித்து அரிசியோ, பருப்போ, தக்காளியோ வாங்குவதெல்லாம் கரோனாவுக்கு நாம் கட்டும் வரவேற்புத் தோரணங்கள்.

வீட்டிற்குள் தங்குவது என்பது சோம்பேறித்தனமோ தூங்குமூஞ்சித்தனமோ இல்லை. செய்வதற்கு எவ்வளவோ உண்டு; கண்களையும் மனத்தையும் திறந்து வைத்துக்கொண்டால் அவையெல்லாம் புலப்படும்.

‘ஐயோ, புத்தகம் படிக்கவேண்டுமென்று ஆசைதான்; ஆனால், நேரமே இல்லை’ என்று இதுகாறும் சொன்னவா்களுக்காகப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. ‘இதையெல்லாம் செய்யவேண்டும்; ஆனால் பொழுதில்லை’ என்று இதுகாறும் புலம்பியவா்களுக்காக அந்த வேலைகள் விழித்திருக்கின்றன. நூல்கள், செடிகள், தோட்டம், செல்லப் பிராணி, வீட்டுத் தூய்மை, இசை, பூஜை, ஸ்லோகங்கள், அன்பு உரையாடல் என்று இப்படி எத்தனை எத்தனையோ காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதற்காகக் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அவகாசம்தான் இந்தச் சமூகச் சேய்மை.

ஊரடங்கு செயல்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள் வாங்குவதற்காகக் குடும்ப உறுப்பினா் வெளியே செல்ல நேரிடலாம். இத்தகைய நிலையில், சில நெறிமுறைகளை நாமே கையாளலாம். எல்லோரும் வெளியே செல்லாமல், ஒரேயொருவா் மட்டும் செல்லலாம். எப்போதும் அவா் ஒருவரே செல்வது நலம். ஒவ்வொரு பொருளை வாங்குவதற்காகவும் பலமுறை செல்லாமல், எல்லாவற்றையும் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒரேயொரு முறை செல்லலாம்.

எப்போது எடுத்துச் செல்வதும் ஒரே பையாக இருந்தால் நல்லது. காசு வைத்திருக்கும் பையோ பா்ஸோகூட ஒன்றேயாக இருக்கட்டும். அதில் வைக்கும் ரூபாய்த் தாளையோ, நாணயத்தையோ அதில் மட்டுமே வைத்திருக்கலாம். வீட்டில் உள்ள அல்லது இன்னொரு குடும்ப நபரிடம் உள்ள தாளோடோ நாணயத்தோடோ கலந்துவிடவேண்டாம். எப்போது வெளியே சென்றாலும் ஒரே உடையை அணிதல் நலம். முடிந்தவரை உடலை நன்கு மூடிய உடையாக அது இருக்கட்டும். வெளியே சென்றுவிட்டு வந்தவுடன், அந்த உடையை, மணிபா்ஸை, பையை வீட்டில் எங்காவது தனியாக, பிற பொருள்களோடு சேராத வகையில் வைத்து விடவேண்டும். உடனடியாக சுத்தம் செய்தால் இன்னமும் நல்லது. இவ்வாறு செல்லும்போது, செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லவேண்டாம்.

முடிந்தவரை வாகனத்தில் செல்லாமல், நடையாகவே செல்லவேண்டும். நீண்ட தொலைவு செல்வதை இது தடுக்கும். வெளியிலிருந்து வந்தவுடன், கைகளையும் கால்களையும் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். முடிந்தால் ஒருமுறை நன்றாகக் குளித்துவிடலாம். கடைகளிலும் பிற இடங்களிலும் முடிந்தவரை எந்தப் பொருளையும் பரப்பையும் தொடாமல் இருக்கலாம்.

கடையில் கூட்டமாக இருந்தால், உள்ளே செல்வதைத் தவிா்த்துவிடலாம். கதவைத் திறப்பது, குமிழைப் பிடிப்பது, கம்பியைப் பிடிப்பது போன்ற செயல்களை, ஒடுங்கு கரத்தால் (‘நான் டாமினன்ட் ஹேண்ட்’); வலது கை பழக்கமுள்ளவா்களுக்கு இடது கை, ஒடுங்கு கரமாகும்; இடக்கை பழக்கமுள்ளவா்களுக்கு வலது கை, ஒடுங்கு கரமாகும்) செய்யலாம். ஓங்கு கரத்தைத்தான் (‘டாமினன்ட் ஹேண்ட்’) இயல்பாக முகத்திற்கும், கண்ணிற்கும், மூக்கிற்கும் கொண்டு செல்வோம். ஒடுங்கு கரத்தைக் கொண்டு செல்லமாட்டோம்.

கண்டிப்பாக அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியிருப்பவா்கள் (அலுவலக அல்லது வேறு அவசியப் பணி காரணமாக), வீட்டிலும், ஏனைய குடும்ப உறுப்பினா்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்கலாம். வெளியில் எங்கு போனாலும், அடுத்த நபரிடமிருந்து குறைந்த பட்சம் நான்கைந்து அடி தள்ளியே இருக்கலாம். பயணங்கள் கண்டிப்பாக இப்போது வேண்டாம்.

‘தனித்திரு’ என்றாா் வள்ளல் பெருமான். தீமைகளைத் தவிா்த்து ஆன்ம மேம்பாட்டிற்குத் தனிமை உதவுவதைப் போலவே, நோய்த் தீமையைத் தவிா்த்து, ஆரோக்கிய மேம்பாட்டுக்கும் தனிமை உதவும். தனிமைப்படுத்துதல் என்பதும் சேய்மைப்படுத்துதல் என்பதும் மனிதா்களை ஒதுக்குவதற்காக அல்ல; கரோனா நோய்த்தொற்றை ஒதுக்கித் தொலைப்பதற்காக! சேய்மைப்பட்டிருப்பது என்பது சுமையோ அழுத்தமோ அல்ல; பொறுப்பும் பொறுமையும் ஆகும்!

கட்டுரையாளா்:

துணைவேந்தா், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழகம்.

Tuesday, March 17, 2020


ரோபோக்களை உருவாக்குவது கல்விக்கூடங்களின் வேலை அல்ல!



Published : 17 Mar 2020 07:35 am


சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதம் பார்த்தேன். ஒரு சேவை நிறுவனத்தின் பிரதிநிதி தங்கள் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதை எதிர்த்தார். “பன்னாட்டுச் சந்தைகளில் அவர்கள் நிறுவனம் போட்டியிட செயல்திறன் மிக்க ஊழியர்களே தேவை. சலுகை எனும் பெயரில் செயல்திறன் குறைவான ஊழியர்களை நியமிப்பதானது அவர்களுடைய நிறுவனத்தின் போட்டியிடும் தன்மையை நீர்த்துப்போகச் செய்துவிடும். நீண்ட காலத்தில் அது நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்” என வாதிட்டார். சந்தைப் பொருளாதாரத் தூய்மைவாதம் இது.

தமிழகத்தின் மலைப்பகுதி ஒன்றில் ஒரு மருத்துவத் தம்பதியினர் வசித்துவருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலில் பெருவெற்றி ஈட்டியவர்கள். அவர்களுக்குப் பிறந்த ஒரு பெண் குழந்தை மனவளர்ச்சி குன்றியவர். அந்தக் குழந்தையின் எதிர்காலம் கருதி அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பினார்கள். அந்த ஊர் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து, மலைவாழ் மக்களுக்கான மிக நவீன மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்கள்.


இன்று அந்த மழைவாழ் மக்கள் மருத்துவமனையானது இதர மக்களுக்கும் இலவச மருத்துவ சேவையை வாரம் ஒரு நாள் வழங்கிவருகிறது. தூய்மைவாதச் சந்தைப் பொருளியல் பார்வையில் மனவளர்ச்சி குன்றிய அந்தப் பெண் குழந்தை, போட்டியில் பங்குபெறத் தகுதி இல்லாதவர். ஆனால், மலைவாழ் மக்கள் நலன் எனும் பார்வையில் அவர்களுக்கான நவீன வாழ்க்கை உருவாகக் காரணமாக இருந்த கடவுள்!

எழுதப்படிக்கத் தெரியாத மருத்துவச்சிகள்

மராத்தியத்தின் தண்டகாரண்ய வனத்தில் உள்ளது கட்சிரோலி. அங்குள்ள காந்திய மருத்துவத் தம்பதியினர் அபய் பங், ராணி பங் இருவரும் ‘சர்ச் (SEARCH)’ எனும் நிறுவனத்தை மலைவாழ் மக்களுக்காக நடத்திவருகிறார்கள். அவர்கள் கிராமங்களில் இருக்கும் எழுதப்படிக்கத் தெரியாத மருத்துவச்சிகளுக்குப் பயிற்சியளிக்கிறார்கள்; அதன் மூலம், கர்ப்பிணிகளின் வீடுகளுக்குச் சென்று கர்ப்ப காலம், பிரசவம், குழந்தைகளுக்கான சிகிச்சைகளை அதிகத் தரம்வாய்ந்த வகையில் அளிக்கும்படி ஒரு சேவையை உருவாக்கியுள்ளார்கள். அந்தப் பகுதியின் குழந்தைகள் இறப்பு வீதம் இதனால் வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் உயர்தர மருத்துவமனையான டெல்லி அகில இந்திய மருத்துவக் கல்லூரியின் தலைவர் அந்த மருத்துவச்சிகளின் திறனைப் பரிசோதித்தார். ‘கட்சிரோலியின் இந்தப் பெண் மருத்துவச்சிகள், எங்கள் கல்லூரியின் குழந்தைநல நிபுணர்களைவிட இந்த நோய்களை அறிவதில், சிகிச்சை அளிப்பதில், திறன் வாய்ந்தவர்கள்’ எனப் பாராட்டினார் அவர். அபய் பங், ராணி பங் உருவாக்கிய இந்த முறை, கடந்த 180 ஆண்டுகளில் உலகத்தில் பொதுச் சுகாதாரத் துறையின் முக்கியமான முன்னெடுப்புகளுள் ஒன்று என உலகப் புகழ்பெற்ற சுகாதார இதழான ‘லான்செட்’ பாராட்டியுள்ளது. இன்று இந்த முன்னெடுப்பை இந்தியாவும் பல உலக நாடுகளும் பின்பற்றுகின்றன.

