Monday, July 3, 2017

Swiss Bank Deposit

சுவிஸ் வங்கியில் அதிகப் பணம்... 88-வது இடத்தில் இந்தியா!

சுவிஸ் வங்கிகளில், அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் இந்தியா 88-வது இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் அதிகப் பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், அடுத்தடுத்த இடங்களில் மேற்கிந்தியத் தீவுகள், பிரான்ஸ், பனாமாஸ், ஜெர்மனி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு 61-வது இடத்தில் இருந்த நம் இந்தியா, தற்போது 88-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சமீப காலமாக சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவே, இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதனால், சுவிட்சர்லாந்து அரசும் தன் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை அளிக்கவும் ஒப்புக்கொண்டது. மேலும், மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பண மதிப்பு குறையத் தொடங்கியது. தங்களின் கணக்கிலிருந்த பணத்தை அவர்கள் ஏற்கெனவே பெருமளவில் எடுத்துவிட்டபடியால், சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்களின் மொத்த பணத்தில், இந்தியர்களின் பணம் 0.04 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இதன்படி, அந்த நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் பணம் 4,500 கோடி ரூபாய் உள்ளது என 2016-ம் ஆண்டு இறுதிவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அது, ''ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளை ஒப்பிடும்போது, தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் குறைவான தொகையையே டெபாசிட் செய்துள்ளனர்'' என்கிறது.

2007 முதல் 2013 வரையான காலகட்டத்தில், முதல் 50 இடங்களுக்குள் இருந்த இந்தியா, அதிகபட்சமாக 2004-ம் ஆண்டில் 37-வது இடத்தில் இருந்தது என்பதும் அதேசமயத்தில், 2015-ம் ஆண்டு 75-வது இடத்திலிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவைவிட சுவிஸ் வங்கிகளில் அதிகப் பணம் வைத்திருக்கும் பாகிஸ்தானியர்கள், இந்தப் பட்டியலில் 71-வது இடத்தில் உள்ளனர். நம்முடைய மற்ற அண்டை நாடுகளான சீனா 25-வது இடத்திலும்,வங்கதேசம் 89-வது இடத்திலும், நேபாளம், இலங்கை 150, 151-வது இடங்களிலும் உள்ளன. பூடான் 282-வது இடத்தில் உள்ளது. 

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024