விதையுள் விருட்சம்!
By வெ. இன்சுவை | Published on : 28th February 2020 03:06 AM
By வெ. இன்சுவை | Published on : 28th February 2020 03:06 AM
கல்லூரி வாழ்க்கை என்பது தகப்பனின் தோள் மீது அமர்ந்திருப்பதைப் போல சிலருக்கு சுகமாக அமைந்து விடுகிறது. எந்தக் கவலையும், பொறுப்பும் இல்லாமல் கேலி, கிண்டல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கும் வாலிபப் பருவம். அந்த வயதுக்கே உரிய ஆர்ப்பாட்டமும், குறும்பும், துள்ளலும், துடிப்பும் இருக்கத்தானே செய்யும்? அதற்கான ஒரு வடிகால் வேண்டாமா? சுழன்றடிக்கும் சூறாவளியை ஒரு புட்டியில் அடைக்க முடியுமா?
அப்படித்தான் மாணவர்களையும் வெறுமனே படிப்பு, தேர்வுகள் என ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைக்க முடியாது. அப்படி இருந்தால் கல்லூரி வாழ்க்கை என்பது மணமில்லா காகிதப் பூக்களைப் போல ஆகிவிடும். வயதான காலத்தில்கூட ஒருவருக்குத் தன் கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்த்தால் மனதில் பட்டாம்பூச்சி பறக்க வேண்டும். தன் பேராசிரியர்கள், நண்பர்கள், வகுப்பறை அலப்பறைகள், ஆண்டு விழாக்கள், விளையாட்டு விழாக்கள், கலை விழாக்கள் என அனைத்தும் ஒரு திரைக் காவியம் போல மனதில் ஓட வேண்டும். அதுவே பரவசம் ஆகும்.
பள்ளி, கல்லூரிகளில் பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல் பாடத்திட்டம் சாரா செயல்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகின்றன. சில மாணவர்கள் படிப்பில் சற்று மந்தமாக இருப்பார்கள். பேராசிரியர்கள் அவர்களை ஓரம் கட்டி வைத்திருப்பார்கள். ஆனால், அத்தகைய மாணவர்களிடம் ஏதாவது ஓர் அபூர்வத் திறமை இருக்கும்.
ஆண்டு விழாவின்போதோ, கலை நிகழ்ச்சிகளின்போதோ ஒரு மாணவன் தன் தனித்திறமையை வெளிப்படுத்தி விட்டால் அந்த மாணவன் குறித்த கண்ணோட்டம் மாறிவிடும். அந்த மாணவன் குறித்து மற்றவர்கள் கொண்டிருந்த பிம்பமும் மாறிப் போகும்; ஓர் அடையாளம் கிட்டும், அங்கீகாரம் கிட்டும், அந்த மாணவனுக்கிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி, நம்பிக்கை துளிர் விடும். குறிக்கோளை நோக்கி அந்த மாணவன் பயணப்பட அந்தப் பாராட்டு மழை பேருதவி செய்யும்; அது பெரும் உந்து சக்தியாக விளங்கும்.
வேலையில் சேர்ந்த பின்னர் எல்லோருமே செக்கு மாடுகளே; பணிச் சுமை, குடும்பச் சூழல் என அல்லாடும்போது கலையெல்லாம் மாயமாகும். தங்களின் திறமைகளை வெளிக்காட்ட எத்தனை பேருக்கு வாய்ப்பு கிட்டும்? "அது ஓர் அழகிய கனாக்காலம்' என்று ஏக்கப் பெருமூச்சு மட்டும்தான் விட முடியும்.
எனவேதான், அனைத்துக் கல்லூரிகளும் மூன்று அல்லது நான்கு நாள்கள் கோலாகலமாக கலை விழா எடுக்கிறார்கள். மாணவர்களும் பாடத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேறு அவதாரம் எடுக்கிறார்கள்; கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டிருக்க, பிற கல்லூரிகளில் இருந்துவரும் போட்டியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பிரபலங்கள் என அந்தச் சங்கமம் மகிழ்ச்சி விதைகளை அனைத்து மனங்களிலும் தூவும்.