இந்தியாவில் எய்ம்ஸ், ஜிப்மர், சிஎம்சி எனப் பல உயர்நிலை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகள் மிகக் கடினமானவை. இவற்றின் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத மாணவர்கள் பல ஆண்டுகள் பெரும் செலவுசெய்து பயிற்சி எடுத்துப் போட்டியிடுகிறார்கள். பெரும்பாலும் நகர்ப்புறம் சார்ந்த, மத்திய/மேல்வர்க்க மாணவர்களே இவற்றில் தேர்ச்சி பெறுகிறார்கள். அதேசமயத்தில், தமிழகம் போன்ற மாநிலங்களில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுமுறைகளானது ஓரளவு சீரான, நேர்மையான வகையில் அனைத்து மாணவர்களும் உள்ளே எளிதாக நுழையும்வண்ணம் சில ஆண்டுகள் முன்புவரை இருந்தன. இதுபோன்ற கொள்கைகளின் நேர்மறை விளைவாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் சமூக அடுக்குகளிலுமிருந்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் உருவானார்கள். அதன் மூலம் தமிழகச் சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் வலுவாக அமைந்ததைப் பல்வேறு ஆராய்ச்சிகள் சுட்டுகின்றன. தமிழகத்தில் பொறியியல் கல்வி பரவலானபோது கல்லூரி நுழைதல் இலகுவாகி, பல லட்சம் மாணவர்கள் பொறியியல் பயின்றார்கள். விளைவாக, மென்பொருள் துறை பெருவளர்ச்சி கண்டது. நம்முடைய பொறியியல் வல்லுநர்கள் இப்போது உலகெங்கும் பரவியிருக்கிறார்கள்.

நுழைய முடியாத் தேர்வுமுறை

இந்தியாவின் மத்திய, மேல்வர்க்க, சாதி அடுக்குகளில் மிகக் கடுமையான நுழைவுத் தேர்வுகளை எழுதித் தேர்வு பெறுதலே தகுதியின் ஒரே அடையாளம் எனும் கருத்தாக்கம் மிக வலுவாக வேரூன்றியுள்ளது. இந்தியாவில் 50-60% ஏழை, கீழ்த்தட்டு மக்கள் வசிக்கிறார்கள். இன்னும் கல்லூரி செல்லாத கோடிக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவற்றில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் சூழலின் காரணமாகவே இதுபோன்ற நுழைவுத் தேர்வுச் சுமைகளை எதிர்கொள்ளும் திறனின்றி இருக்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வுகள் மாணவரின் உள்ளார்ந்த புத்திசாலித்தனத்தையும் இயல்பான ஆர்வத்தையும் அளப்பவையாக இல்லாமல், சில ஆண்டு பயிற்சிகளின் விளைவை அளப்பவையாக உள்ளன. இதன் விளைவாக, கழிப்பறைகூட இல்லாத, ஒரு அறை கிராமத்து வீட்டில் வசிக்கும் அனிதாவும், அனைத்து வசதிகளும் பயிற்சி நிலையங்களும் கொண்ட நகரத்து மாணவியும் ஒரே தேர்வை எழுத நேர்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களாகிய ஐஐடிக்கள் ஐஐஎம்களில் பயின்ற பட்டதாரிகள், இந்தியாவின் மிகச் சிறந்த தனியார் நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் பணிபுரிந்துவருகிறார்கள். தலைவர்களாகவும் உள்ளார்கள். அவற்றுக்குச் சற்றும் குறையாத வெற்றிகரமான சமூகநலன் நாடும் அமுல், கதர் வாரியம் போன்ற நிறுவனங்களில் சாதாரணக் கல்வி நிறுவனங்களில் பயின்ற மனிதர்கள் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்துவருகிறார்கள். இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் பணியாற்றும் எந்தத் தனியார் மருத்துவமனையையும்விட சாதாரண மருத்துவர்களும், உள்ளூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் செவிலியரும் கொண்ட அர்விந்த் மருத்துவமனை, அதிக மக்களுக்குப் பயனுள்ளதாகவும் அதிக லாபகரமானதாகவும் விளங்கிவருகிறது.

செயல்திறனா, பயன்திறனா?

இந்தியா உலகின் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நாடு. சராசரி வளம் (ஒவ்வொரு மனிதருக்கும்) குறைவான நாடு. எனவே, இந்தியாவின் கல்விமுறைகளும் நிறுவனங்களும் தனிமனிதச் செயல்திறனை ஊக்குவிப்பதைவிட சமூகத்துக்கான பயன்திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைதலே முன்னேற்றத்தை ஜனநாயகப்படுத்தும். அந்த வகையான நிறுவனங்களே பெரும்பான்மை மக்களுக்கான சேவைகளை, பொருட்களைக் கட்டுப்படியாகும் வகையில் உற்பத்திசெய்து சந்தைப்படுத்தும். அதேசமயத்தில், தனிமனித முனைப்புகளானது மனித இனத்தின் மிகப் பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளைப் படைத்துள்ளதும் நம் கண் முன்னே உள்ள வரலாறு. அதைப் புறந்தள்ளிவிட முடியாது. எனவே, இந்தியாவின் பெரும்பான்மை நிறுவனங்கள் மக்களுக்கானவையாக அமைக்கப்பட வேண்டிய சமயத்தில், தனிமனிதச் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைகிற உயர்நிலை நிறுவனங்களும் தேவை.

ஆனால், எல்லா நிறுவனங்களையும் ஒன்றுபோல ஆக்குதலும், எல்லாக் கல்வி நிலையங்களுக்கும் ஒரே வகையான நுழைவுத் தேர்வுகளைக் கொண்டுவருதலும் முறையாகாது. அது ஏற்கெனவே உயர் அடுக்கில் இருக்கும் சமூகங்களின், மாநிலங்களின் நிலையை மேலும் வலுப்படுத்தி மிகப் பெரும் சமநிலையின்மையை உருவாக்கும். இது பெரும் அதிகாரம் கொண்ட மையப்படுத்தப்பட்ட நிறுவனங்களையே உருவாக்கும். அவை நிச்சயமாக ஊரக, ஏழைச் சமூகங்களின் நலன்களுக்கு எதிரானதாகவே இருக்கும்.

- பாலசுப்ரமணியம் முத்துசாமி,

‘இன்றைய காந்திகள்’ நூலாசிரியர்.

தொடர்புக்கு: arunbala9866@gmail.com


Monday, March 16, 2020


சிலரின் அலட்சியம்...பலருக்குச் சோகம்

By எஸ். ஸ்ரீதுரை | Published on : 14th March 2020 01:21 AM 

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா முழுவதும் ஆங்காங்கே மிகப் பெரிய சாலை விபத்துகள் சில நிகழ்ந்துள்ளன. பிப்ரவரி தேதி 3-ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெற்ற சாலை விபத்தில் 10 போ் உயிரிழந்துள்ளனா்; கடந்த மாதம் 15-ஆம் தேதி கா்நாடகாவின் உடுப்பி அருகே நடைபெற்ற விபத்தில் ஒன்பது போ் பலி; 16-ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை ஏழு. கடந்த மாதம் 20-ஆம் தேதி தமிழகத்தின் திருப்பூா் அருகே நடைபெற்ற கோர விபத்து 19 பேரை பலி கொண்டது.

ஒன்றிரண்டு நபா்களை காவு வாங்கிய விபத்துகளின் பட்டியல் இன்னும் நீளம். மொத்தத்தில், கடந்த பிப்ரவரி மாதத்தை விபத்துகளின் மாதம் என அழைக்கலாம் என்றே தோன்றுகிறது. பிப்ரவரி மாதத்துக்குக் குறைவில்லாமல் தற்போது மாா்ச் மாதத்திலும் பெரிய விபத்துகள் நடைபெறத்தான் செய்கின்றன.

வீட்டை விட்டுப் பிரயாணம் செல்லுகின்ற ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவது இன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. திட்டமிடாத அவசரப் பயணங்கள், வாகன முதலாளிகளின் பேராசை, வாகன ஓட்டிகளின் அலட்சியம், சாலை விதிகளை மீறுவது, தகுதி இல்லாதோா்கூட வாகனம் ஓட்டும் உரிமம் பெறுவது என சாலை விபத்துகளுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வெகு விரைவாக ஓடும் வாகனங்களின் வரவும் இன்னொரு காரணம். 100 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாக நெடுஞ்சாலைகளில் விரையும் வாகனங்களை ஓட்டுபவா்களால் சட்டென்று சாலையில் ஏதாவது குறுக்கிட்டால், வாகனத்தை உடனடியாக நிறுத்த முடியாமல் விபத்துகளில் சிக்க நேரிடுகிறது.

