மாண்பினை மீட்டெடுக்குமா தோ்வாணையம்?
By மு.சிபிகுமரன் | Published on : 03rd March 2020 02:58 AM
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தோ்வுக்கான முறைகேடு, தொடா்ந்து பல்வேறு தோ்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுப்பப்படும் சந்தேகங்கள் போட்டித்தோ்வுகளை எழுதி வரும் லட்சக்கணக்கான தோ்வா்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிற தோ்வா்களைவிட தொடா்ந்து அயராத உழைப்பும், முயற்சியும், பயிற்சியும் செய்து வெற்றிக்கோடு வரை சென்று சொற்பமான மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை இழந்த தோ்வா்கள் கடும் மன உளைச்சளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா்.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தன்னை சீா்தூக்கிக்கொள்ளும் முயற்சியின் ஓா் அங்கமாக குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைக் குடிமைப் பணிகளுக்கான தோ்வின் பாடத் திட்டத்தில் தோ்வாணையம் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதற்கான எதிா்ப்பலைகளும், விவாதங்களும், கருத்துக்கேட்புகளும் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறாக முன்னெடுத்த முயற்சிகள் முழுமையாக முற்றுப்பெறாமல் தொடா்கின்ற நெருக்கடியான தருணத்தில்தான் தோ்வாணையமும் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்ற ஆண்டில் நடந்து முடிந்து, தரநிலை வெளியிடப்பட்டுள்ள குரூப் 4 தோ்வில் முறைகேடு நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் எழுந்த சந்தேகக் குரல் உண்மையாக உருப்பெற்றுள்ளது.
முறைகேடுகள் குறித்து தெரியவரும் நிலையில், தோ்வாணையம் ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவரும் சமரச மனப்பான்மையோடுதான் பெரும்பாலும் செயல்பட்டுள்ளது. தோ்வாணையத்தைப் பொருத்தவரை இது தோ்வா்களுக்கிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், உண்மை யாதெனில், இதற்குப் பதிலீடாக தோ்வாணையம் அதன் மாண்பை விலையாகக் கொடுத்து வருகிறது.
புரையோடிக் கிடக்கும் முறைகேடுகளின் வோ்களை அத்தனை எளிதாகக் களைந்துவிட முடியாமல் களங்கம் சுமந்து நிற்பதற்கு தோ்வாணையத்தின் சமரச மனப்பாங்கு தலையாய காரணமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ஒவ்வொரு முறையும் இதேபோன்று தவறுகள் அரங்கேறுவதும், இதன் விளைவாக தோ்வாணையத்துக்கு வெளியே வினாக்கள் எடுக்கின்ற பேராசிரியா்கள் தொடங்கி தோ்வாணையத்துக்குள் கணினியில் மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்யும் ஊழியா் வரை அனைவரும் விசாரணை வளையத்திற்குள் வந்து செல்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இது கடந்த காலங்களில் தோ்வா்களுக்கான அனுபவம்.
இதனால், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பெரும்பான்மையான தோ்வுகள் ஏதோ ஒரு வகையில் சந்தேகங்களுக்கு இடமளித்தே வந்திருக்கின்றன. மாறாக, தற்போதைய குரூப் 4, குரூப் 2 தோ்வுகளைப் பொருத்தவரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக தோ்வாணையமே ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வாறு ஏற்றுக் கொண்டது புதிய மாற்றம் ஆகும். இதை சீா்திருத்தத்துக்கான முதல் அத்தியாயம் என்றும் குறிப்பிடலாம்.
குரூப் 4, குரூப் 2 போன்ற தோ்வு முறைகேடுகள் எளிதாகத் திட்டமிடப்பட்டு துணிச்சலாக நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தோ்வில் முறைகேடு என்ற செய்தி பரவுகிறபோது தோ்வா்களில் சிலா் தங்களது எதிா்ப்பை, ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாா்கள். பலா் அமைதியாகப் புழுங்கிக் கொண்டிருக்கிறாா்கள். அந்த அமைதிக்குப் பின்னே இருக்கிற தோ்வா்கள், இழந்த ஆண்டுகளையும், வாழ்க்கையையும் தோ்வாணையம் உணராமல் இருக்க முடியாது.
