Sunday, July 2, 2017

ஒளிரும் நட்சத்திரம்: ஸ்ரீதேவி

ஓவியம் ஏ. பி. ஸ்ரீதர்*
 இந்தியத் திரையுலகம் எத்தனையோ கனவு தேவதைகளை உருவாக்கி அளித்திருக்கிறது. அவர்களில் ஸ்ரீதேவியின் சாதனைகளை முறியடிக்க யாருமில்லை. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. 54 வயதில் அடிவைக்கக் காத்திருக்கும் ஸ்ரீதேவிக்கு மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு தர விரும்பிய அவருடைய கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் 300-வது படத்தைத் (மாம்) தயாரித்து, அதை ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்கிறார்.

* கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது ‘துணைவன்’ (1969) படத்தில். ‘சாண்டோ’ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் எம்.ஏ. திருமுகம் எனும் சாதனை இயக்குநரால் கண்டறியப்பட்டு, இசையருவி கே.பி.எஸ், சௌஹார் ஜானகி, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன் போன்ற சாதனைக் கலைஞர்களுடன் முதல் படத்திலேயே நடிக்கும் பேறுபெற்றார். குழந்தை முதலே கொள்ளை அழகாக விளங்கிய ஸ்ரீதேவிக்கு மீண்டும் பல படங்களில் முருகன் வேடம் கிடைத்தாலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் விதவிதமாகக் குழந்தை கதாபாத்திரங்கள் கிடைத்தன. அவற்றில் 1971-ல் பி.கே.பொற்றேகாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘பூம்பட்டா’ என்ற படம், சிறுமி ஸ்ரீதேவியை பிறவிக் கலைஞராக அடையாளம் காட்டியது. அதில் சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா என்ற சிறுமியாக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் வென்றார்.

* குழந்தை நட்சத்திரமாகப் புகழ்பெற்றுவிட்டாலும் குமரியானதும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற உந்துதல் சாவித்திரியைப் பார்த்தே உருவானது எனக் கூறும் ஸ்ரீதேவி, தனது 12 வயதில், சேதுமாதவன் இந்தியில் இயக்கிய ‘ஜூலி’படத்தில் அறிமுகமாகி, கதாநாயகியின் தங்கையாக நடித்தார். அதன்பிறகு ஸ்ரீதேவியை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தனது ‘மூன்று முடிச்சு’ படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுப்படுத்தினார். அந்தப் படத்தில் கமல், ரஜினியுடன் தொடங்கிய பயணம்... ‘16 வயதினிலே’ மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. அன்று ரசிகர்கள் நேசித்த பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் தேர்வாக மாறினார்.

* ‘காதல் இளவரசன்’ எனக் கொண்டாடப்பட்ட 80-களின் கமலுக்குக் கச்சிதமான ஜோடி என ரசிகர்களால் பிரகடனம் செய்யப்பட ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘மீண்டும் கோகிலா’, ‘வாழ்வே மாயம்’, ‘குரு’ போன்ற பல படங்கள் காரணமாக அமைந்தன. இந்த இணையின் முத்தாய்ப்பாக அமைந்தது ‘மூன்றாம் பிறை’. குழந்தைமை நினைவுகள் கொண்ட குமரிப்பெண்ணாக ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டும் அவருக்கு இந்தப் படத்தில் கிடைத்திருக்க வேண்டிய நடிப்புக்கான தேசிய விருதை, கமலின் நடிப்பு வென்று நின்றது. எனினும் என்னைவிடச் சிறந்த நடிப்பை ஸ்ரீதேவியே வழங்கியிருந்தார் என்று கமலைக் கூற வைத்தது ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு ஆளுமை.