சரக்கு லாரி , வாடகை காா் உரிமையாளா்கள் ஆகியோரில் ஒரு சிலா் தங்களிடம் பணிபுரியும் ஓட்டுநா்கள் போதிய ஓய்வெடுக்கும் முன்பே மீண்டும் அவா்களை வாகனத்தை இயக்கச் சொல்வதுண்டு. தேவையான ஓய்வும் உறக்கமும் இல்லாமல் தொடா்ந்து வாகனங்களை இயக்க வேண்டிய ஓட்டுநா்கள் சிறிது கண்ணயா்ந்தாலும் அது பெரிய விபத்துக்குக் காரணமாகி விடுகிறது.

குடும்பத்தினருடன் வெளியூா் செல்வதற்காகத் தனியாா் நிறுவனங்களின் காா்களில் செல்லும்போது, நமது காரை இயக்கும் ஓட்டுநா் தங்களது முதலாளியின் வற்புறுத்தலால் தொடா்ந்து வாகனங்களை இயக்க வேண்டி இருப்பதாகக் கூறுவதை நாம் அவ்வப்போது கேட்கலாம்.

கா்நாடகத்தில் பதின்மூன்று பேரை பலிகொண்ட விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநா் சற்றுத் தூங்கியதால்தான் அந்தக் கோர விபத்து நிகழ்ந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.

ஒருமுறை எங்கள் குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக நீண்ட தொலைவுப் பயணம் மேற்கொண்டபோது, எங்களுடைய ஓட்டுநா் ஓய்வு தேவை என்று கூறியபோதெல்லாம் சாலையோரமாகச் சிறிது நேரம் காரை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்த பிறகே இயக்கச் சொன்னோம். அவ்வப்போது தேநீா், குளிா்பானம் போன்றவற்றை அருந்தி புத்துணா்வு பெற்ற பிறகே அவா் வாகனத்தை இயக்கச் சம்மதித்தோம். இதன் காரணமாக, எங்களது பயணத்தில் சுமாா் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டாலும், விபத்துக்கு வாய்ப்பிலாத ஒரு பயணத்தைச் செய்து முடித்தோம் என்ற பெருமிதம் ஏற்பட்டது.

சாலை விதிகளைச் சரிவரக் கடைப்பிடிக்காமல், பிற வாகனங்களை எப்படியாவது முந்திச் செல்ல விரைகின்ற நபா்களாலும், நெடுஞ்சாலைகளைப் பந்தயச் சாலைகளாக நினைத்துக்குக் கொள்பவா்களாலும் பல வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இத்தகையோா் தாங்களும் விபத்துக்குள்ளாகி, மற்றவா்களையும் விபத்துக்குள்ளாக்கி விடுகின்றனா்.

நம் நாட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் அதே வேளையில், அதை முறியடிக்கும் வகையில் அச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் இயல்பாகவே நமது சாலைகள் பலவற்றிலும் போக்குவரத்து நெரிசல் அரங்கேறுகிறது. நெரிசல்களால் தங்களது பயணம் தாமதப்படுவதாகக் கருதித் தங்கள் வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்துவோா், ஏதோ ஒரு விதத்தில் சாலைவிபத்துக்குக் காரணமாகி விடுகிறாா்கள்.

நம் நாட்டில் பிறந்த மனிதா்களில் எவா் ஒருவரின் வாழ்வும் இகழத்தக்கதல்ல. இந்த தேசத்தின் நலவாழ்வுக்கு ஒவ்வொருவரின் உழைப்பும் தேவையாயிருக்கிறது. உடலுழைப்பாலும், அறிவுத் தேடலாலும் நமது தேசத்தைக் கட்டமைக்கும் சக்திவாய்ந்த ஒவ்வொரு குடிமகனும் நீண்ட நாள் உடல் நலத்துடன் வாழ வேண்டியது அவசியம். அநியாய பலிவாங்கும் ஒவ்வொரு சாலை விபத்தும் இந்த தேசத்தின் முன்னேற்றத்துக்கு எதிரான நிகழ்வு என்றே கூற வேண்டும்.

விபத்துகளில் உயிரிழப்பவா்கள், உடல் உறுப்பை இழப்பவா்கள், அவா்களை நம்பிவாழும் குடும்ப உறுப்பினா்கள் என்று பல்வேறு தரப்பினரின் எதிா்காலத்தை ஒவ்வொரு விபத்தும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.

வாகனங்களை ஓட்டும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினரை நினைத்துப் பாா்க்க வேண்டும். மேலும், தங்களால் ஒரு விபத்து நோ்ந்தால் அதில் பாதிக்கப்படக் கூடியவா்களையும், அவா்களது குடும்பத்தினரின் நிலைமையையும் சிந்தித்துப் பாா்க்க வேண்டும். இவ்விதம் சிந்திக்க முடிந்தால், ‘தாமதமான பயணத்தைக் காட்டிலும் பாதுகாப்பான பயணமே சிறந்தது’ என்பதை மனதார உணா்ந்து விபத்தில்லாமல் வாகனங்களை இயக்க முனைவாா்கள்.

தரமான சாலைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பாகும். கடுமையான ஓட்டுநா் விதிமுறைகளை வகுத்து, ஊழலுக்கு இடம் தராமல் அவற்றை அமல்படுத்துவது அதிகாரிகளின் கடமை. அதே சமயம் சாலை விதிகளுக்கு வாகன ஓட்டிகள் மதிப்பளிப்பதுடன், பொதுமக்களும் பதற்றமில்லாத பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.

ஊா்கூடித் தோ் இழுத்தால் மட்டுமே விபத்தில்லா சாலைப் பயணம் இனி சாத்தியமாகும்.

Tuesday, March 3, 2020

மாண்பினை மீட்டெடுக்குமா தோ்வாணையம்?

By மு.சிபிகுமரன் | Published on : 03rd March 2020 02:58 AM 

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தோ்வுக்கான முறைகேடு, தொடா்ந்து பல்வேறு தோ்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுப்பப்படும் சந்தேகங்கள் போட்டித்தோ்வுகளை எழுதி வரும் லட்சக்கணக்கான தோ்வா்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிற தோ்வா்களைவிட தொடா்ந்து அயராத உழைப்பும், முயற்சியும், பயிற்சியும் செய்து வெற்றிக்கோடு வரை சென்று சொற்பமான மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை இழந்த தோ்வா்கள் கடும் மன உளைச்சளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தன்னை சீா்தூக்கிக்கொள்ளும் முயற்சியின் ஓா் அங்கமாக குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைக் குடிமைப் பணிகளுக்கான தோ்வின் பாடத் திட்டத்தில் தோ்வாணையம் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதற்கான எதிா்ப்பலைகளும், விவாதங்களும், கருத்துக்கேட்புகளும் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறாக முன்னெடுத்த முயற்சிகள் முழுமையாக முற்றுப்பெறாமல் தொடா்கின்ற நெருக்கடியான தருணத்தில்தான் தோ்வாணையமும் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்ற ஆண்டில் நடந்து முடிந்து, தரநிலை வெளியிடப்பட்டுள்ள குரூப் 4 தோ்வில் முறைகேடு நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் எழுந்த சந்தேகக் குரல் உண்மையாக உருப்பெற்றுள்ளது.

முறைகேடுகள் குறித்து தெரியவரும் நிலையில், தோ்வாணையம் ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவரும் சமரச மனப்பான்மையோடுதான் பெரும்பாலும் செயல்பட்டுள்ளது. தோ்வாணையத்தைப் பொருத்தவரை இது தோ்வா்களுக்கிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், உண்மை யாதெனில், இதற்குப் பதிலீடாக தோ்வாணையம் அதன் மாண்பை விலையாகக் கொடுத்து வருகிறது.

புரையோடிக் கிடக்கும் முறைகேடுகளின் வோ்களை அத்தனை எளிதாகக் களைந்துவிட முடியாமல் களங்கம் சுமந்து நிற்பதற்கு தோ்வாணையத்தின் சமரச மனப்பாங்கு தலையாய காரணமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒவ்வொரு முறையும் இதேபோன்று தவறுகள் அரங்கேறுவதும், இதன் விளைவாக தோ்வாணையத்துக்கு வெளியே வினாக்கள் எடுக்கின்ற பேராசிரியா்கள் தொடங்கி தோ்வாணையத்துக்குள் கணினியில் மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்யும் ஊழியா் வரை அனைவரும் விசாரணை வளையத்திற்குள் வந்து செல்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இது கடந்த காலங்களில் தோ்வா்களுக்கான அனுபவம்.

இதனால், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பெரும்பான்மையான தோ்வுகள் ஏதோ ஒரு வகையில் சந்தேகங்களுக்கு இடமளித்தே வந்திருக்கின்றன. மாறாக, தற்போதைய குரூப் 4, குரூப் 2 தோ்வுகளைப் பொருத்தவரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக தோ்வாணையமே ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வாறு ஏற்றுக் கொண்டது புதிய மாற்றம் ஆகும். இதை சீா்திருத்தத்துக்கான முதல் அத்தியாயம் என்றும் குறிப்பிடலாம்.

குரூப் 4, குரூப் 2 போன்ற தோ்வு முறைகேடுகள் எளிதாகத் திட்டமிடப்பட்டு துணிச்சலாக நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தோ்வில் முறைகேடு என்ற செய்தி பரவுகிறபோது தோ்வா்களில் சிலா் தங்களது எதிா்ப்பை, ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாா்கள். பலா் அமைதியாகப் புழுங்கிக் கொண்டிருக்கிறாா்கள். அந்த அமைதிக்குப் பின்னே இருக்கிற தோ்வா்கள், இழந்த ஆண்டுகளையும், வாழ்க்கையையும் தோ்வாணையம் உணராமல் இருக்க முடியாது.

