Tuesday, February 25, 2020

கூடி வாழ்ந்தால் கேடில்லை!

By முனைவர் நெல்லை சுப்பையா | Published on : 25th February 2020 02:53 AM

குழந்தைப் பருவத்தை பத்தாகப் பிரித்து, அதில் கடைசி மூன்று பருவத்தை ஆண் பால், பெண் பால் என்று பகுத்து, விளையாட்டைப் பயிற்றுவித்தது தமிழ் மரபு.

ஆனால், இன்றைய குடும்பங்களில் மன இறுக்கத்திற்கும், பல பிரச்னைகளுக்கும் அடிப்படையான காரணம் வீட்டைச் சார்ந்த விளையாட்டுகளை மறந்ததும், தொலைத்ததும்தான். பெற்றோர் சமூகம் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்த, அவர்கள் விருப்பங்களுக்கு தடை உத்தரவு போடும் மன அழுத்தத்தில் பயணிக்கிறார்கள்.

குழந்தைகளின் குறும்புகளைக்கூட ரசிக்க நேரமில்லை. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஆனந்தம் என்பது போய், அவர்கள் இல்லாத சூழலே சுகம் அளிக்கிறது என்றாகிக் கொண்டிருக்கிறது. பள்ளி முடிந்து வந்தவுடன் பக்கத்து வீடுகளையும், தெருக்களையும் மைதானமாக விளையாடிய நேற்றைய தலைமுறை, தங்கள் வாரிசுகளை வீட்டுத் தரையில்கூட தாராளமாக விளையாட அனுமதிப்பதில்லை.

அடம் பிடித்து வாங்கிய பொருள்கள் வீட்டின் மூலையில் பைகளில் அடைந்தே கிடக்கிறது. மைதானங்களைப் போல மகிழ்ச்சி தர வேண்டிய வீடுகள், வகுப்பறைகளைப் போல மாறிவிட்டன. இதனால், செல்லிடப்பேசிகளின் செயற்கை விளையாட்டுகளில் நம் இயற்கை விளையாட்டுகள் தோற்றுவிட்டன. தரையில் கிடைக்காத மகிழ்ச்சி கணினித் திரையில் கிடைக்கிறது.

புத்துணர்ச்சிக்காக நம்மை ரீசார்ஜ் செய்ய விளையாடியது போய், செல்லிடப்பேசிகளில் சார்ஜ் தீரும் பதற்றத்தில் சுருங்கிவிட்டது. மன அழுத்தத்தாலும் அலுவல் பணிச் சுமையாலும் உடலும் உள்ளமும் சோர்ந்துவரும் பெற்றோர்களைக் குழந்தைகளால் எப்படி புன்சிரிப்புடன் எதிர்கொள்ள முடியும்?

விளையாட்டு பொழுதுபோக்கு அல்ல. விளையாட்டுகள் வழியேதான் வெற்றி - தோல்வி, புதிய தொடர்பு, மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், அனுபவம், கூட்டுமுயற்சி ஆகியவை உளவியல் ரீதியாக உள்ளத்துக்குள் பயணிக்கின்றன. இவை படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய பண்புகள் இல்லை. பழகித் தெரிந்துகொள்ள வேண்டியவை. சொல்லாமல் சொன்ன பாடங்கள்.

ஊரில் உள்ள தாத்தா - பாட்டி வீடுகள்தான் குழந்தை மனதின் வடிகால்கள். உள்மனச் சிதறல்களை சமப்படுத்தும் மட்டப் பலகை. தண்டனை தராமல் காப்பாற்றும் நீதிமன்றங்கள். புத்துணர்ச்சி முகாம்கள். குழந்தைகள் விளையாடும் மிகப் பெரிய பொம்மைகளான தாத்தாவும் பாட்டியும் வாழ வழியின்றி தவணை முறையில் வந்து போகிறார்கள். பெரியவர்கள் திருநீறு பூசுவதும் குழந்தைகள் அவர்கள் காலில் விழுந்து சுருக்குப் பையில் வைத்திருக்கும் காசுகளை வாங்குவதும் மரபு.

