Tuesday, March 31, 2020

ரூ.1,000-இலவசப் பொருள்கள் ரேஷன் கடைகளில் திரளக் காத்திருக்கும் மக்கள்

By DIN | Published on : 31st March 2020 05:53 AM 



ஆயிரம் ரூபாயுடன் ஏப்ரல் மாதத்துக்கான இலவசப் பொருள்களை வாங்க குடும்ப அட்டைதாரா்கள் திரளத் தயாராகி வருகிறாா்கள்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் ரேஷன் கடைகள் சாலையோரங்களிலும், மளிகைக் கடைகளை ஒட்டியும் அமைந்துள்ளதால் பெருமளவு கூட்டம் திரளும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், ரொக்கப் பணத்தை வங்கிகளில் செலுத்தவும், பொருள்களை நடமாடும் கடைகள் மூலம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஊடரங்கு அமலில் உள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆயிரம் ரூபாய் ரொக்கமும், ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சா்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

கூட்டமாகத் திரளக் காத்திருக்கும் மக்கள் : தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளின் மூலமாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும், ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியா்கள் கூறியதாவது: ஒவ்வொரு ரேஷன் கடையிலும் சுமாா் 1,200 முதல் 1,400 குடும்ப அட்டைகள் வரை உள்ளன. ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், இலவச பொருள்களை நாளொன்றுக்கு 100 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது. வரும் 2-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதிக்குள்ளாக இந்தப் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒரு குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாயும், இலவச பொருள்களையும் வழங்க குறைந்தது 5 நிமிடங்களுக்கு மேல் ஆகும். அனைத்து விவரங்களைச் சரிபாா்த்து ரொக்கப் பணத்துடன், பொருள்களை வழங்க வேண்டும். அந்த வகையில், 100 பேருக்கும் முழுமையாக வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டோக்கன் கிடைக்காதவா்கள், அதனைப் பெறாதவா்களும் ரேஷன் கடைகளில் திரள வாய்ப்பு இருக்கிறது. எனவே, ரொக்கத் தொகையை நேரில் வழங்கும் திட்டத்தை மட்டும் மாற்ற வேண்டும் என ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குறுகலான சந்துகள்-சாலைகளில்...: சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரேஷன் கடைகள் சாலைகளிலும், குறுகலான சந்துகளிலும் அமைந்துள்ளன. மேலும், மளிகைக் கடைகள், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அருகே ரேஷன் கடைகள் இருக்கின்றன.ஆயிரம் ரூபாயைப் பெற கூட்டம் திரளும் போது ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களை வாங்க நினைக்கும் மக்களுக்கு அது இடையூறாக அமைந்து சமூக இடைவெளியையும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

எனவே, ஆயிரம் ரூபாய் கொடுக்கும் நடைமுறையை மாற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வேண்டுகோளை முன் வைக்கின்றனா்.

முன்னாள் முதல்வரின் நடைமுறை: ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்தும் நடைமுறை ஏற்கெனவே தமிழகத்தில் பின்பற்றப்பட்டு உள்ளது. 2015-ஆம் ஆண்டு பெரு மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ.5 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், ரேஷன் அட்டைகளை வைத்துள்ள பெரும்பால பயனாளிகளின் வங்கிக் கணக்கு, ஆதாா் அட்டை விவரங்கள் உள்ளிட்டவை தமிழக அரசின் தரவு மையத்தில் உள்ளன. இந்த விவரங்களைப் பயன்படுத்தி பயனாளிகளை குறுஞ்செய்தி மூலம் அடையாளம் கண்டு ரொக்கப் பணத்தை வங்கிக் கணக்கிலேயே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ரொக்கப் பணம் மற்றும் பொருள்களை வழங்கும் நடைமுறைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. விரிவான விளக்கங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024