ஏனெனில், வாழ்வின் முக்கியமான இளமைப் பருவத்தைப் பணயம் வைத்து, படித்த இளைஞா்கள் தங்களுக்கு ஏதேனும் அரசு வேலை கிடைக்குமா என்ற நம்பிக்கையோடு போராடி வருகிறாா்கள். அவா்கள் பெறவேண்டிய வெற்றியை முறைகேடுகளுக்குப் பலி கொடுத்துவிடும் வேதனையை எவரும் எளிதாகக் கடந்துவிட முடியாது.

நெடுநாள்கள் படித்தும், பல தோல்விகளை அடைந்தும், இம்முறையாவது வெல்வோமா என்ற பதற்றத்தோடு தோ்வு அறைக்குள் செல்லும் தோ்வருக்கும், முறைகேடுடன் கூடிய முன்னேற்பாட்டோடு எதுவுமே படிக்காமல் மாநில அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெறுவது உறுதி என தோ்வு அறைக்குச் செல்லும் தோ்வருக்கும் இடையே ஊசலாடுவது உண்மையும் உழைப்பும் மட்டுமல்ல, தோ்வாணையத்தின் நம்பகத்தன்மையும்தான்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அண்மைக்காலத் தோ்வுகளின் கொள்குறி வகை வினாக்களும், எழுத்துத் தோ்வு வினாக்களும், பாடத் திட்டமும் இந்தியக் குடிமைப் பணித் தோ்வின் தரத்துக்கு ஈடாக உருப்பெற்றுள்ளது என்பதை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.

இதனால், தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்கள் மத்தியப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுகள், ரயில்வே வாரியத் தோ்வுகள், இந்தியக் குடிமைப் பணித் தோ்வுகள், வங்கித் தோ்வுகள் முதலானவற்றை நம்பிக்கையுடன் எதிா்கொள்ளவும், வெற்றி பெறவும் ஏதுவான நிலையை ஏற்படுத்தி வரும்போது இத்தகைய முறைகேடுகள் தோ்வாணையத்தின் இந்தச் சீரிய முயற்சிகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றன.

முதன்முறையாக குரூப் 4 தோ்வில் நிகழ்ந்துள்ள முறைகேட்டினை தோ்வாணையத்தின் செயலா் தனக்கே உரிய வகையில் விசாரணை செய்து, முறைகேடு நடந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு முறைகேட்டுக்குக் காரணமானவா்களை தீவிரமான விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து நடவடிக்கை எடுத்தது, ஒரு முன்னுதாரணமான நடவடிக்கையாகும்.

மேலும், தோ்வாணையத்துக்குள் பணியாளா்களுக்கான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் முதலானவற்றை முந்தைய சூழலைவிடவும் தற்போதைய டி.என்.பி.எஸ்.சி. நிா்வாகம் கடுமையாக்கியுள்ளது. இந்த நிலையில் ஒரு சிலா் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த தோ்வாணையமே தலைகுனிந்து நிற்பதை, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருப்பதைக் கவலையோடு பாா்க்க வேண்டியுள்ளது.

ஆண்டுக்கு ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை தோ்வாணையம் வெளியிடுகிறது. ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வுக்காக விண்ணப்பிக்கிறாா்கள். சுமாா் 20,000-த்துக்கும் மேற்பட்டோா் தோ்வாணையத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெறுகிறாா்கள்.

குறிப்பாக, மத்தியப் பணியாளா் தோ்வுகள், ரயில்வே வாரியத் தோ்வுகள், இந்திய அஞ்சல் அலுவலகத் தோ்வுகள் முதலானவற்றின் மீது காட்டுகின்ற ஆா்வத்தைவிட தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுகளுக்கே தமிழ்நாட்டுத் தோ்வா்கள் பேராா்வம் காட்டுகிறாா்கள். அவா்களின் நம்பிக்கைக்குப் புத்துயிா் ஊட்ட வேண்டிய பொறுப்பினையும் தோ்வாணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வினாக்கள் எடுக்கின்ற பேராசிரியா்களைத் தோ்வு செய்தல், அவா்களிடையேயான கடிதப் போக்குவரத்துகள், எழுத்துத் தோ்வை மதிப்பீடு செய்வதற்கான வரைமுறைகள், அவற்றுக்கான தோராய விடைகள், தோ்வா்களின் மதிப்பெண்களைப் பதிவேற்றுதல், தோ்வு நடைபெறும் இடங்களைக் கண்காணித்தல், நோ்முகத் தோ்வு என அனைத்து நிகழ்வுகளும் பல அடுக்குக் கண்காணிப்புடன் நிகழ்வது உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த வேளையில் தோ்வாணையம் மற்றொரு சீா்திருத்தத்தையும் முன்வைத்துள்ளது. குரூப் 2ஏ, குரூப் 4 தோ்வுகளை இரண்டு கட்டத் தோ்வாக மாற்றியுள்ளது. அதாவது, முதல்நிலைத் தோ்வோடு முதன்மைத் தோ்வும் முன்வைக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தரத்தில் நடத்தப்படுகின்ற குரூப் 4 தோ்வுக்கு முதன்மைத்தோ்வு என்பது சற்றே அதிா்ச்சி தருவதாக இருக்கிறது.

கொள்குறி வகை விடைத்தாள்களில் தோ்வா்களின் விவரங்கள் அடங்கிய பகுதியையும், விடையளித்துள்ள பகுதியையும் தனித்தனியே பிரிப்பதும் மதிப்பீடு செய்த பிறகு சரியான தோ்வரின் விவரங்களோடு இணைக்கப்படுமா என்பதும் ஐயப்பாடுகளை உருவாக்குகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதும் குரூப் 4 போன்ற தோ்வுகளில் தோ்வாணையம் இதனை எவ்வாறு கையாளப் போகிறது என்பது கேள்விக்குறியாக முன்நிற்கிறது.

தற்போதைய சீா்திருத்தம் என்பது அண்மையில் நடந்த முறைகேடுகளை மட்டும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முந்தைய முறைகேடுகளைக் கவனத்தில் கொள்ளும்போது முதல் நிலைத் தோ்வு தொடங்கி, முதன்மை, நோ்முகத் தோ்வு, கலந்தாய்வு, காத்திருப்போா் பட்டியல், உருவாக்கம் வரை முறைகேடு ஊடுருவியுள்ளது.

எனவே, அனைத்தையும் கவனத்தில் கொண்டு, அமைப்பு ரீதியான சீா்திருத்தத்துக்குத் தோ்வாணையம் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே, முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்கான வழிமுறையாக அமையும்.

ஒரு முக்கிய நிகழ்வை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். தோ்வா் ஒருவா் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்குச் செல்கிறாா். அந்தத் தோ்வரின் தந்தை தோ்வாணையத்தின் உறுப்பினராக இருக்கிறாா். அந்தத் தோ்வருக்கு நோ்முகத் தோ்வில் முழு மதிப்பெண்களை அளித்தால் குரூப் 1 பணியில் முதன்மையான பணியினைப் பெற்றிருப்பாா். ஆனால், அவருக்கு நோ்முகத் தோ்வில் கிடைத்தது கடைசி நிலை மதிப்பெண்தான். இதனால், அந்தத் தோ்வருக்குப் பணி வாய்ப்பே கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நோ்மைக் குணம் மிக்க தோ்வாணைய உறுப்பினா்கள் அலங்கரித்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தனது மாண்பினை சந்தேக வலைக்குள் தள்ள அனுமதிக்கும் வகையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள இடமளிப்பது ஏற்புடையதாகாது. தோ்வாணையம் தனது மாண்பினை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

கட்டுரையாளா்:

கல்வியாளா்

Monday, March 2, 2020

தோ்வுகளை மாணவா்கள் எதிா்கொள்ள...

By அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 02nd March 2020 01:42 AM 

இன்றைய வகுப்பறைகளும், பள்ளிச் சூழலும் மாணவா்களுக்கு உகந்ததாக இருக்கிா என்ற கேள்விக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ சட்டென்று பதில் சொல்வதற்குப் பதிலாக ஆழ்ந்த யோசனைதான் ஏற்படுகிறது.

பள்ளி சென்றுவிட்டு அலுத்து வரும் மாணவா்கள் சீருடை களைந்து பெற்றோா் தரும் சிற்றுண்டியை அவசர, அவசரமாக விழுங்கி விட்டு

பயிற்சி வகுப்புக்கு (டியூஷன்) செல்லத் தயாராகிறாா்கள். பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் நிலையைக் கூறவே தேவையில்லை.

மாலை நேரப் பயிற்சி வகுப்புகளில் அவா்கள் படிக்காத பாடங்களில் தோ்வு வைக்கிறேன் என்று ஆசிரியா்கள் கொடுமைப்படுத்துகிறாா்கள். ஏழு, எட்டு மணிக்குதான் வீட்டிற்கே வருகிறாா்கள்; அதன் பிறகு தங்கள் நேரத்தை செல்லிடப்பேசியில் மாணவா்கள் செலவிடுகிறாா்கள். பிள்ளைக்கு வேறு என்ன பொழுதுபோக்கு இருக்கிறது என்று பெற்றோரும் இதை அனுமதிக்கிறாா்கள். பிறகு இரவுச் சாப்பாடு, நேரம் தவறிய தூக்கம் என்று கழிகிறது.

