Tuesday, March 31, 2020

ஒரே நாளில், 17 பேருக்கு வைரஸ் பரவியது எப்படி?

Added : மார் 30, 2020 21:56

சென்னை:தமிழகத்தில், ஒரே நாளில், 17 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 10 பேர், ஈரோட்டை சேர்ந்தவர்கள். மதுரை, கரூரில், தலா, ஒருவர்; சென்னையில், 5 பேருக்கு, கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பாதிக்கப்பட்ட, ஐந்து பேரில், நான்கு பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களில், 76 வயது மூதாட்டி, 56 வயது பெண், 15 வயது சிறுமி, 20 வயது வாலிபர் உள்ளனர். இவர்கள், நான்கு பேரும், மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் இருந்து திரும்பிய, கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 25 வயது வாலிபரின் குடும்பத்தினரான, இந்த நான்கு பேரும், தற்போது, சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேபோல, பிராட்வேயை சேர்ந்த, 50 வயது பெண் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு, தொற்று ஏற்பட்டது குறித்து, சுகாதார துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.கரூரில் பாதிக்கப்பட்ட நபர், 42 வயது ஆண், குளித்தலையில் வசிக்கிறார்; டில்லி சென்று திரும்பிய, தாய்லாந்து குழுவினருடன் பயணித்துள்ளார். இவர், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே போல், ஈரோட்டை சேர்ந்த, 10 நபர்கள், தாய்லாந்தை சேர்ந்தவர்களுடன், தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள், டில்லி சென்று திரும்பியவர்களுடன் பயணித்துள்ளனர். பெருந்துறை, ஐ.ஆர்.டி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும், மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 25 வயது நபர், ஏற்கனவே உயிரிழந்த, 54 வயது நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன்படி, இதுவரை, 1,853 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 67 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், 119 பேரின் முடிவுகள், ஓரிரு நாட்களில் வர வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024