கலக்கலாய் வருது காரைக்கால் 'சரக்கு': தள்ளாடி நிற்குது தமிழகத்து எல்லைபடிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்து வோம் என்கிறது தமிழக அரசு. ஆனால், முழு மது விலக்கே வந்தாலும் காரைக்கால் சாராயமும், மதுவும் தமிழகத்துக்குள் கரைபுரண்டு வருவதை தடுக்கவே முடியாது போலிருக்கிறது. அந்த அளவுக்கு எல்லையில் நிலைமை ‘தள்ளாடி’க் கொண்டிருக்கிறது.
புதுச்சேரி என்றாலே..
புதுச்சேரி பயணம் என்றாலே மதுப் பிரியர்கள் ஜில்லிட்டுப் போவார்கள். காரணம் கேட்டால், வெரைட்டி கிடைக்கும்; விலை கம்மி என்பார்கள். இதைச் சொல்லியே, புதுச்சேரி ‘சரக்கை’ தமிழகத்துக்குள் கடத்தி வந்து காசு பார்ப்பவர்களும் உண்டு. முன்பு, உள்நாட்டில் தயாராகும் அயல்நாட்டு மதுவகைகள் மட்டும் அரசல்புரசலாகக் கடத்தப்பட்டன. ஆனால், இப்போது புதுச்சேரியிலிருந்து சாராயம், ஸ்பிரிட் உள்ளிட்ட சகல பானங்களும் தமிழகத்துக்குள் தங்கு தடையின்றி கடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள் எல்லையில் இருப்பவர்கள்.
புதுச்சேரியின் ஒரு அங்கம் காரைக்கால் மாவட்டம். இங்கிருந்து தாறுமாறாக பாயும் உள்நாட்டு வெளிநாட்டு சாராயமானது நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களின் எதிர்காலத்தை தவணை முறையில் முடமாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் முகம்காட்ட விரும்பாத மயிலாடு துறையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர்.
இது தொடர்பாக அவர் சொன்ன தகவல்கள் நம்மை உலுக்கிப் போட்டது.
“புதுச்சேரியிலும் காரைக்காலிலும் திரும்பிய பக்கமெல்லாம் மதுபானக் கடைகளும் சாராயக் கடைகளும் இருந்தாலும் உள்ளூர்வாசிகள் பெரிய அள வுக்கு இவைகளை நாடமாட்டார்கள். வெளி யூர்க்காரர்களாலும் இங்கிருந்து ‘சரக்கை’ கொள்முதல் செய்து தமிழகத்துக்கு கடத்து கிறவர்களாலும் தான் இந்தக் கடைகள் கணிசமாக கல்லாக்கட்டுகின்றன.
பத்து வழிகள் மூலமாக நாகையிலிருந்து காரைக்காலுக்குள் நுழைந்துவிட முடியும். இவற்றில் பிரதானமான ஆறு இடங்களில் மட்டும் தமிழக போலீஸார் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். ஆனாலும், காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள், ஸ்பிரிட் மற்றும் சாராய பாக்கெட்டுகள் சரளமாக தமிழகத்துக்குள் கடத்தப்படுகின்றன. காரைக்காலில் இதற்கென இருக்கும் மொத்த வியாபாரிகள் சிலர், மது விலக்கு பிரிவு, உள்ளூர் போலீஸ் என அனைவரை யும் ‘முறையாக’ கண்ணைக் கட்டி விட்டு, கல்லாக் கட்டுகிறார்கள்.’’ என்கிறார் அந்த சமூக ஆர்வலர்.
குவாட்டர் 300 ரூபாய்
அவரே தொடர்ந்தும் பேசுகையில், “உச்ச நீதிமன்ற உத்தரவால் மயிலாடுதுறையிலும், கும்பகோணத்திலும் கிட்டத்தட்ட மதுக்கடைகளே இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட கடத்தல் புள்ளிகள், ‘சரக்கு’களை இந்தப் பகுதிகளுக்கு கடத்தி வந்து குவாட்டர் 300 ரூபாய் வரை விற்கிறார்கள். இதில் பெரும்பகுதியானவை, வியாபாரிகளே ஸ்பிரிட்டை கலந்து தயார் செய்யும் ஆபத்து மிகுந்த ‘அட்டுச் சரக்கு’ என்பது குடிமகன்களுக்கே தெரியாது.