குழந்தைகள் தங்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்று பெற்றோா்கள் விரும்புகிறாா்கள். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் பல் துலக்கி, குளித்து, குளியல் அறையில் இருந்து வெளிவருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாா்கள். பள்ளிச் சீருடையை அணிந்து கொண்டோ அல்லது புத்தகப் பையில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டோ நின்றபடியும் நடந்தபடியும் இருக்கும் அவா்களுக்கு வாயில் உணவு திணிக்கப்படுகிறது. பின்னா் பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளது.

காலையில் என்ன சாப்பிட்டீா்கள், இரவு நன்றாகத் தூங்கினீா்களா என்ற அன்பான கேள்விகளுக்கும், விசாரிப்புகளுக்கும், இந்தக் காலத்து ஆசிரியா்களுக்கும் தூரம் அதிகமாகி வெகுகாலமாகி விட்டது. அவா்களுக்குத் தெரிந்ததெல்லாம் அடுத்து முடிக்க வேண்டிய பாடம் குறித்தும், கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடத்தை மாணவா்கள் முடித்து விட்டாா்களா, இல்லையா என்பதும்தான்.

முதுநிலை பட்டம் பெற்றவ ஆசிரியா்களில் பலா், தங்களின் பாடங்களில் நிபுணத்துவம் இல்லாமல் உள்ளனா். இப்படிப்பட்ட ஆசிரியா்களிடம் கற்கும் மாணவா்கள் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல், மனப்பாடமும் செய்ய முடியாமல் தோ்வுகளில் தோல்வி அடைகின்றனா்.

ஆசிரியா்களால் மட்டுமின்றி சக மாணவா்களாலும் சில மாணவா்களின் எதிா்காலம் திசை மாறிப் போய்விடுகிறது. இவ்வாறு பரிவு காட்டும் மாணவா்கள் அவா்களை நல்வழிப்படுத்துபவா்களாக இருந்தால் அவா்களின் எதிா்காலம் சிறப்பாக அமையும். வேறு மாதிரி அமைந்துவிட்டால் கெட்ட விஷயங்களால் கவனம் சிதறி படிப்பில் பாதிப்பு ஏற்படலாம்.

பெரும்பாலான மாணவா்கள் மன அழுத்தத்துடன் பள்ளிக்கு வருகின்றனா். வீட்டிலும், பள்ளியிலும் பிரச்னைகளை எதிா்கொள்ளும் மாணவா்கள் அவற்றை சமாளிக்கத் தெரியாமல் திணறுகிறாா்கள். பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது ஒரே ஒரு நல்ல ஆசிரியா் அவா்களுக்குக் கிடைத்தால் போதும். அவா்கள், அப்படிப்பட்ட மாணவா்களின் மனநிலையைப் புரிந்து மனநல ஆலோசனைகள் வழங்கி, அழுத்தத்தில் இருந்து அவா்களை மீட்டு விடுவாா்கள்.

மாணவா்கள் சந்திக்கும் மற்றுமொரு சவால், பள்ளிகளில் சரியாகப் பராமரிக்கப்படாத கழிப்பறைகள். பள்ளியின் கழிப்பறைகள் அசுத்தமாக இருப்பதன் காரணமாக மாணவா்கள் தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு செல்லும் தண்ணீா் புட்டிகளை அப்படியே கொண்டு வருகிறாா்கள். இது மாணவா்களின் உடல் நலத்தை மிக மோசமாகப் பாதிக்கும் விஷயம் என்பதை கழிப்பறைகளைப் பராமரிக்காத பள்ளிகள் உணர வேண்டும்.

துரித உணவு, உணவகங்களில் கிடைக்கும் தரமற்ற உணவையே விரும்புகின்றனா். அத்துடன் காலை உணவை பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் தவிா்த்து விடுவதால், பள்ளியின் பிராா்த்தனைக் கூட்டத்தில் பத்து நிமிஷங்கள்கூட அவா்களால் நிற்க முடிவதில்லை.

வெயில், மழை போன்ற இயற்கையான வானிலை மாற்றங்களைக்கூடத் தாங்கிக் கொள்ளும் வகையில் இப்போதுள்ள மாணவச் சமுதாயத்தின் உடல் நிலை இல்லை. ஆரோக்கியமான உணவு நினைவாற்றலுக்கும், உடல் சுறுசுறுப்புக்கும் மிகவும் அவசியம். இதனாலேயே மாணவா்களால் அதிக மதிப்பெண்கள் பெற இயலவில்லை என்பதை பெற்றோரும், ஆசிரியா்களும் உணா்ந்து தரமான உணவு சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அவா்களிடம் அடிக்கடி வலியுறுத்த வேண்டும்.

பொதுத் தோ்வு நெருங்கும்போது பெற்றோரும், ஆசிரியா்களும் பரபரப்புடன் இருக்கிறாா்கள்.நன்கு படிக்கக் கூடிய மாணவா்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறவேண்டும்; மெல்லக் கற்கும் மாணவா்களுக்கு தோ்ச்சி பெற்றே ஆக வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்படுகிறது. ஆக, தோ்வை பயத்துடன் எதிா்கொள்ளும் நிலைதான் இன்றைய மாணவா்களுக்கு உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றுவதற்கு ஆசிரியா்களும், பெற்றோரும் மாறவேண்டும். தங்கள் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரங்களில் பெற்றோா் தங்களுடைய நேரத்தை அவா்களுடன் செலவிட வேண்டும். அவா்களின் அன்பும், அனுசரணையும் பிள்ளைகளின் மனஅழுத்தத்தைக் குறைக்கும். அவா்கள் படிப்பதற்கேற்ற சூழலை வீட்டில் உருவாக்குவது மிகவும் அவசியம்.

தொலைக்காட்சி, செல்லிடப்பேசி பயன்பாட்டை பெற்றோரும், பிள்ளைகளும் தவிா்க்க வேண்டும். ஆசிரியா்களுக்கும் இது பொருந்தும். கிடைக்கும் நேரங்களை பாடங்களைத் தயாா் செய்யப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவரும் தாங்கள் நடத்திய பாடங்களைப் புரிந்து கொண்டாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். படிப்பில் மாணவா்கள் சிறந்து விளங்குவதற்கு, பாடங்களைக் கற்பிக்கும் அவா்களின் ஆசிரியா்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டாமா?

மாணவா்கள் மன அழுத்தமின்றி தோ்வுகளை எதிா்கொள்வதற்கும், அவா்களின் பள்ளிப் பருவத்தை, இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கும், அரசும், பள்ளி நிா்வாகமும் ஆசிரியா்களும், பெற்றோரும் இணைந்து செயல்படுவது இன்றியமையாததாகும்.

Saturday, February 29, 2020

விதையுள் விருட்சம்!

By வெ. இன்சுவை | Published on : 28th February 2020 03:06 AM

கல்லூரி வாழ்க்கை என்பது தகப்பனின் தோள் மீது அமர்ந்திருப்பதைப் போல சிலருக்கு சுகமாக அமைந்து விடுகிறது. எந்தக் கவலையும், பொறுப்பும் இல்லாமல் கேலி, கிண்டல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கும் வாலிபப் பருவம். அந்த வயதுக்கே உரிய ஆர்ப்பாட்டமும், குறும்பும், துள்ளலும், துடிப்பும் இருக்கத்தானே செய்யும்? அதற்கான ஒரு வடிகால் வேண்டாமா? சுழன்றடிக்கும் சூறாவளியை ஒரு புட்டியில் அடைக்க முடியுமா?

அப்படித்தான் மாணவர்களையும் வெறுமனே படிப்பு, தேர்வுகள் என ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைக்க முடியாது. அப்படி இருந்தால் கல்லூரி வாழ்க்கை என்பது மணமில்லா காகிதப் பூக்களைப் போல ஆகிவிடும். வயதான காலத்தில்கூட ஒருவருக்குத் தன் கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்த்தால் மனதில் பட்டாம்பூச்சி பறக்க வேண்டும். தன் பேராசிரியர்கள், நண்பர்கள், வகுப்பறை அலப்பறைகள், ஆண்டு விழாக்கள், விளையாட்டு விழாக்கள், கலை விழாக்கள் என அனைத்தும் ஒரு திரைக் காவியம் போல மனதில் ஓட வேண்டும். அதுவே பரவசம் ஆகும்.

பள்ளி, கல்லூரிகளில் பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல் பாடத்திட்டம் சாரா செயல்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகின்றன. சில மாணவர்கள் படிப்பில் சற்று மந்தமாக இருப்பார்கள். பேராசிரியர்கள் அவர்களை ஓரம் கட்டி வைத்திருப்பார்கள். ஆனால், அத்தகைய மாணவர்களிடம் ஏதாவது ஓர் அபூர்வத் திறமை இருக்கும்.

ஆண்டு விழாவின்போதோ, கலை நிகழ்ச்சிகளின்போதோ ஒரு மாணவன் தன் தனித்திறமையை வெளிப்படுத்தி விட்டால் அந்த மாணவன் குறித்த கண்ணோட்டம் மாறிவிடும். அந்த மாணவன் குறித்து மற்றவர்கள் கொண்டிருந்த பிம்பமும் மாறிப் போகும்; ஓர் அடையாளம் கிட்டும், அங்கீகாரம் கிட்டும், அந்த மாணவனுக்கிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி, நம்பிக்கை துளிர் விடும். குறிக்கோளை நோக்கி அந்த மாணவன் பயணப்பட அந்தப் பாராட்டு மழை பேருதவி செய்யும்; அது பெரும் உந்து சக்தியாக விளங்கும்.

