அந்தக் குரல்கள் நம் காதுகளை எப்போது எட்டும்? - உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10
கம்பளிப் பூச்சியொன்று தன்னுடைய நண்பனிடம் பல கேள்விகளைப் பரபரப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது. மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த புழுக்கூட்டைப் பார்த்து, அது என்னவென்று கேட்டது. ‘நீ நிதானமாகச் சில காலம் அதனுள்ளே கண்ணை மூடி தூங்கினால், பிறகு அந்தக் கூட்டை உடைத்துக்கொண்டு சிறகு முளைத்து, அதோ விண்ணில் பறக்கும் வண்ணத்துப்பூச்சியாக மாறுவாய்' என்றது நண்பன் கம்பளிப் பூச்சி.
ஆனால், ‘நான் ஏன் புழுக்கூடு எனும் சிறையில் காலத்தை வீணடிக்கவேண்டும்? என்னால் இப்பொழுதே பறக்கமுடியுமே' என்று தன் மேலிருக்கும் மெல்லிய ரோமங்களைச் சிலிர்த்துக்கொண்டு, சிறகுகள் முளைத்துவிட்ட மயக்கத்தில் மரக்கிளையிலிருந்து கீழே குதித்தது அந்தக் கம்பளிப்பூச்சி.
அது கீழே விழும் முன்னே சட்டென்று பறந்து வந்த ஒரு ஊர்க்குருவி, கம்பளிப்பூச்சியைக் கொத்திக்கொண்டு சென்றுவிட்டது.
சுவரொட்டியில் உறையும் பதின்பருவம்
பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் எதையும் செய்துவிடமுடியும், எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்ற அசட்டுத் தைரியம், நினைத்தவுடன் எல்லாம் நடக்கவேண்டும் என்கிற துடிப்பு, கிடைக்கவில்லை என்றால் உடனே உடைந்துபோய்விடுவது போன்றவை இந்தக் காலப் பதின்பருவத்தினரின் இயல்பாக இருக்கிறது.
சிறகுகள் முளைக்கும் முன்னரே, முதிர்ச்சியடையாத இறக்கைகளால் பறந்துவிட முடியும் என்ற அசட்டு நம்பிக்கையோடு முட்டிமோதிப் பறக்க நினைத்து நொறுங்கி விழும் பதின்பருவத்தினரின் திடீர் முடிவுகளில் ஒன்றான தற்கொலை முயற்சி, திடீர் மரணத்தில் முடிகிறது. வாழ்வை வண்ணங்களால் அலங்கரிக்க வேண்டிய வயதில், கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் மதில்களில் நிறைந்து காணப்படுவதைப் பார்ப்பது வேதனைதான்.
தனிமையின் வலி
உலகத் தற்கொலை புள்ளிவிவரங்களின்படி 70 வயதுக்கு மேலிருப்பவர்கள் இறப்பதற்கான முதன்மைக் காரணம் தற்கொலை. குடும்பம் சிதைவது, முதியவர்கள் புறக்கணிக்கப்படுவது, பொருளாதாரச் சுமையாய் முதியவர்கள் பாவிக்கப்படுவது, தனிமை, நோயின் தாக்கம், வலி, புலன் குறைபாடு போன்றவையெல்லாம் வெவ்வேறு தளத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி வயது முதிர்ந்தவர்களை மனஉளைச்சலுக்குத் தள்ளி, தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அவர்கள் தற்கொலைக்கு மனக்கவலை நோய் முக்கியக் காரணம்.
அதேபோல, சமீபகாலமாகக் குழந்தைகளோடு பெண்கள் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்வதும் அதிகமாகியுள்ளது. கணவரின் குடி, உடல், உளவியல் வன்முறை, பண நெருக்கடி என்று பல்வேறு புறக்காரணிகள் நெருக்கடி ஏற்படுத்துவதால் அணுஅணுவாய் சாவது போதும் என்று முடிவெடுத்து, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகத் தற்கொலை நிகழ்கிறது. தன்னுடைய குழந்தை (பல நேரங்களில் பெண் குழந்தை) தனியே தவிக்க வேண்டாம் என்று நினைத்து, சேர்ந்தே தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்கள் புறக்கணிக்கப்படுவதை இந்தத் தற்கொலைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
தனிநபர் பிரச்சினையா?
கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம், தேர்வில் தோற்பது, வாழ்க்கையே முடிந்துவிட்டதாகத் தீர்க்கமான முடிவு, உறவு சிக்கல், கல்விக் கடன் வசூலிக்க வருபவர் தரும் நெருக்கடி போன்றவை மாணவர் தற்கொலைக்கான காரணிகள்.
இப்படித் தற்கொலைகளின் காரணிகளை ஆய்வு செய்யும்போது, தனிநபரின் உளவியல் நெருக்கடிக்குக் காரணமாக அமையும் சமூகப் பொருளாதார, அரசியல், சூழலியல், கலாச்சார, உடல், உளவியல் காரணிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே தற்கொலைக்கு இட்டுச் செல்கின்றன. அதற்கு நேர்மாறாக, தனிநபர் காரணிகளை முன்னிறுத்தித் தற்கொலைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, தெளிவில்லா பிம்பத்தையே கொடுக்கும்.
