சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோயிலில் இருந்த தங்கக் கொடிமரம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, புதிய கொடிமரத்தை, கடந்த மாதம் 25-ம் தேதி, சபரிமலையில் பிரதிஷ்டை செய்துவைத்தனர். அதன்பின், ஆராட்டுத் திருவிழாவுக்காக புதிய தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, 10 நாள்கள் திருவிழாவும் நடந்துவருகிறது.
புதிய தங்கக் கொடிமரத்தைத் தரிசிப்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துவருகின்றனர். தற்போது, கேரளாவில் தென் மேற்குப் பருவமழை கடுமையாகப் பெய்துவருகிறது. சபரிமலையிலும் கனமழை பெய்ந்து வருவதால், பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள், பம்பை ஆற்றில் குளிக்க போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.
பக்தர்கள் யாரும் ஆற்றில் இறங்கிவிடாதபடி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.
தற்போது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழக பக்தர்கள் பெருமளவு சபரிமலையில் குவிந்துள்ளனர். அவர்கள், கனமழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி அய்யப்பனையும் புதிய தங்கக்கொடி மரத்தையும் தரிசிக்க காத்துக்கிடக்கின்றனர். சபரிமலையின் சீசன் காலங்களான மகரவிளக்கு, மண்டல விளக்குப் பூஜை போன்று இப்போதும் கணிசமான பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், போலீஸார் அதிக அளவு பாதுகாப்புப் பணியில் உள்ளனர். வழக்கமாக, சபரிமலை கோயில் நடை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இப்போது 11 மணிக்கு அடைக்கப்படுகிறது. நேற்று மாலை, சபரிமலையில் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. பூஜையின்போது, சுவாமி அய்யப்பன் யானையின் மீது பவனியாக எடுத்து வரப்பட்டார். அதை சபரிமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.
Dailyhunt
No comments:
Post a Comment