வேலையில் சேர்ந்த பின்னர் எல்லோருமே செக்கு மாடுகளே; பணிச் சுமை, குடும்பச் சூழல் என அல்லாடும்போது கலையெல்லாம் மாயமாகும். தங்களின் திறமைகளை வெளிக்காட்ட எத்தனை பேருக்கு வாய்ப்பு கிட்டும்? "அது ஓர் அழகிய கனாக்காலம்' என்று ஏக்கப் பெருமூச்சு மட்டும்தான் விட முடியும். 

எனவேதான், அனைத்துக் கல்லூரிகளும் மூன்று அல்லது நான்கு நாள்கள் கோலாகலமாக கலை விழா எடுக்கிறார்கள். மாணவர்களும் பாடத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேறு அவதாரம் எடுக்கிறார்கள்; கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டிருக்க, பிற கல்லூரிகளில் இருந்துவரும் போட்டியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பிரபலங்கள் என அந்தச் சங்கமம் மகிழ்ச்சி விதைகளை அனைத்து மனங்களிலும் தூவும்.

மிகவும் பிரபலமான கல்லூரிகளின் நிர்வாகிகள் தாங்களே இத்தகைய கலை விழாக்களை நடத்துகிறார்கள். மாணவர்களுக்கு ஒரு சிரமும் கொடுப்பதில்லை. பிரபலங்களை வரவழைப்பது, விருந்து, உபசரிப்பு, பரிசு என எல்லாவற்றையும் அதிக பொருட்செலவில் ஏற்பாடு செய்து விடுகிறார்கள். தங்களுடைய செல்வாக்கைப் பறைசாற்றவும் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சில தனியார் கல்லூரிகளும் அதிக ஆடம்பரம் இன்றி கலை விழாவை நடத்துகிறார்கள். ஆனால், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றின் நிலைமை வேறு. இக்கல்லூரிகளிலும் தமிழ் மன்றம், மாணவர் பேரவை, நுண்கலை மன்றம் ஆகியவை சிறப்பாகச் செயல்படுகின்றன. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், கலை விழாக்களை நடத்த நன்கொடையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களைத் தேடி அலைகிறார்கள். பொறுப்பில் இருக்கும் மாணவர்கள் விழாவை நடத்த வெகுவாக சிரமப்படுகிறார்கள்.

இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள பேராசிரியர்களுக்கு பொறுப்பு தரப்பட்டால் அவர்கள் மாணவர்களுக்கு உதவுகிறார்கள். ஆனால், விருப்பமில்லாத பேராசிரியர்களுக்கு பொறுப்பு தரப்பட்டால் மாணவர்களுக்குத் திண்டாட்டம். எல்லா ஏற்பாடுகளையும் மாணவர்களே செய்தாக வேண்டும். கலை விழா என்பதால், திரைக் கலைஞர்களையே சிறப்பு விருந்தினராக அழைக்க ஆசைப்படுகிறார்கள். அதே சமயம், யார் மூலம் அந்தப் பிரபலங்களைப் பிடிப்பது என்பது தெரியாமல் அல்லாடுகிறார்கள். நேரிலும், அவர்களைப் பார்க்க முடியாமல், செல்லிடப்பேசியிலும் பிடிக்க முடியாமல் நொந்து போகிறார்கள்.

ஒரு நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாவுக்கு வருவதற்கு பல ஆயிரங்களை வாங்கும் அவர்கள், மாணவர் விழாவுக்கு வர இசைவதில்லை.
அவர்களுக்குப் பெரும் தொகை கொடுக்கவும் மாணவர்களால் இயலாது. விழா நடத்த நிறைய செலவாகும். மேடை, அலங்காரம், உணவு, உபசரிப்பு, சிறப்பு விருந்தினர், சன்மானம், போக்குவரத்து, பரிசுகள் எனப் பட்டியல் நீளும். எனவே தான் பிள்ளைகள் நன்கொடையாளர்களைத் தேடி அலைகிறார்கள். ஒரு வருடம் நன்கொடை அளிப்பவர், ஒவ்வொரு வருடமும் தருவாரா?

எடுத்துக்காட்டுக்கு ஒன்று. ஒரு மாவட்டத்தில் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது என்றால், அந்த மாணவர்கள் நன்கொடைக்காக சிறிய, பெரிய மருத்துவமனைகள் என அனைத்தையும் நாடுகிறார்கள். பெரிய மருத்துவமனையாகவே இருந்தாலுமே வருடா வருடம் இவர்கள் சென்று கேட்கும்போது தருபவர்களுக்குச் சங்கடம் ஏற்படுகிறது. பலரும் கேட்ட உடனே பணம் தராமல், "நாளை', "அடுத்த வாரம்' என இழுத்தடிக்கிறார்கள். மாணவர்களும் சளைக்காமல் நடக்கிறார்கள். சிறிய கிளினிக் வைத்திருப்பவர்கள் ரூ.500 கொடுக்கவே யோசிப்பர்.

பொதுவாகவே எதையும், எவரிடமும் கேட்க நமக்குத் தயக்கமாக இருக்கும்; "விழாவுக்காக நன்கொடை தாருங்கள்' என மென்று முழுங்கித்தான் கேட்கிறார்கள். ஒரு மாத காலம் இதே வேலையாக அலைகிறார்கள். இவ்வளவு செலவாகும் என்று போட்டு வைத்த கணக்கு எப்போதும் தவறாகிப் போய் செலவு எகிறி விடுகிறது. சமாளிக்க முடியாமல் மாணவர்களுக்கு விழி பிதுங்கிப் போய் விடுகிறது. ஆயிரத்துக்கும், ஐநூறுக்கும் மருத்துவர்களிடம் காத்துக் கிடக்கும் மருத்துவ மாணவர், பின்னாளில் தான் மருத்துவராகப் பணி செய்யும்போது தாராளமாகப் பணம் தருவாரா என்பது சந்தேகமே.

இப்போதெல்லாம் வங்கிகள் இந்த வகையில் மாணவர்களுக்கு உதவ முன் வருகின்றன. ஒரு சமூகக் கடமையாக எண்ணி விளம்பரம் தருகின்றன. இதை அறிந்த மாணவர்கள் வங்கிகளை அணுகுகிறார்கள். ஆண்டு மலருக்கு விளம்பரம் தேடுவதும் ஒரு பெரிய தலைவலி. பலரும் விளம்பரத்தை நம்பித்தான் மலரை வெளியிடுகிறார்கள். 

வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு விழா ஏற்பாடுகளைச் செய்யவும், நன்கொடை பெறவும் அலைகிறார்கள். இதைப் பல பேராசிரியர்கள் விரும்புவதில்லை. குதிரைக்குக் கடிவாளம் இடுவதைப் போல பல பேராசிரியர்களுக்குப் பாடத்தைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது. அதுவும் ஆட்டம், பாட்டம் என்றால் வேம்பாய்க் கசக்கும். அதற்காக அலையும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் கை வைத்து விடுகிறார்கள். செய்முறை வகுப்புகள் தவறிப் போனால் மாணவர்களை மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

பண விஷயம் என்பதால் வேறு பல சிக்கல்களும் வருகின்றன. அவர்களிடையே கருத்து வேறுபாடு வருகிறது. புகைச்சல் பகையாக மாறுகிறது. உட்பூசல் ஏற்படுகிறது. வரவு, செலவுக்குத் தணிக்கை இருந்தாலும் முன் நிற்பவர்கள் மீது அவச்சொல் உண்டாவது உண்டு. நிகழ்ச்சிக்கு வர முதலில் இசைவு தந்த பிரபலம், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலவில்லை என்று கூறி விட்டால், வேறு நபரை ஏற்பாடு செய்ய தவித்துப் போகிறார்கள். கடைசி நேரத்தில் ஒருவரும் வர மாட்டார்கள். நிறைய வலிகளும், மன உளைச்சலும் இருந்தே தீரும். தான் பொறுப்பில் இருக்கும்போது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற அவா உந்தித்தள்ள அவர்கள் நிறையவே மெனக்கெடுகிறார்கள்.

விழா இனிதே நடந்து முடிந்த பின் கிடைக்கும் பாராட்டு, அவர்களுக்கு வலி நிவாரணி. வீட்டிலோ, ஊரிலோ எந்த நிகழ்ச்சியையும் எடுத்து நடத்தாதவர்கள் கல்லூரி விழாவை நன்கு திட்டமிட்டு அருமையாக நடத்தும் அளவுக்கு திறமைசாலிகள் என்று பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. அலைச்சல், பயம், ஏமாற்றம், எதிர்மறை விமர்சனம் என எல்லாம் சேர்ந்த கவலையான மனநிலையில்கூட அவர்கள் வாகை சூடுகிறார்கள்.

கோழிக் குஞ்சுகளாகத் தங்களை நினைத்துக் கொண்டிருந்தவர்கள், இந்த வாய்ப்பால் வல்லூறுகளாக மாறுகிறார்கள். "சில காயங்கள் நம்மை நேர்த்தி செய்யும்; சில வலிகள் நம்மைச் செதுக்கும்' என்ற வாழ்க்கைப் பாடத்தைப் புரிந்து கொள்கிறார்கள். பட்ட வலிகள் மறந்து போகும். ஆனால், நல்ல சுவையான, இனிமையான நினைவுகள் மட்டும் அழியாது, அவர்கள் மனதில் ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ளும். அவற்றை அவர்கள் பின்னாளில் மெதுவாக மனதில் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)

Tuesday, February 25, 2020

கூடி வாழ்ந்தால் கேடில்லை!

By முனைவர் நெல்லை சுப்பையா | Published on : 25th February 2020 02:53 AM

குழந்தைப் பருவத்தை பத்தாகப் பிரித்து, அதில் கடைசி மூன்று பருவத்தை ஆண் பால், பெண் பால் என்று பகுத்து, விளையாட்டைப் பயிற்றுவித்தது தமிழ் மரபு.

