Thursday, February 20, 2020


வார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை



20.02.2020

ஏதேனும் ஒரு இடத்தில் நின்றுகொண்டு, பரபரப்பான சாலையில் சென்றுகொண்டிருப்பவர்களின் முகங்களைப் பார்ப்போம். எத்தனை முகங்கள்! எத்தனை நிறங்கள்! ஒவ்வொரு முகமும் அதற்கெனத் தனித்த அடையாளங்களைக் கொண்டிருக்கிறது. அந்த முகங்களுக்கெல்லாம் ஒரே முகமூடியை அணிவிப்பது என்பது எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கும்? ஆனால், இத்தனை வருடங்களும் கேள்வி கேட்காமல் அதற்கு ஒப்புக்கொள்வதுபோல்தான் இருந்திருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் ‘சிவப்பழகு’ கிரீம்களைப் பயன்படுத்துமாறு விளம்பரங்கள் சொல்லும்போதெல்லாம் நாம் அதை ஏற்றுக்கொண்டிருந்தோம், பின்பற்றவும் செய்தோம். எல்லோரையும் அவர்களின் சுயமான நிறத்திலிருந்தும் தோற்றத்திலிருந்தும் மாறிவிடுமாறு அறிவுறுத்தும் விளம்பரங்கள் அவை. அந்த விளம்பரங்கள் காட்டியவையும் சொன்னவையும் நம்மை ஈர்த்திருந்தன. அதிலும் குறிப்பிட்ட கிரீம்களைப் பூசியவுடன் அதிலிருந்து கருப்பு நிறம் பொடிப்பொடியாய் உதிர்வதுபோலவும், சிவப்பாக மாறுவதுபோலவும் காட்டியதெல்லாம் எத்தனை பெரிய அராஜகம்?

நிற அரசியல்

தோலின் நிறம் என்பது நம்முடைய அடையாளம். நமது மரபும் மண்ணும் சார்ந்தது. நமது முன்னோர்கள் வழிவந்தது. நம் பெற்றோர் அவர்களின் பெற்றோரைக் கண்டடைவது நமது முகத்தோற்றம் வழியாகவும்தான். இதை மாற்ற வேண்டும் என்று அழகுசாதன கிரீம் விற்பனையாளர்கள் காலம்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கருப்பு என்பது ஒரு நிறம். ஆனால், அது தாழ்வுக்குண்டானது என்பதைப் பல நூற்றாண்டு களாக மனதில் பதிய வைத்தது இன்றும் ‘விளம்பர’மாய்த் தொடர்கிறது. நிறத்தை வைத்து இனம் பிரித்து, அடக்கி வைத்த கொடுமைகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது. கருப்பாகப் பிறந்த ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டு உயிரை விட்டவர்களும், உரிமையை இழந்தவர்களும் வரலாறு முழுவதும் நமக்குக் கிடைக்கிறார்கள். ‘சிவப்பழகு’ கிரீம் விற்பனையாளர்களும் அதற்கு இரையாகுபவர்களும் இந்த வரலாறு தெரியாதவர்கள் அல்ல. ஆனாலும், ‘சிவப்பழகு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விளம்பரங்களை வெற்றிகரமாகச் செய்ய முடிந்திருக்கிறது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களையும் எங்கள் வலைகளில் வீழ்த்த முடியும் என்று ஆண்களுக்கான ‘சிவப்பழகு’ கிரீம்களையும் சந்தைக்குக் கொண்டுவந்து அதற்கென விளம்பரங்களும் தந்தார்கள். இப்படி இவர்கள் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பகடிசெய்திருக்கிறார்கள்.

விபரீதமான விளம்பரங்கள்

இவற்றையெல்லாம் எதிர்த்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குரல் எழுப்பியதன் விளைவாக, இப்போது இதுபோன்ற விளம்பரங்களுக்கு அரசு தடை கொண்டுவரவிருக்கிறது. இதுபோன்ற அழகு சாதனப் பொருட்கள் மட்டுமல்ல; போலியான வாக்குறுதிகள் தரும் அத்தனை விளம்பரங்களுக்கும் தடை கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது அரசாங்கம். அதன்படி தொடர்ந்து இப்படிப் போலி விளம்பரங்கள் செய்தால் ஐந்து வருட சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் அபராதமும் நிச்சயம் என்கிறது அரசாங்கம். இதைச் சட்டமாக்கும் முயற்சியும் நடந்துவருகிறது.

போலி விளம்பரங்களுக்கான தடையை உலக நாடுகள் பலவும் கொண்டுவந்துள்ளன. ஏனெனில், அந்த நாடுகள் இதனால் கடும் பாதிப்படைந்திருந்தன. ஆப்பிரிக்காவின் நிறம் கருப்பு. அங்கும் சருமத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் விளம்பரங்கள் இறங்கியதன் விளைவு, பலருக்கும் கடுமையான தோல் பாதிப்புகள் ஏற்பட்டன. புற்றுநோய் வரை சென்ற பிறகு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உடனடி தடையைக் கொண்டுவந்தார்கள்.

