வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி: இந்தியன் ஆயில் நிறுவனம் தொடக்கம்
சென்னை 25.02.2020
சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (தமிழகம் மற்றும் புதுவை) நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 2.38 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 1.36 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 12 பாட்டிலிங் பிளான்ட்கள் மூலம் சுமார் 2.65 கோடி இண்டேன் சிலிண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.
சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யலாம். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும்.
மேலும், சிலிண்டர் விநியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிப்பு, சரியான எடை, சீல் மற்றும் கசிவுகள் குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை கிடைக்கப்பட்டதா என வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்யலாம்.
வீட்டு உபயோக சிலிண்டர்கள் சிலவற்றை கடைகளில் பயன்படுத்தி விட்டு மீண்டும் கொண்டு வந்து வீடுகளில் விநியோகிக்கப்படுவதால் அவற்றின் எடை குறைவாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை வாங்கும்போது அவற்றின் எடை பரிசோதித்து தருமாறு சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியரிடம் வலியுறுத்த வேண்டும்.
சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம்
வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் சென்னையில் மூன்று இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு ஜெயதேவன் கூறினார்.
No comments:
Post a Comment