ஆனால், இன்றைய குடும்பங்களில் மன இறுக்கத்திற்கும், பல பிரச்னைகளுக்கும் அடிப்படையான காரணம் வீட்டைச் சார்ந்த விளையாட்டுகளை மறந்ததும், தொலைத்ததும்தான். பெற்றோர் சமூகம் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்த, அவர்கள் விருப்பங்களுக்கு தடை உத்தரவு போடும் மன அழுத்தத்தில் பயணிக்கிறார்கள்.

குழந்தைகளின் குறும்புகளைக்கூட ரசிக்க நேரமில்லை. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஆனந்தம் என்பது போய், அவர்கள் இல்லாத சூழலே சுகம் அளிக்கிறது என்றாகிக் கொண்டிருக்கிறது. பள்ளி முடிந்து வந்தவுடன் பக்கத்து வீடுகளையும், தெருக்களையும் மைதானமாக விளையாடிய நேற்றைய தலைமுறை, தங்கள் வாரிசுகளை வீட்டுத் தரையில்கூட தாராளமாக விளையாட அனுமதிப்பதில்லை.

அடம் பிடித்து வாங்கிய பொருள்கள் வீட்டின் மூலையில் பைகளில் அடைந்தே கிடக்கிறது. மைதானங்களைப் போல மகிழ்ச்சி தர வேண்டிய வீடுகள், வகுப்பறைகளைப் போல மாறிவிட்டன. இதனால், செல்லிடப்பேசிகளின் செயற்கை விளையாட்டுகளில் நம் இயற்கை விளையாட்டுகள் தோற்றுவிட்டன. தரையில் கிடைக்காத மகிழ்ச்சி கணினித் திரையில் கிடைக்கிறது.

புத்துணர்ச்சிக்காக நம்மை ரீசார்ஜ் செய்ய விளையாடியது போய், செல்லிடப்பேசிகளில் சார்ஜ் தீரும் பதற்றத்தில் சுருங்கிவிட்டது. மன அழுத்தத்தாலும் அலுவல் பணிச் சுமையாலும் உடலும் உள்ளமும் சோர்ந்துவரும் பெற்றோர்களைக் குழந்தைகளால் எப்படி புன்சிரிப்புடன் எதிர்கொள்ள முடியும்?

விளையாட்டு பொழுதுபோக்கு அல்ல. விளையாட்டுகள் வழியேதான் வெற்றி - தோல்வி, புதிய தொடர்பு, மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், அனுபவம், கூட்டுமுயற்சி ஆகியவை உளவியல் ரீதியாக உள்ளத்துக்குள் பயணிக்கின்றன. இவை படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய பண்புகள் இல்லை. பழகித் தெரிந்துகொள்ள வேண்டியவை. சொல்லாமல் சொன்ன பாடங்கள்.

ஊரில் உள்ள தாத்தா - பாட்டி வீடுகள்தான் குழந்தை மனதின் வடிகால்கள். உள்மனச் சிதறல்களை சமப்படுத்தும் மட்டப் பலகை. தண்டனை தராமல் காப்பாற்றும் நீதிமன்றங்கள். புத்துணர்ச்சி முகாம்கள். குழந்தைகள் விளையாடும் மிகப் பெரிய பொம்மைகளான தாத்தாவும் பாட்டியும் வாழ வழியின்றி தவணை முறையில் வந்து போகிறார்கள். பெரியவர்கள் திருநீறு பூசுவதும் குழந்தைகள் அவர்கள் காலில் விழுந்து சுருக்குப் பையில் வைத்திருக்கும் காசுகளை வாங்குவதும் மரபு.

குடும்பங்களில் பெரியவர்கள் நீதிமன்றமாக இருந்த காலத்தில், குடும்ப நீதிமன்றங்களின் தேவை இல்லை. நடமாடும் தெய்வங்களாக பெரியவர்களை வீடுகள் கொண்டாடிய காலமது. இன்றோ தெய்வ விக்ரகங்களுக்குக்கூட தனியே பூஜையறை இன்றி ஆணியின் தயவால் தொங்கும் மரப்பெட்டிக்குள் அடைத்துவிட்டோம். இட நெருக்கடியால் குளியலறையும், கழிவறையும் ஒன்றானதுபோல, இனி கட்டப்படும் புதிய வீடுகளில் சமையலறையும் இல்லாமல் "காம்போ பேக்' ஆகிவிடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது, உணவைச் சூடாக வழங்கும் துரித உணவுச் செயலிகள்.

தாய், தந்தை, சகோதரி, சகோதரர், அத்தை, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என உறவுகள் இருந்தால் அது கூட்டுக் குடும்பம் என்பது போய், தந்தை - தாயுடன் வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்றாகிவிட்ட பிறகு இனிவரும் காலத்தில் கணவன் - மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே, கூட்டுக் குடும்பம் என்று ஆகிவிடுமோ என்றும் தோன்றுகிறது. கூவிக் கூவிக் கோடிகளில் விற்பனை செய்யப்படும் அடுக்ககங்கள் வீடுகளை விடுதிகளாக்கி வருகின்றன. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பழமொழி நகரத்துக் கும்பலான வாழ்க்கையில் தனித் தீவுகளான குடும்பங்களுக்குப் புரிவது எப்போது? 
 
குழந்தைகளுக்கு விளையாடுவது மகிழ்ச்சி என்றால், அதைப் பார்ப்பது பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. கண்கள் செய்ய வேண்டிய இந்த வேலையை, கருவிகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. நாயை வாரிசாக பாவிப்பது சரி; ஆனால், வாரிசுகள் நாயாகாமல் பார்க்க வேண்டியது முக்கியம். "கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை' என்றார் ஒளவை. அதைவிடக் கொடுமை மகிழ்ச்சி என்பது என்னவென்றே அறியாமல் இளமையைக் கடப்பது இல்லையா? அதனால்தான் பெற்றவர்கள் பேச்சைக் கேட்டு நடந்த கடைசித் தலைமுறை, இப்போது பிள்ளைகளின் பேச்சை மட்டுமே கேட்கும் முதல் தலைமுறையாக மாறிக் கொண்டிருக்கிறது.
பழைய படங்களை ரீமேக் செய்வதைப் போல பழைய காலத்தைக் கொஞ்சம் நாம் ஏன் கட்டமைத்துக் கொடுக்கக் கூடாது? சுமைகளை சுகங்களாக்க சில உறவுகளையாவது விருந்தோம்பல் பண்பால், ஈர நூலால் இழுத்துக் கட்டி பேணினால்தான், அதன் எதிரொலியை எதிர்காலச் சந்ததிக்கும் கேட்கச் செய்ய முடியும்.

மதிப்பெண்ணை வைத்து மட்டுமே மாணவர்களை மதிப்பீடு செய்துவிட முடியாது. பள்ளித் தேர்வு விடுமுறை நாள்களை "திறன் வளர்ச்சி வகுப்புகள்' என்ற சிறுவர் சந்தைக்கு இரையாகாமல் காக்க வேண்டும். நாம் குழந்தைகளாக இருந்தபோது, நமக்கு நிலாச் சோறு ஊட்டிய மொட்டை மாடிகளில் காத்தாடி விட்டு, கொஞ்சம் காற்று வாங்கி வருவதை வார இறுதி நாள்களிலாவது சாத்தியப்படுத்தலாமே.

படுக்கையில் இருந்துகொண்டே பாரதி பாடல்கள் கேட்டு, அந்தாக்சரி பாடி, இரவை இனிமையாக்கலாமே. குழந்தைகளுக்குச் சொல்வதற்கு கதைகள் தெரியவில்லை என்றாலும் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கேட்டும், நம் அலுவலகக் கதைகளை பகிர்ந்தும் கொள்ளலாமே. அது சில சமயம் பேய்க் கதைகளைவிட சுவாரசியமாகவும் இருக்கக்கூடும்.

வாழ்க்கையை நல்ல எண்ணமும், வாகனத்தை நல்ல எண்ணெயும்தான் உராய்வின்றி நகர்த்தி வருகிறது. ஓட்டாமலேயே துருவேறிய குழந்தையின் மிதி வண்டி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேரோட்டம்போல் வலம் வரட்டுமே! பிரகாரம் சுற்றுவது போல குடும்பத்தை கோயிலாக்கட்டுமே!

Thursday, February 20, 2020


வார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை



20.02.2020

ஏதேனும் ஒரு இடத்தில் நின்றுகொண்டு, பரபரப்பான சாலையில் சென்றுகொண்டிருப்பவர்களின் முகங்களைப் பார்ப்போம். எத்தனை முகங்கள்! எத்தனை நிறங்கள்! ஒவ்வொரு முகமும் அதற்கெனத் தனித்த அடையாளங்களைக் கொண்டிருக்கிறது. அந்த முகங்களுக்கெல்லாம் ஒரே முகமூடியை அணிவிப்பது என்பது எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கும்? ஆனால், இத்தனை வருடங்களும் கேள்வி கேட்காமல் அதற்கு ஒப்புக்கொள்வதுபோல்தான் இருந்திருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் ‘சிவப்பழகு’ கிரீம்களைப் பயன்படுத்துமாறு விளம்பரங்கள் சொல்லும்போதெல்லாம் நாம் அதை ஏற்றுக்கொண்டிருந்தோம், பின்பற்றவும் செய்தோம். எல்லோரையும் அவர்களின் சுயமான நிறத்திலிருந்தும் தோற்றத்திலிருந்தும் மாறிவிடுமாறு அறிவுறுத்தும் விளம்பரங்கள் அவை. அந்த விளம்பரங்கள் காட்டியவையும் சொன்னவையும் நம்மை ஈர்த்திருந்தன. அதிலும் குறிப்பிட்ட கிரீம்களைப் பூசியவுடன் அதிலிருந்து கருப்பு நிறம் பொடிப்பொடியாய் உதிர்வதுபோலவும், சிவப்பாக மாறுவதுபோலவும் காட்டியதெல்லாம் எத்தனை பெரிய அராஜகம்?