மிகவும் பிரபலமான கல்லூரிகளின் நிர்வாகிகள் தாங்களே இத்தகைய கலை விழாக்களை நடத்துகிறார்கள். மாணவர்களுக்கு ஒரு சிரமும் கொடுப்பதில்லை. பிரபலங்களை வரவழைப்பது, விருந்து, உபசரிப்பு, பரிசு என எல்லாவற்றையும் அதிக பொருட்செலவில் ஏற்பாடு செய்து விடுகிறார்கள். தங்களுடைய செல்வாக்கைப் பறைசாற்றவும் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சில தனியார் கல்லூரிகளும் அதிக ஆடம்பரம் இன்றி கலை விழாவை நடத்துகிறார்கள். ஆனால், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றின் நிலைமை வேறு. இக்கல்லூரிகளிலும் தமிழ் மன்றம், மாணவர் பேரவை, நுண்கலை மன்றம் ஆகியவை சிறப்பாகச் செயல்படுகின்றன. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், கலை விழாக்களை நடத்த நன்கொடையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களைத் தேடி அலைகிறார்கள். பொறுப்பில் இருக்கும் மாணவர்கள் விழாவை நடத்த வெகுவாக சிரமப்படுகிறார்கள்.
இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள பேராசிரியர்களுக்கு பொறுப்பு தரப்பட்டால் அவர்கள் மாணவர்களுக்கு உதவுகிறார்கள். ஆனால், விருப்பமில்லாத பேராசிரியர்களுக்கு பொறுப்பு தரப்பட்டால் மாணவர்களுக்குத் திண்டாட்டம். எல்லா ஏற்பாடுகளையும் மாணவர்களே செய்தாக வேண்டும். கலை விழா என்பதால், திரைக் கலைஞர்களையே சிறப்பு விருந்தினராக அழைக்க ஆசைப்படுகிறார்கள். அதே சமயம், யார் மூலம் அந்தப் பிரபலங்களைப் பிடிப்பது என்பது தெரியாமல் அல்லாடுகிறார்கள். நேரிலும், அவர்களைப் பார்க்க முடியாமல், செல்லிடப்பேசியிலும் பிடிக்க முடியாமல் நொந்து போகிறார்கள்.
ஒரு நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாவுக்கு வருவதற்கு பல ஆயிரங்களை வாங்கும் அவர்கள், மாணவர் விழாவுக்கு வர இசைவதில்லை.
அவர்களுக்குப் பெரும் தொகை கொடுக்கவும் மாணவர்களால் இயலாது. விழா நடத்த நிறைய செலவாகும். மேடை, அலங்காரம், உணவு, உபசரிப்பு, சிறப்பு விருந்தினர், சன்மானம், போக்குவரத்து, பரிசுகள் எனப் பட்டியல் நீளும். எனவே தான் பிள்ளைகள் நன்கொடையாளர்களைத் தேடி அலைகிறார்கள். ஒரு வருடம் நன்கொடை அளிப்பவர், ஒவ்வொரு வருடமும் தருவாரா?
எடுத்துக்காட்டுக்கு ஒன்று. ஒரு மாவட்டத்தில் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது என்றால், அந்த மாணவர்கள் நன்கொடைக்காக சிறிய, பெரிய மருத்துவமனைகள் என அனைத்தையும் நாடுகிறார்கள். பெரிய மருத்துவமனையாகவே இருந்தாலுமே வருடா வருடம் இவர்கள் சென்று கேட்கும்போது தருபவர்களுக்குச் சங்கடம் ஏற்படுகிறது. பலரும் கேட்ட உடனே பணம் தராமல், "நாளை', "அடுத்த வாரம்' என இழுத்தடிக்கிறார்கள். மாணவர்களும் சளைக்காமல் நடக்கிறார்கள். சிறிய கிளினிக் வைத்திருப்பவர்கள் ரூ.500 கொடுக்கவே யோசிப்பர்.