* கமல், ரஜினியோடுதான் ஸ்ரீதேவி நடிப்பார் என்ற முத்திரைக்குள் சிக்கிவிடாமல், சிவகுமார், விஜயகுமார் என அனைத்து முக்கிய நடிகர்களையும் மதிக்கும் நாயகியாக மிளிர்ந்தார். அவ்வளவு ஏன் தலைமுறைகளைக் கடந்து கதாநாயகியாகவே மிளிந்த சாதனை ஸ்ரீதேவிக்கு மட்டுமே உரியது. தெலுங்குப் படவுலகம் கொண்டாடிய நாகேஸ்வர ராவுக்கு ஜோடியான ஸ்ரீதேவி, அவருடைய மகன் நாகார்ஜுன் ஜோடியாகவும் நடித்தார். இந்திப் படவுலகிலோ தர்மேந்திராவுடன் ஜோடி சேர்ந்தவர் , அவருடைய மகன் சன்னி தியோலுக்கும் ஜோடியாகி அசத்தினார்.
* நடிப்புக்கும் கதாபாத்திரத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரும் முக்கிய நட்சத்திரமாக மாறிய ஸ்ரீதேவி, தமிழைத் தாண்டி தென்னிந்திய மொழிகளைக் கடந்து, இந்திப் படவுலகில் தனித் தடம் பதித்தது முன்மாதிரி இல்லாத வெற்றிக்கதை. அவர் இந்தியில் அறிமுகமான ‘சோல்வா சாவன்' தோல்வி அடைய, துவண்டுவிடாமல் ‘ஹிம்மத்வாலா'வில் ஹிட் அடித்தார். அதன் பிறகு போனி கபூரை மணந்துகொள்ளும் வரை அவருக்கு வாய்ப்புகள் குவிந்துகொண்டேயிருந்தன.
* திருமண வாழ்க்கையில் சிறந்த மனைவியாக, இரு பெண் குழந்தைகளின் அர்ப்பணிப்பு மிக்க தாயாக, திரை நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் திரையிலிருந்து விலகிய 15 ஆண்டுகளுக்குப் பின் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் வசீகரம் குறையாத தோற்றத்துடன் தோன்றி நடித்தார். ஆங்கிலம் பேசக்கற்றுக்கொண்டு சாதிக்கும் சசி கதாபாத்திரம் ஏற்றுத் தன்னம்பிக்கை காட்டினார். “சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இன்னும் நிறையவே காலம் நேரம் இருக்கிறது” என்கிறார் தாய்மையை ஹீரோவாகக் காட்டும் அடுத்த கதாபாத்திரத்தை எதிர்பார்த்தபடி.

* திரை நடிப்பிலிருந்து வெளியேறியபோது எப்படி இருந்தாரோ, அதைப் போலவே இன்றும் தன் தோற்றத்தை எப்படிப் பராமரிக்கிறீர்கள் என்று கேட்டால் “ எதிர்மறையான எண்ணங்கள் எதுவும் மனதில் நுழைய அனுமதிக்கக் கூடாது. முடிந்தவரை சந்தோஷமாக இருக்கக் பழகிக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் சந்தோஷம் இருந்தால் முகத்தில் இளமை இருக்கும். இதுவே என் இளமையின் ரகசியம்” என்பது ஸ்ரீதேவியின் பதில்.

* “நடிக்கும்போது நடிகையாக இருந்ததில் கிடைத்த மகிழ்ச்சியைவிட எனது குழந்தைகளுக்கு அம்மாவாக நான் இருப்பதிலும் அன்பான கணவரின் மனைவியாக இருப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறும் ஸ்ரீதேவி “எல்லா அம்மாக்களையும் போல “வெளியே சென்ற மகள்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்ற கவலையுடன் வயிற்றில் நெருப்பைக், கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன்” என்று கூறி சாமானிய அம்மாவாகவும் மாறிவிடுகிறார்.

* “இன்று பெண்கள் சாதிக்க யாரும் அறிவுரை கூற வேண்டியதில்லை” என்பவர், “திருமணம் ஆனதும் பெண்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் கணவருக்காக, குழந்தைகளுக்காக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்” என்று அனுபவப் பாடம் சொல்லித் தருகிறார். தினசரி 1 மணிநேரம் ப்ளோர் உடற்பயிற்சி செய்பவர். அதில் முக்கியமானது 250 முறை ஸ்கிப்பிங் செய்வது. வாரத்தில் இருமுறை நீச்சல் பயிற்சி. பொரித்த உணவுகளை ஸ்ரீதேவி சாப்பிட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. ஸ்ரீதேவி இதுவரை கோபப்பட்டு யாரிடமும் பொரிந்ததில்லை என்பது கணவர் போனி கபூரின் சாட்சியம்.
தொகுப்பு: ஆர்.சி.ஜெ.

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2025