குடும்பங்களில் பெரியவர்கள் நீதிமன்றமாக இருந்த காலத்தில், குடும்ப நீதிமன்றங்களின் தேவை இல்லை. நடமாடும் தெய்வங்களாக பெரியவர்களை வீடுகள் கொண்டாடிய காலமது. இன்றோ தெய்வ விக்ரகங்களுக்குக்கூட தனியே பூஜையறை இன்றி ஆணியின் தயவால் தொங்கும் மரப்பெட்டிக்குள் அடைத்துவிட்டோம். இட நெருக்கடியால் குளியலறையும், கழிவறையும் ஒன்றானதுபோல, இனி கட்டப்படும் புதிய வீடுகளில் சமையலறையும் இல்லாமல் "காம்போ பேக்' ஆகிவிடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது, உணவைச் சூடாக வழங்கும் துரித உணவுச் செயலிகள்.

தாய், தந்தை, சகோதரி, சகோதரர், அத்தை, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என உறவுகள் இருந்தால் அது கூட்டுக் குடும்பம் என்பது போய், தந்தை - தாயுடன் வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்றாகிவிட்ட பிறகு இனிவரும் காலத்தில் கணவன் - மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே, கூட்டுக் குடும்பம் என்று ஆகிவிடுமோ என்றும் தோன்றுகிறது. கூவிக் கூவிக் கோடிகளில் விற்பனை செய்யப்படும் அடுக்ககங்கள் வீடுகளை விடுதிகளாக்கி வருகின்றன. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பழமொழி நகரத்துக் கும்பலான வாழ்க்கையில் தனித் தீவுகளான குடும்பங்களுக்குப் புரிவது எப்போது? 
 
குழந்தைகளுக்கு விளையாடுவது மகிழ்ச்சி என்றால், அதைப் பார்ப்பது பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. கண்கள் செய்ய வேண்டிய இந்த வேலையை, கருவிகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. நாயை வாரிசாக பாவிப்பது சரி; ஆனால், வாரிசுகள் நாயாகாமல் பார்க்க வேண்டியது முக்கியம். "கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை' என்றார் ஒளவை. அதைவிடக் கொடுமை மகிழ்ச்சி என்பது என்னவென்றே அறியாமல் இளமையைக் கடப்பது இல்லையா? அதனால்தான் பெற்றவர்கள் பேச்சைக் கேட்டு நடந்த கடைசித் தலைமுறை, இப்போது பிள்ளைகளின் பேச்சை மட்டுமே கேட்கும் முதல் தலைமுறையாக மாறிக் கொண்டிருக்கிறது.
பழைய படங்களை ரீமேக் செய்வதைப் போல பழைய காலத்தைக் கொஞ்சம் நாம் ஏன் கட்டமைத்துக் கொடுக்கக் கூடாது? சுமைகளை சுகங்களாக்க சில உறவுகளையாவது விருந்தோம்பல் பண்பால், ஈர நூலால் இழுத்துக் கட்டி பேணினால்தான், அதன் எதிரொலியை எதிர்காலச் சந்ததிக்கும் கேட்கச் செய்ய முடியும்.

மதிப்பெண்ணை வைத்து மட்டுமே மாணவர்களை மதிப்பீடு செய்துவிட முடியாது. பள்ளித் தேர்வு விடுமுறை நாள்களை "திறன் வளர்ச்சி வகுப்புகள்' என்ற சிறுவர் சந்தைக்கு இரையாகாமல் காக்க வேண்டும். நாம் குழந்தைகளாக இருந்தபோது, நமக்கு நிலாச் சோறு ஊட்டிய மொட்டை மாடிகளில் காத்தாடி விட்டு, கொஞ்சம் காற்று வாங்கி வருவதை வார இறுதி நாள்களிலாவது சாத்தியப்படுத்தலாமே.

படுக்கையில் இருந்துகொண்டே பாரதி பாடல்கள் கேட்டு, அந்தாக்சரி பாடி, இரவை இனிமையாக்கலாமே. குழந்தைகளுக்குச் சொல்வதற்கு கதைகள் தெரியவில்லை என்றாலும் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கேட்டும், நம் அலுவலகக் கதைகளை பகிர்ந்தும் கொள்ளலாமே. அது சில சமயம் பேய்க் கதைகளைவிட சுவாரசியமாகவும் இருக்கக்கூடும்.

வாழ்க்கையை நல்ல எண்ணமும், வாகனத்தை நல்ல எண்ணெயும்தான் உராய்வின்றி நகர்த்தி வருகிறது. ஓட்டாமலேயே துருவேறிய குழந்தையின் மிதி வண்டி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேரோட்டம்போல் வலம் வரட்டுமே! பிரகாரம் சுற்றுவது போல குடும்பத்தை கோயிலாக்கட்டுமே!

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...