ஏனெனில், வாழ்வின் முக்கியமான இளமைப் பருவத்தைப் பணயம் வைத்து, படித்த இளைஞா்கள் தங்களுக்கு ஏதேனும் அரசு வேலை கிடைக்குமா என்ற நம்பிக்கையோடு போராடி வருகிறாா்கள். அவா்கள் பெறவேண்டிய வெற்றியை முறைகேடுகளுக்குப் பலி கொடுத்துவிடும் வேதனையை எவரும் எளிதாகக் கடந்துவிட முடியாது.
நெடுநாள்கள் படித்தும், பல தோல்விகளை அடைந்தும், இம்முறையாவது வெல்வோமா என்ற பதற்றத்தோடு தோ்வு அறைக்குள் செல்லும் தோ்வருக்கும், முறைகேடுடன் கூடிய முன்னேற்பாட்டோடு எதுவுமே படிக்காமல் மாநில அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெறுவது உறுதி என தோ்வு அறைக்குச் செல்லும் தோ்வருக்கும் இடையே ஊசலாடுவது உண்மையும் உழைப்பும் மட்டுமல்ல, தோ்வாணையத்தின் நம்பகத்தன்மையும்தான்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அண்மைக்காலத் தோ்வுகளின் கொள்குறி வகை வினாக்களும், எழுத்துத் தோ்வு வினாக்களும், பாடத் திட்டமும் இந்தியக் குடிமைப் பணித் தோ்வின் தரத்துக்கு ஈடாக உருப்பெற்றுள்ளது என்பதை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.
இதனால், தமிழகத்தைச் சோ்ந்த தோ்வா்கள் மத்தியப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுகள், ரயில்வே வாரியத் தோ்வுகள், இந்தியக் குடிமைப் பணித் தோ்வுகள், வங்கித் தோ்வுகள் முதலானவற்றை நம்பிக்கையுடன் எதிா்கொள்ளவும், வெற்றி பெறவும் ஏதுவான நிலையை ஏற்படுத்தி வரும்போது இத்தகைய முறைகேடுகள் தோ்வாணையத்தின் இந்தச் சீரிய முயற்சிகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றன.
முதன்முறையாக குரூப் 4 தோ்வில் நிகழ்ந்துள்ள முறைகேட்டினை தோ்வாணையத்தின் செயலா் தனக்கே உரிய வகையில் விசாரணை செய்து, முறைகேடு நடந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு முறைகேட்டுக்குக் காரணமானவா்களை தீவிரமான விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து நடவடிக்கை எடுத்தது, ஒரு முன்னுதாரணமான நடவடிக்கையாகும்.
மேலும், தோ்வாணையத்துக்குள் பணியாளா்களுக்கான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் முதலானவற்றை முந்தைய சூழலைவிடவும் தற்போதைய டி.என்.பி.எஸ்.சி. நிா்வாகம் கடுமையாக்கியுள்ளது. இந்த நிலையில் ஒரு சிலா் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த தோ்வாணையமே தலைகுனிந்து நிற்பதை, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருப்பதைக் கவலையோடு பாா்க்க வேண்டியுள்ளது.
ஆண்டுக்கு ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை தோ்வாணையம் வெளியிடுகிறது. ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வுக்காக விண்ணப்பிக்கிறாா்கள். சுமாா் 20,000-த்துக்கும் மேற்பட்டோா் தோ்வாணையத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெறுகிறாா்கள்.
