Tuesday, March 31, 2020

ஆன்லைன்' மூலம் மது விற்பனை 'ரூம்' போட்டு யோசிக்கும் கேரளா

Added : மார் 30, 2020 23:28

திருவனந்தபுரம்:ஊரடங்கு உத்தரவால், மது கிடைக்காமல், ஒன்பது பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், 'ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆலோசித்து வருகிறோம்' கேரள முதல்வர், பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமை யிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், நாடு முழுதும், 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, மதுக் கடைகள் உள்பட, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.நாட்டிலேயே, அதிகம் அளவு மது விற்பனையாகும் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில், வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதைவிட, மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதுவரை, ஒன்பது பேர், மது கிடைக்காததால், தற்கொலை செய்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.'மது கிடைக்காத விரக்தி யில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது சமூகப் பிரச்னையாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதனால், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என, முதல்வர், பினராயி விஜயன் கூறியுள்ளார்.மது கிடைக்காததால், மதுவில் இருந்து விடுபட்டு வருவோருக்கு தேவையான ஆலோசனைகள், சிகிச்சை அளிக்க, மாநில கலால் துறைக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், 'பிரிஸ்கிரிப்ஷன்' எனப்படும் டாக்டர்கள் பரிந்துரையுடன் வருவோருக்கு, மது அளிக்கும்படி கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்திற்கு, இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கத்தின், திருவனந்தபுரம் கிளை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:மதுப் பழக்கத்தில் இருந்து விடுபடுவோருக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால், 'மதுவை வழங்க வேண்டும்' என, டாக்டர்கள் பரிந்துரைக்க முடியாது. மதுப் பழக்கத்தில் இருந்து விடுபடும் நிலையில் உள்ளவர்களுக்கு மது வழங்குவது, தீர்வாகாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024