இதுதவிர, காரைக்கால் சாராயக் கடைகளில் மொத்தமாக சாராயத்தை வாங்கி அவற்றை ஐஸ் பாக்கெட்டுகளில் 200 மில்லி அளவுக்கு அடைத்து தமிழகத்தின் எல்லையோர கிராமங் களில் சப்ளை செய்கிறார்கள். விலை மலிவு என்பதால் இதற்கும் ஏக கிராக்கி. பெரும்பாலும் இருபதிலிருந்து முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் இப்படி சாராயம், மது கடத்தலில் ‘குருவி’களாகப் பறக்கிறார்கள்.
குருவிக்கு கூலி 2,000 ரூபாய்
ஐநூறு குவாட்டர் பாட்டில்களை இரு சக்கர வாகனத்தில் கச்சிதமாக கடத்திக் கொடுத்தால் 2,000 ரூபாய் கூலி தருகிறார்கள். இதுக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலரும் இப்போது இந்த வேலையில் இறங்கி இருக்கிறார்கள். நெடுங்காடு, நல்லாடை, பருத்திக்குடி, குரும்ப கரம், குளக்குடி, பொன்பேத்தி, சுரக்குடி உள் ளிட்ட எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இப்போது இதுதான் முழுநேர தொழிலே.’’ என்று சொன்னார்.
காசுக்காக இப்படி கடத்தலுக்குத் துணிந்தவர் களில் சிலர், வாகனங்களில் பதற்றத்துடன் வேகமாக பறக்கும்போது விபத்துக்களை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் கை, கால் முடமாகிப் போகிறவர்களும் உண்டு. மதுக்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கைமீறிய வருமானம் கிடைப் பதால் அவர்களும் போதைக்கு அடிமையாகிறார்கள். இவர்கள் மிதமிஞ்சிய போதையில் தங்களது மனைவியை துன்புறுத்துவதும் அவர்களையும் குடி நோயாளிகளாக்கும் அவலங்களும் நடக்கின்றன.
நல்லாடை என்ற கிராமத்தில், தினமும் மது வாங்கித் தரும் கணவன் தொடர்ந்து இரண்டு நாள்கள் வாங்கித் தரவில்லை என்பதால் விஷம் அருந்தி தற்கொலைக்கு துணிந்தி ருக்கிறார் ஒரு பெண்மணி. இன்னொரு கிராமத்தில், தான் வீட்டில் இல்லாதபோது தனது மனைவி வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியதாக மரத்த டிப் பஞ்சாயத்தைக் கூட்டி இருக்கிறார் ஒரு ‘குடிமகன்.’
பெண்களும் கடத்துகிறார்கள்
மதுக்கடத்தலில் கிடைக்கும் வருமானத்தைப் பார்த்துவிட்டு தற்போது ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் இந்தத் தொழிலில் குதித்திருக்கிறார்கள். போலீஸ் காவல் இருக்கும் வேலங்குடி சோதனைச்சாவடி வழியாக தினமும் இரு சக்கர வாகனத்தில் ஊடுருவும் ‘டிப் டாப்’ நங்கையர் இருவர், கட்டைப் பைகளில் சர்வ சாதாரணமாக சரக்குகளை அள்ளிக்கொண்டு பறப்பதாய் சொல்கிறார்கள். இப்படி, ஆம்னி பேருந்தில் சரக்குக் கடத்திய இளம் பெண்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்கள்.
நடமாடும் மதுக்கடைகள்
மதுக்கடைகள் அகற்றப்பட்ட தமிழக பகுதிகளில் பலர் நடமாடும் மதுக்கடைகளையும் நடத்துகிறார்கள். இந்த நேரத்துக்கு, இந்த இடத்துக்குப் போனால் இன்னாரிடம் ‘சரக்கு’ வாங்கலாம் என்று பட்டியலே வைத்திருக் கிறார்கள் ‘சரக்கு’ச் சக்கரவர்த்திகள். இவர்கள் தங்களுக்கு பிசின்ஸ் கொடுக்கிறார்கள் என்ப தால் பார்டரில் இருக்கும் புதுச்சேரி மதுக்கடைக் காரர்கள் சிலர், இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க போலீஸுக்கும் ‘படியளப்பதாக’ சொல்கிறார்கள். அதேசமயம், சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கடத்தல் நபர்களை பிடித்ததாகவும் அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கணக்குக் காட்டுகிறார்கள். இவைகளில் பெரும்பாலான வழக்குகள் பக்கா ‘செட்-அப்’ என்கிறார்கள்.
மொத்தத்தில், தங்குதடை இல்லாமல் ஜரூராய் நடக்கும் புதுச்சேரி - தமிழக ‘சரக்கு’ப் போக்குவரத்தால் ‘தள்ளாடி’க் கொண்டிருக்கின்றன தமிழகத்தின் எல்லையோர கிராமங்கள்!