குறிப்பாக, மத்தியப் பணியாளா் தோ்வுகள், ரயில்வே வாரியத் தோ்வுகள், இந்திய அஞ்சல் அலுவலகத் தோ்வுகள் முதலானவற்றின் மீது காட்டுகின்ற ஆா்வத்தைவிட தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுகளுக்கே தமிழ்நாட்டுத் தோ்வா்கள் பேராா்வம் காட்டுகிறாா்கள். அவா்களின் நம்பிக்கைக்குப் புத்துயிா் ஊட்ட வேண்டிய பொறுப்பினையும் தோ்வாணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வினாக்கள் எடுக்கின்ற பேராசிரியா்களைத் தோ்வு செய்தல், அவா்களிடையேயான கடிதப் போக்குவரத்துகள், எழுத்துத் தோ்வை மதிப்பீடு செய்வதற்கான வரைமுறைகள், அவற்றுக்கான தோராய விடைகள், தோ்வா்களின் மதிப்பெண்களைப் பதிவேற்றுதல், தோ்வு நடைபெறும் இடங்களைக் கண்காணித்தல், நோ்முகத் தோ்வு என அனைத்து நிகழ்வுகளும் பல அடுக்குக் கண்காணிப்புடன் நிகழ்வது உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த வேளையில் தோ்வாணையம் மற்றொரு சீா்திருத்தத்தையும் முன்வைத்துள்ளது. குரூப் 2ஏ, குரூப் 4 தோ்வுகளை இரண்டு கட்டத் தோ்வாக மாற்றியுள்ளது. அதாவது, முதல்நிலைத் தோ்வோடு முதன்மைத் தோ்வும் முன்வைக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தரத்தில் நடத்தப்படுகின்ற குரூப் 4 தோ்வுக்கு முதன்மைத்தோ்வு என்பது சற்றே அதிா்ச்சி தருவதாக இருக்கிறது.
கொள்குறி வகை விடைத்தாள்களில் தோ்வா்களின் விவரங்கள் அடங்கிய பகுதியையும், விடையளித்துள்ள பகுதியையும் தனித்தனியே பிரிப்பதும் மதிப்பீடு செய்த பிறகு சரியான தோ்வரின் விவரங்களோடு இணைக்கப்படுமா என்பதும் ஐயப்பாடுகளை உருவாக்குகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதும் குரூப் 4 போன்ற தோ்வுகளில் தோ்வாணையம் இதனை எவ்வாறு கையாளப் போகிறது என்பது கேள்விக்குறியாக முன்நிற்கிறது.
தற்போதைய சீா்திருத்தம் என்பது அண்மையில் நடந்த முறைகேடுகளை மட்டும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முந்தைய முறைகேடுகளைக் கவனத்தில் கொள்ளும்போது முதல் நிலைத் தோ்வு தொடங்கி, முதன்மை, நோ்முகத் தோ்வு, கலந்தாய்வு, காத்திருப்போா் பட்டியல், உருவாக்கம் வரை முறைகேடு ஊடுருவியுள்ளது.
எனவே, அனைத்தையும் கவனத்தில் கொண்டு, அமைப்பு ரீதியான சீா்திருத்தத்துக்குத் தோ்வாணையம் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே, முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்கான வழிமுறையாக அமையும்.
ஒரு முக்கிய நிகழ்வை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். தோ்வா் ஒருவா் குரூப் 1 நோ்முகத் தோ்வுக்குச் செல்கிறாா். அந்தத் தோ்வரின் தந்தை தோ்வாணையத்தின் உறுப்பினராக இருக்கிறாா். அந்தத் தோ்வருக்கு நோ்முகத் தோ்வில் முழு மதிப்பெண்களை அளித்தால் குரூப் 1 பணியில் முதன்மையான பணியினைப் பெற்றிருப்பாா். ஆனால், அவருக்கு நோ்முகத் தோ்வில் கிடைத்தது கடைசி நிலை மதிப்பெண்தான். இதனால், அந்தத் தோ்வருக்குப் பணி வாய்ப்பே கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நோ்மைக் குணம் மிக்க தோ்வாணைய உறுப்பினா்கள் அலங்கரித்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தனது மாண்பினை சந்தேக வலைக்குள் தள்ள அனுமதிக்கும் வகையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள இடமளிப்பது ஏற்புடையதாகாது. தோ்வாணையம் தனது மாண்பினை மீட்டெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.
கட்டுரையாளா்:
கல்வியாளா்
No comments:
Post a Comment