இருட்டறையில் புலப்படாத வெளிச்சம்
ஒருவர் தற்கொலை செய்து இறப்பதற்கு முன்னால், சராசரியாக 20 முறையாவது தற்கொலைக்கு முயற்சி செய்வார் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. சட்டென்று முடிவெடுத்துத் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை குறைவே. தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் நெருக்கடிகளை உணரும்போது 'வாழ்வா, சாவா' என்ற இருமன ஊடாட்டம் மேலோங்கி இருக்கும். அவர்களுடைய சிந்தனை முழுக்கப் பிரச்சினைகள் மட்டுமே ஆட்கொண்டு இருக்கும் சூழலில், அதனால் மனதில் ஏற்படும் வலி, தன் மீதே ஏற்படும் கோபமும் வெறுப்பும், இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று யத்தனிக்கும் மனநிலையும் - தற்கொலைதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது போல நினைக்கத் தூண்டிவிடும்.
கதவுகள் மூடப்பட்ட இருட்டறையில் வெளிவர விழியில்லாதது போல் தோற்றமளித்தாலும், வெளிச்சத்தைத் தேட முயலாமல் தோற்றுப்போய், வெளியே வர வழி தெரியாமல் தனிமையில் உதவி தேடி அழும் அவர்களுடைய குரல்கள் பலரின் காதுகளை எட்டுவதில்லை. பல நேரம் ஒருவரது மரணத்துக்குப் பிறகுதான் அவர்களின் வேதனையையும் வலியின் போராட்டத்தையும் நம்மால் உணரமுடிகிறது.
தற்கொலைக்கு முயல்பவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவது உண்டு. ஏன் விடிகிறதென்றே தெரியவில்லை, தான் எதற்கும் பிரயோஜனம் இல்லை, என்ன செய்வதென்று வழியே தெரியலை என்று சிலர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள். பல நேரம் தனிமையிலேயே மூழ்கிவிடுவது, யாருடனும் பேச விருப்பமில்லாமல் இருப்பது, தன்னுடைய எல்லாவிதமான சட்டப்பூர்வக் கடமைகள், பொறுப்புகளை வேகமாய் முடித்துவிடுவது (உயில் எழுதிவைப்பது, வங்கிக் கணக்கை யார் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்வது) போன்ற செயல்கள், தற்கொலை எண்ணம் மேலோங்கியிருப்பவர் மறைமுகமாய் வெளிப்படுத்தும் செயல்கள்தான்.
தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் உதவி நாடி மற்றவரிடம் செல்லாமல் தன் பிரச்சினைகளைத் தானே கையாளுதல், சமூகத் தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ளாமல் தனிமையில் இருப்பது, பிரச்சினைகளை உணர்வுபூர்வமாகப் பார்த்து, உடனே தீர்வு வேண்டும் அதுவும் தாம் எதிர்பார்க்கும் தீர்வே வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள்.
தடுக்க முடியாதா?
மாணவர் பருவத்திலிருந்தே பிரச்சினைகளை எப்படிப் புரிந்துகொள்வது, எதைப் பிரச்சினைகளாய்ப் பார்ப்பது என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும்.
தனிநபராகவே செயல்பட்டு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வலிந்து அதிகரிக்கப்பட்டிருக்கும் சூழலில், கூட்டுச் செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.
தற்கொலைக்கு முயற்சிப்பவரைப் பொதுவாக இந்தச் சமூகம் கோழைகளாகவும், திறனற்றவர்களாகவும் சித்தரிக்கிறது. அந்த எண்ணத்தைத் தகர்க்க வேண்டும்.
தோழமை உணர்வுடன் பிரச்சினைகளை அவர்களுடைய கோணத்தில் புரிந்துகொள்ளும் அதே வேளையில், தற்கொலைக்கு உந்தித்தள்ளும் அந்தக் கணத்தை எப்படித் தள்ளிப்போட வேண்டும் என்றும், பிரச்சினையை மிகைப்படுத்திப் பார்க்கும் சிந்தனை முறையை மாற்றுவது எப்படி என்ற வழிமுறையையும் கற்றுத்தருவது அவசியமாகிறது.
சமூகச் செயல்பாட்டை அதிகரித்து, சமூகத் தொடர்பை அதிகரிக்கும்போது, தனிநபர் பிரச்சினைகள் பொதுவாக மாறுகின்றன. மக்களும் பொறுப்போடும் அக்கறையோடும் செயல்பட வேண்டிய காலம் இது. இந்தப் பிரச்சினையும் கடந்து போகும், மாற்றம் இயல்பானது என்ற அடிப்படைப் பார்வையைக் கற்றுத்தர வேண்டும்.
கட்டுரையாளர், அரசு மனநல மருத்துவர்
தொடர்புக்கு: spartacus1475@gmail.com