Thursday, February 27, 2020

பிரியாணியை தவிர்ப்பது ஆரோக்கியம்!

பதிவு செய்த நாள் 26 பிப்  2020   00:00

சிறு தானியங்களில் செய்த உணவு, காய்கறிகள், தயிர், பால் என்று எளிமையான உணவுகளை, தினமும் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டால், எந்த உடல் கோளாறும் வராது. சுவைக்காக சேர்க்கப்படும், 'அஜினமோட்டோ' உட்பட பல செயற்கையான உப்புகள், நிறமிகள், வேதிப் பொருட்கள், அளவிற்கு அதிகமான மாசாலாக்கள் தான், உள் உறுப்பு செயல்பாடு செயலிழப்பிற்கு அடிப்படை காரணமான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உட்பட, பல பிரச்னைகளை உருவாக்குகின்றன.

செயற்கை சர்க்கரை

பிரியாணி கடைகள் அனைத்தையும் மூடி விட்டாலே, பாதி பிரச்னை தீர்ந்து விடும். மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பது, என் எண்ணம். இதில் சேர்க்கப்படும் பாமாயில், வனஸ்பதி, மசாலாக்கள், கெட்ட கொழுப்பு அதிகரிக்கவும், பல வியாதிகளை துாண்டவும் செய்கின்றன.
பிரியாணி விற்பவர்களுக்கு, லாபம் மட்டுமே குறிக்கோள். சாப்பிடுவோருக்கு, நாக்கில் ருசி தெரிந்தால் போதும்; வேறு எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. பிரியாணி சாப்பிடுவது என்பதெல்லாம், நம் தென் மாநில உணவு கலாசாரத்தில் இல்லாத ஒன்று. பிரியாணி எப்படி, நம் நாட்டிற்கு இறக்குமதி ஆனது என்ற வரலாற்றை படித்தால், நான் சொல்வதை புரிந்து கொள்ள முடியும்.

அடுத்தது, 'ஆன் லைனில்' ஆர்டர் செய்து, வீட்டிற்கே டெலிவரி செய்யும் உணவுகள். இந்த இரண்டையும் தவிர்த்தாலே போதும். இப்போது இருக்கும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில், பாதிக்கும் அதிகமானவர்களுக்கு, தானாகவே சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்து விடும்.
செயற்கையாக சர்க்கரை கோளாறை உருவாக்குவது, பிரியாணி, பேக்கரி அயிட்டங்களில் சேர்க்கப்படும் மைதா, வெள்ளை சர்க்கரை, செயற்கை நிறமிகள், பதப்படுத்த பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் போன்றவை தான். இதனால் தான், மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர், ரத்த அழுத்தம், கொழுப்பு என்று, ஆயுள் முழுவதும் மருந்துகளுடன் அலைகின்றனர்.

முன்னோர் உணவு

ஆண்டிற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, கோவில் கொடை, பொங்கல், பண்டிகை என்று வரும் நாட்களில் மட்டும், ஆடு, கோழி என்று விதவிதமாக சமைத்து சாப்பிட்டனர் நம் முன்னோர்.
மற்ற நாட்களில், தங்களைச் சுற்றி கிடைக்கும் சிறு தானியங்கள், காய்கறிகளை சமைத்து சாப்பிட்டனர். அவர்களின் உணவு, எளிமையானதாக இருந்தது. அதுவும், ஒரு நாளில், ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டனர். மற்ற இரண்டு வேளையும், பழைய சாதம், கேழ்வரகு கூழ், கம்மஞ்சோறு என்று தான், அவர்களின் உணவு இருந்தது.

எளிமையான உணவு, அதிகப்படியான உடல் உழைப்பு என்று இருந்ததால், அவர்களுக்கு எந்த உடல் கோளாறும் வரவில்லை.நம் முன்னோர் போல், நம்மால் இருக்க முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒரு முறை, விரும்பியதை வீட்டிலேயே, விதவிதமாக சமைத்து சாப்பிடலாம். மாதம் ஒரு முறை, வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம்; தவறில்லை.

மற்ற நாட்களில், எளிதில் செரிமானம் ஆகக் கூடிய, நமக்கு, 100 கி.மீ., சுற்றளவில் என்ன விளைகிறதோ, அவற்றை சாப்பிடுவதே நல்லது. நம் மரபணுவில், அந்த உணவு தான் பழக்கமாகி இருக்கும்.தினமும் மூன்று வேளையும், வெளியில் ஆர்டர் செய்து சாப்பிடுவது, இன்னொரு மோசமாக பழக்கம். உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், எந்த பிரச்னையும் தீராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனைக்கு, என்ன உடல் பிரச்னைகளுடன் வந்தாலும், வரும் அனைவருக்கும், ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டிய நிலை தான் உள்ளது. காரணம், பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. அதோடு சேர்த்து, மது பழக்கம், பாக்கு போடுவது, உடற்பயிற்சியின்மை... இப்படி, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமான அனைத்தையும் செய்கின்றனர்.

பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களே, பெரும்பாலும் இங்கு வருகின்றனர். உணவு பழக்கம், சுகாதாரம், உடல், மன ஆரோக்கியம் என்று எதிலும், இவர்களிடம் ஒழுங்கு முறை இல்லை.அரசு மருத்துவமனையில், அனைத்து நவீன வசதிகளும், சிறப்பு மருத்துவர்களும், 24 மணி நேரமும் செயல்பட்டாலும், பிரச்னை வந்ததும் இங்கு வருவதில்லை. அருகில் உள்ள தனியார் மருத்துவர்களிடம் செல்கின்றனர்.

அங்கு, ஸ்கேன், மருந்து, மாத்திரைகள் என்று, கையில் உள்ள பணம் முழுவதையும் செலவு செய்தபின், வேறு வழியில்லாமல், கடைசியில் இங்கு வருகின்றனர். அதற்குள், பிரச்னை பெரிதாகி விடுகிறது.கூட்டம் அதிகம் உள்ள இடங்களில், காத்திருக்கத்தான் வேண்டியிருக்கும். அதைவிட முக்கியம், சரியான மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் ஆர்.எம். பூபதி,
நரம்பியல் சிறப்பு மருத்துவர்,
அரசு பல்நோக்கு மருத்துவமனை, சென்னை
044 - 2566 6000

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024