நிற அரசியல்

தோலின் நிறம் என்பது நம்முடைய அடையாளம். நமது மரபும் மண்ணும் சார்ந்தது. நமது முன்னோர்கள் வழிவந்தது. நம் பெற்றோர் அவர்களின் பெற்றோரைக் கண்டடைவது நமது முகத்தோற்றம் வழியாகவும்தான். இதை மாற்ற வேண்டும் என்று அழகுசாதன கிரீம் விற்பனையாளர்கள் காலம்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கருப்பு என்பது ஒரு நிறம். ஆனால், அது தாழ்வுக்குண்டானது என்பதைப் பல நூற்றாண்டு களாக மனதில் பதிய வைத்தது இன்றும் ‘விளம்பர’மாய்த் தொடர்கிறது. நிறத்தை வைத்து இனம் பிரித்து, அடக்கி வைத்த கொடுமைகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது. கருப்பாகப் பிறந்த ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டு உயிரை விட்டவர்களும், உரிமையை இழந்தவர்களும் வரலாறு முழுவதும் நமக்குக் கிடைக்கிறார்கள். ‘சிவப்பழகு’ கிரீம் விற்பனையாளர்களும் அதற்கு இரையாகுபவர்களும் இந்த வரலாறு தெரியாதவர்கள் அல்ல. ஆனாலும், ‘சிவப்பழகு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விளம்பரங்களை வெற்றிகரமாகச் செய்ய முடிந்திருக்கிறது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களையும் எங்கள் வலைகளில் வீழ்த்த முடியும் என்று ஆண்களுக்கான ‘சிவப்பழகு’ கிரீம்களையும் சந்தைக்குக் கொண்டுவந்து அதற்கென விளம்பரங்களும் தந்தார்கள். இப்படி இவர்கள் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பகடிசெய்திருக்கிறார்கள்.

விபரீதமான விளம்பரங்கள்

இவற்றையெல்லாம் எதிர்த்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குரல் எழுப்பியதன் விளைவாக, இப்போது இதுபோன்ற விளம்பரங்களுக்கு அரசு தடை கொண்டுவரவிருக்கிறது. இதுபோன்ற அழகு சாதனப் பொருட்கள் மட்டுமல்ல; போலியான வாக்குறுதிகள் தரும் அத்தனை விளம்பரங்களுக்கும் தடை கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது அரசாங்கம். அதன்படி தொடர்ந்து இப்படிப் போலி விளம்பரங்கள் செய்தால் ஐந்து வருட சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் அபராதமும் நிச்சயம் என்கிறது அரசாங்கம். இதைச் சட்டமாக்கும் முயற்சியும் நடந்துவருகிறது.

போலி விளம்பரங்களுக்கான தடையை உலக நாடுகள் பலவும் கொண்டுவந்துள்ளன. ஏனெனில், அந்த நாடுகள் இதனால் கடும் பாதிப்படைந்திருந்தன. ஆப்பிரிக்காவின் நிறம் கருப்பு. அங்கும் சருமத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் விளம்பரங்கள் இறங்கியதன் விளைவு, பலருக்கும் கடுமையான தோல் பாதிப்புகள் ஏற்பட்டன. புற்றுநோய் வரை சென்ற பிறகு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உடனடி தடையைக் கொண்டுவந்தார்கள்.

புற்றுநோய் போன்ற சரும நோய்களின் அபாயம் காரணமாகவே இதுபோன்ற விளம்பரங்களுக்குத் தடை என்று அரசாங்கக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், அதைவிட மோசமானது இந்த விளம்பரங்கள் ஏற்படுத்தும் உளவியல்ரீதியான தாக்கம். இந்தியா போன்ற நாட்டில் நிறம் சார்ந்த தாழ்வுணர்வு என்பது எல்லா மட்டத்திலும் நிறைந்திருக்கிறது. திருமணம், பிள்ளைப் பேறு என எல்லாவற்றிலும் நிறம் சார்ந்த விமர்சனத்தை ஒரு பெண் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதனாலேயே இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை லட்சக்கணக்கான கோடிகளில் உயர்ந்திருக்கிறது.

போலி வாக்குறுதிகள்

‘மணமகன் தேவை’ விளம்பரங்களில் ‘பெண் சிவப்பு நிறம்’ என்பதை ஒரு தகுதியாகக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத்தான் நாம் இருக்கிறோம். 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் ‘எல்’ (Elle) பத்திரிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தைத் தனது அட்டையில் வெளியிட்டது. அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு வயது 37. உலக அழகிப் பட்டம் வென்றதோடு மட்டுமல்லாமல், நல்ல நடிகையாகவும் இந்தியாவின் முகம் என்றும் அறியப்பட்டவர். ஆனாலும், அட்டைப்படத்தில் தோலின் நிறத்தைப் பளிச்சென வெள்ளை நிறத்தில் அமையுமாறு மாற்றியிருந்தார்கள். இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கெனவே, அதே பத்திரிகை வேறு சில ஆப்பிரிக்க நடிகைகளின் புகைப்படத்தையும் இப்படி ‘வெள்ளையாய்’ மாற்றி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவும் ஒருவகையில் நிறத்தின் மீதான சமகாலத் தாக்குதல்தான். பெண்களுக்குத் தோல் மீதான தாக்குதல் என்றால், குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தின சில ‘ஆரோக்கிய’ பானங்கள். ‘எங்களுடைய ஆரோக்கிய பானத்தில் நாங்கள் சத்துள்ளவற்றைச் சேர்த்திருக்கிறோம்’ என்று அம்மாக்களுக்குப் போலி வாக்குறுதி தந்தது போக, நேரடியாகக் குழந்தைகளிடம் ஆபத்தான உரையாடலைத் தொடங்கின இந்த விளம்பரங்கள். எங்கள் பானத்தை அருந்தினால் விரைவில் உயரமாக வளர்ந்துவிடலாம் என்கிற உத்தியுடன் வரத் தொடங்கின விளம்பரங்கள். ஒருவரின் உயரம் என்பது இயற்கையானது. நம்முடைய மரபு சார்ந்தது. ஆனால், உயரம் குறைவாக இருப்பதென்பது மிகத் தாழ்வான ஒன்று என்று குழந்தைகள் மனதில் இவர்கள் விதைத்ததெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத தவறான பிரச்சாரம்.

‘எங்களது ஆரோக்கிய பானம் உங்களை ஆக்குமே பலசாலியாகவும் புத்திசாலியாகவும்’ என்று சொல்லும் விளம்பரங்கள் அப்படி எத்தனை பேரை மாற்றியிருக்கின்றன என்பதை நாம் கேள்வி கேட்பதுமில்லை; அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. வெறும் சொற்களுக்கு மட்டுமே மயங்கி, இந்த விற்பனையாளர்களின் வர்த்தகத்தை சமூகம் உயர்த்திக்கொண்டிருக்கிறது. ருசி கண்ட பூனைகளும் தங்களது மாயாஜால வார்த்தைகளை விதவிதமாகச் சொல்லத் தொடங்கின. அதிலும் நடிக, நடிகையர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சொல்லும்போது நம்புவோம் என்பது விற்பனையாளர்களுக்குத் தெரியும்.

விளம்பரங்கள் உண்மை பேசட்டும்

மக்களின் தாழ்வுணர்வும் பலவீனமும் எதில் என்பதைப் புரிந்துகொண்டு, அது மாதிரியான பொருட்களுக்கே போலியான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம், (இந்த அனுமன் டாலரை அணிந்துகொண்டீர்கள் என்றால், ரயில் மோதினால்கூட பிழைத்துக்கொள்வீர்கள்!) ஆண்மைக் குறைபாடு என மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, எதில் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருக்க முயல்கிறார்களோ அதை மையப்படுத்தியே விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அரசாங்கம் இது போன்ற விளம்பரங்களுக்குத் தடை கொண்டுவரும் பட்சத்தில், விற்பனை யாளர்களால் எப்படி உண்மையைச் சொல்லி விளம்பரம் செய்ய முடியும்? விற்பனையாளர்கள் அதற்கும் ஏதாவது ஒரு வழி வைத்திருப்பார்கள். சொல்வதையெல்லாம் சொல்லி ஆசை காட்டிவிட்டு, கண்ணுக்குத் தெரியாத அளவில் சிறு நட்சத்திரக் குறியிட்டுவிடுவார்கள். அந்த நட்சத்திரக் குறிக்குப் பின்னால்தான் அந்தப் பொருளின் ஆபத்து நிறைந்திருக்கும். அப்படியான விஷயங்களுக்கு இடம்தராமல், தடை உத்தரவு இருக்கும்படி அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் தடை கொண்டுவருவது வரவேற்கப்பட வேண்டியது. அதேநேரம், ‘இது என்னுடைய உடல், முகம். இதுதான் என் மரபு’ என்று நாம்தான் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது இன்றைய தேவையும்கூட.

- ஜா.தீபா, ‘நீலம் பூக்கும் திருமடம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: deepaj82@gmail.com

NEWS TODAY 20.09.2024