Saturday, February 29, 2020


'ஆதார்' எடுக்க முடியாதோருக்கு இனி தனி ரேஷன் கார்டு

Added : பிப் 28, 2020 20:52

'ஆதார்' கார்டு எடுக்க முடியாத அளவுக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும், தனி ரேஷன் கார்டுகளை வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில், உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். மத்திய அரசின், 'ஆதார்' எண் விபரங்கள் அடிப்படையில், உணவு வழங்கல் துறை சார்பில்,கையடக்க வடிவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.இதனால், ஒரே நபர், பல முகவரிகளில் கார்டுகள் வாங்குவது தடுக்கப்பட்டு உள்ளது. பிறக்கும் போது, கைகள் செயல்படாதவர்கள்; விபத்துக்களால், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களால், 'ஆதார்' கார்டு எடுக்க முடியவில்லை. ஆதார் இல்லாததால், அவர்களுக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடிவதில்லை. இதனால், ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல், அவர்கள் சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து, ஆதார் கார்டு எடுக்க முடியாத அளவுக்கு, உடல் நலம் குன்றியவர்களுக்கு, ஆதார் இல்லாமல், ரேஷன் கார்டு வழங்குமாறு, உணவு வழங்கல் துறைக்கு, மாநில உணவு ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், ஆதார் எண் பதிவு செய்யாமல், ரேஷன் கார்டு வழங்க முடியாத அளவுக்கு, மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.எனவே, ஆதார் எடுக்க முடியாத நபர்களுக்கு மட்டும், ஸ்மார்ட் கார்டுக்கு மாற்றாக, காகித வடிவில், தனி ரேஷன் கார்டுகளை வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024