பொதுவாகவே எதையும், எவரிடமும் கேட்க நமக்குத் தயக்கமாக இருக்கும்; "விழாவுக்காக நன்கொடை தாருங்கள்' என மென்று முழுங்கித்தான் கேட்கிறார்கள். ஒரு மாத காலம் இதே வேலையாக அலைகிறார்கள். இவ்வளவு செலவாகும் என்று போட்டு வைத்த கணக்கு எப்போதும் தவறாகிப் போய் செலவு எகிறி விடுகிறது. சமாளிக்க முடியாமல் மாணவர்களுக்கு விழி பிதுங்கிப் போய் விடுகிறது. ஆயிரத்துக்கும், ஐநூறுக்கும் மருத்துவர்களிடம் காத்துக் கிடக்கும் மருத்துவ மாணவர், பின்னாளில் தான் மருத்துவராகப் பணி செய்யும்போது தாராளமாகப் பணம் தருவாரா என்பது சந்தேகமே.
இப்போதெல்லாம் வங்கிகள் இந்த வகையில் மாணவர்களுக்கு உதவ முன் வருகின்றன. ஒரு சமூகக் கடமையாக எண்ணி விளம்பரம் தருகின்றன. இதை அறிந்த மாணவர்கள் வங்கிகளை அணுகுகிறார்கள். ஆண்டு மலருக்கு விளம்பரம் தேடுவதும் ஒரு பெரிய தலைவலி. பலரும் விளம்பரத்தை நம்பித்தான் மலரை வெளியிடுகிறார்கள்.
வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு விழா ஏற்பாடுகளைச் செய்யவும், நன்கொடை பெறவும் அலைகிறார்கள். இதைப் பல பேராசிரியர்கள் விரும்புவதில்லை. குதிரைக்குக் கடிவாளம் இடுவதைப் போல பல பேராசிரியர்களுக்குப் பாடத்தைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது. அதுவும் ஆட்டம், பாட்டம் என்றால் வேம்பாய்க் கசக்கும். அதற்காக அலையும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் கை வைத்து விடுகிறார்கள். செய்முறை வகுப்புகள் தவறிப் போனால் மாணவர்களை மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.
பண விஷயம் என்பதால் வேறு பல சிக்கல்களும் வருகின்றன. அவர்களிடையே கருத்து வேறுபாடு வருகிறது. புகைச்சல் பகையாக மாறுகிறது. உட்பூசல் ஏற்படுகிறது. வரவு, செலவுக்குத் தணிக்கை இருந்தாலும் முன் நிற்பவர்கள் மீது அவச்சொல் உண்டாவது உண்டு. நிகழ்ச்சிக்கு வர முதலில் இசைவு தந்த பிரபலம், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலவில்லை என்று கூறி விட்டால், வேறு நபரை ஏற்பாடு செய்ய தவித்துப் போகிறார்கள். கடைசி நேரத்தில் ஒருவரும் வர மாட்டார்கள். நிறைய வலிகளும், மன உளைச்சலும் இருந்தே தீரும். தான் பொறுப்பில் இருக்கும்போது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற அவா உந்தித்தள்ள அவர்கள் நிறையவே மெனக்கெடுகிறார்கள்.
விழா இனிதே நடந்து முடிந்த பின் கிடைக்கும் பாராட்டு, அவர்களுக்கு வலி நிவாரணி. வீட்டிலோ, ஊரிலோ எந்த நிகழ்ச்சியையும் எடுத்து நடத்தாதவர்கள் கல்லூரி விழாவை நன்கு திட்டமிட்டு அருமையாக நடத்தும் அளவுக்கு திறமைசாலிகள் என்று பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. அலைச்சல், பயம், ஏமாற்றம், எதிர்மறை விமர்சனம் என எல்லாம் சேர்ந்த கவலையான மனநிலையில்கூட அவர்கள் வாகை சூடுகிறார்கள்.
கோழிக் குஞ்சுகளாகத் தங்களை நினைத்துக் கொண்டிருந்தவர்கள், இந்த வாய்ப்பால் வல்லூறுகளாக மாறுகிறார்கள். "சில காயங்கள் நம்மை நேர்த்தி செய்யும்; சில வலிகள் நம்மைச் செதுக்கும்' என்ற வாழ்க்கைப் பாடத்தைப் புரிந்து கொள்கிறார்கள். பட்ட வலிகள் மறந்து போகும். ஆனால், நல்ல சுவையான, இனிமையான நினைவுகள் மட்டும் அழியாது, அவர்கள் மனதில் ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ளும். அவற்றை அவர்கள் பின்னாளில் மெதுவாக மனதில் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)
No comments:
Post a Comment