புற்றுநோய் போன்ற சரும நோய்களின் அபாயம் காரணமாகவே இதுபோன்ற விளம்பரங்களுக்குத் தடை என்று அரசாங்கக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், அதைவிட மோசமானது இந்த விளம்பரங்கள் ஏற்படுத்தும் உளவியல்ரீதியான தாக்கம். இந்தியா போன்ற நாட்டில் நிறம் சார்ந்த தாழ்வுணர்வு என்பது எல்லா மட்டத்திலும் நிறைந்திருக்கிறது. திருமணம், பிள்ளைப் பேறு என எல்லாவற்றிலும் நிறம் சார்ந்த விமர்சனத்தை ஒரு பெண் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதனாலேயே இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை லட்சக்கணக்கான கோடிகளில் உயர்ந்திருக்கிறது.

போலி வாக்குறுதிகள்

‘மணமகன் தேவை’ விளம்பரங்களில் ‘பெண் சிவப்பு நிறம்’ என்பதை ஒரு தகுதியாகக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத்தான் நாம் இருக்கிறோம். 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் ‘எல்’ (Elle) பத்திரிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தைத் தனது அட்டையில் வெளியிட்டது. அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு வயது 37. உலக அழகிப் பட்டம் வென்றதோடு மட்டுமல்லாமல், நல்ல நடிகையாகவும் இந்தியாவின் முகம் என்றும் அறியப்பட்டவர். ஆனாலும், அட்டைப்படத்தில் தோலின் நிறத்தைப் பளிச்சென வெள்ளை நிறத்தில் அமையுமாறு மாற்றியிருந்தார்கள். இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கெனவே, அதே பத்திரிகை வேறு சில ஆப்பிரிக்க நடிகைகளின் புகைப்படத்தையும் இப்படி ‘வெள்ளையாய்’ மாற்றி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவும் ஒருவகையில் நிறத்தின் மீதான சமகாலத் தாக்குதல்தான். பெண்களுக்குத் தோல் மீதான தாக்குதல் என்றால், குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தின சில ‘ஆரோக்கிய’ பானங்கள். ‘எங்களுடைய ஆரோக்கிய பானத்தில் நாங்கள் சத்துள்ளவற்றைச் சேர்த்திருக்கிறோம்’ என்று அம்மாக்களுக்குப் போலி வாக்குறுதி தந்தது போக, நேரடியாகக் குழந்தைகளிடம் ஆபத்தான உரையாடலைத் தொடங்கின இந்த விளம்பரங்கள். எங்கள் பானத்தை அருந்தினால் விரைவில் உயரமாக வளர்ந்துவிடலாம் என்கிற உத்தியுடன் வரத் தொடங்கின விளம்பரங்கள். ஒருவரின் உயரம் என்பது இயற்கையானது. நம்முடைய மரபு சார்ந்தது. ஆனால், உயரம் குறைவாக இருப்பதென்பது மிகத் தாழ்வான ஒன்று என்று குழந்தைகள் மனதில் இவர்கள் விதைத்ததெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத தவறான பிரச்சாரம்.

‘எங்களது ஆரோக்கிய பானம் உங்களை ஆக்குமே பலசாலியாகவும் புத்திசாலியாகவும்’ என்று சொல்லும் விளம்பரங்கள் அப்படி எத்தனை பேரை மாற்றியிருக்கின்றன என்பதை நாம் கேள்வி கேட்பதுமில்லை; அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. வெறும் சொற்களுக்கு மட்டுமே மயங்கி, இந்த விற்பனையாளர்களின் வர்த்தகத்தை சமூகம் உயர்த்திக்கொண்டிருக்கிறது. ருசி கண்ட பூனைகளும் தங்களது மாயாஜால வார்த்தைகளை விதவிதமாகச் சொல்லத் தொடங்கின. அதிலும் நடிக, நடிகையர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சொல்லும்போது நம்புவோம் என்பது விற்பனையாளர்களுக்குத் தெரியும்.

விளம்பரங்கள் உண்மை பேசட்டும்

மக்களின் தாழ்வுணர்வும் பலவீனமும் எதில் என்பதைப் புரிந்துகொண்டு, அது மாதிரியான பொருட்களுக்கே போலியான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம், (இந்த அனுமன் டாலரை அணிந்துகொண்டீர்கள் என்றால், ரயில் மோதினால்கூட பிழைத்துக்கொள்வீர்கள்!) ஆண்மைக் குறைபாடு என மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, எதில் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருக்க முயல்கிறார்களோ அதை மையப்படுத்தியே விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அரசாங்கம் இது போன்ற விளம்பரங்களுக்குத் தடை கொண்டுவரும் பட்சத்தில், விற்பனை யாளர்களால் எப்படி உண்மையைச் சொல்லி விளம்பரம் செய்ய முடியும்? விற்பனையாளர்கள் அதற்கும் ஏதாவது ஒரு வழி வைத்திருப்பார்கள். சொல்வதையெல்லாம் சொல்லி ஆசை காட்டிவிட்டு, கண்ணுக்குத் தெரியாத அளவில் சிறு நட்சத்திரக் குறியிட்டுவிடுவார்கள். அந்த நட்சத்திரக் குறிக்குப் பின்னால்தான் அந்தப் பொருளின் ஆபத்து நிறைந்திருக்கும். அப்படியான விஷயங்களுக்கு இடம்தராமல், தடை உத்தரவு இருக்கும்படி அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் தடை கொண்டுவருவது வரவேற்கப்பட வேண்டியது. அதேநேரம், ‘இது என்னுடைய உடல், முகம். இதுதான் என் மரபு’ என்று நாம்தான் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது இன்றைய தேவையும்கூட.

- ஜா.தீபா, ‘நீலம் பூக்கும் திருமடம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: deepaj82@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024