Thursday, February 27, 2020

சமூக வலைதள வதந்தியால் பாதிப்பு கறிக்கோழி உற்பத்தியாளர் முறையீடு

Added : பிப் 27, 2020 00:26

பல்லடம் :சமூக வலைதள வதந்திகளால், கறிக்கோழி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் இ.பி.எஸ்.,யிடம், அதன் உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், கறிக்கோழி உற்பத்தித் தொழில், பிரதானமானதாக உள்ளது. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட பண்ணைகள் உள்ளன. இவை மூலம், வாரந்தோறும், 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன.சீனாவை தாக்கி வரும், 'கொரோனா' வைரஸ், கறிக்கோழிகளைத் தாக்கியுள்ளதாக, சமூக வலைதளங்களில், தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், நாமக்கல் வந்த, முதல்வர் இ.பி.எஸ்.,யை, பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் லட்சுமணன், செயலர் சுவாதி கண்ணன் ஆகியோர் சந்தித்து, மனு அளித்தனர்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கறிக்கோழி வளர்ப்பு மூலம், பல ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. கறிக்கோழிகள், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக, எந்தவித ஆதாரமும் இன்றி, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகின்றன. தவறான தகவல்களை பரப்புவோர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்ற முதல்வர் இ.பி.எஸ்., ''இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024