மாற்றங்களுக்குத் தயாராகட்டும் மனம்
By இரா. கதிரவன் | Published on : 30th March 2018 01:19 AM |
இன்றைய உலகம் ஓர் ஓட்டப் பந்தயக் களம் ஆகிவிட்டது என்றால் அது மிகைச் சொல்ல அல்ல. இங்கு ஓர் அறிவிக்கப்படாத போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவரவர் துறையில் முதலிடத்தை தேடி ஓடுதலும், பொருள் தேடல், உயர்ந்த இடத்தைப் பிடிப்பது என்ற போட்டியில் கற்றோர் -கல்லாதவர், ஏழை - பணக்காரர், தனி நபர்- நிறுவனங்கள் என அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்போட்டியின் வேடிக்கையான அம்சம், இதன் களவிதிகளும் நாள்தோறும் மாறுவதுதான். நேற்றைய விதிகளுக்கேற்ப இன்று தம்மை தயார் செய்து கொள்பவர், நாளைய பந்தயத்தில் கலந்து கொள்ளவே முடியாது என்னுமளவுக்கு மாறுதல்கள் நிகழ்கின்றன.
பெரும் தொழில் மற்றும் சேவை நிறுவனங்களைப் பொருத்தவரை, தொழில்நுட்ப மாறுதல்கள், மாறிவரும் நுகர்வோர் தேவைகள், சேவையில் புது நோக்கு, நூதன சேவை அல்லது பொருட்கள் என பல மாறுதல்களுக்கு ஈடு கொடுப்பவர்கள் மட்டுமே களத்தில் நிற்க முடியும் .
வெற்றிகரமான நிறுவனங்கள் எல்லாவற்றிலும் ஒரே பொது அம்சம், அவை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதுதான். நூறு ஆண்டுகளை கடந்த பல பெரிய நிறுவனங்கள் கூட தங்களது நிர்வாகத்திலும் நோக்கிலும் மாறுதல்களை வேகமாக செயல் படுத்தாததால் காணாமல் போவதைப் பார்க்கிறோம்.
இன்னொருபுறம், தொழில்நுட்ப ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவதும், சந்தையில் நுகர்வோர் மனங்களில் அந்த மாற்றங்களை ஏற்புடையதாகச் செய்யும் நிறுவனங்களே நீண்ட காலம் நிலைத்து, பிற நிறுவனங்களுக்கு முன்னோடியாக நிற்க முடிகிறது.
நிறுவனங்களுக்குப் பொருந்தும் இவ்விதிகள் அங்கு பணிபுரிவோருக்கும் பொருந்தும். தனது நிறுவனத்தில் மாறிவரும் சூழலுக்கேற்ப அதில் பணிபுரிபவர்கள் தம்மை செம்மைப்படுத்திக் கொள்வர். நிறுவனங்களும் அவர்களுக்குரிய பயிற்சி வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இவர்கள் தமது பலம் - பலவீனம் ஆகியனவற்றை தொடர்ந்து பரிசீலித்து, பலத்தினைப் பெருக்கியும், பலவீனங்களை பலமாக மாற்றுவதனையும் ஒரு நடைமுறையாக கொள்வதனைக் காணலாம்.
இப்படி நிறுவனத்தின் நோக்கத்துக்கும் தேவைகளுக்கும் ஏற்ப தனது திறமையை வளர்த்துக் கொள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்; அதிகார படிக்கட்டுக்களில் ஏறி மேற்செல்கிறார்கள். மாறுதல்களுக்கு தங்களை தயார் செய்யாதவர்கள் தேங்குகிறார்கள்.
தனியார் - மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இவ்வாறிருக்க, அரசுத் துறை ஆமை வேகத்தில்தான் மாற்றங்களை எதிர்கொள்கிறது. பெரும்பாலான தனியார் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் கருத்துப் பரிமாற்றத்துக்கு ஒருவரது பதவி அல்லது வயது தடைக்கல்லாக இருக்க முடியாது. தனது மூத்த அதிகாரியின் தவறுகளைக் கூட ஒருவரால் துணிச்சலோடு சுட்டிக்காட்ட முடியும். அவரது கருத்துகளைவிட நல்ல, புதிய, மாற்றுக் கருத்துகளை முன்வைத்து அதன் சாதக பாதகங்களை வாதிட முடியும்.
ஆனால், ஒரு தாசில்தார் அலுவலகத்திலோ அல்லது ஒரு மாவட்ட போலீஸ் அதிகாரி அலுவலகத்திலோ இப்படி ஒரு ஊழியர், தனது அதிகாரிக்கு ஆலோசனையை உரிமையோடு கூற முடியுமா? இன்னும் நாம் பிரிட்டிஷார் காலத்தில் இருந்த அதே மனோபாவத்தோடு, மாற்றங்களுக்கு இடங்கொடுக்காமல் இருக்கிறோம். பல நிர்வாக சீரமைப்பு ஆணைய சிபாரிசுகள் வந்தாலும், மாற்றங்களை ஏற்காமல் இன்னமும் நம்மை பிரிட்டிஷ் காலத்தில் வைத்திருக்கும் கள நிலவரத்தை மறுக்க முடியாது.
நிறுவனங்கள், அரசுத்துறை என்பவற்றைத் தாண்டி, மாற்றம் குறித்துப் பேசும்போது மிக முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியவர்கள் இன்றைய இளைஞர்கள்தான். பெற்றோரை சார்ந்திருப்பவர் என்ற நிலையிலிருந்து, தனித்து நிற்பவர் என்ற நிலைக்கு மாற வேண்டிய இளைஞர்களை அத்தகைய மாறுதல்களுக்குத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு, பெருமளவு பெற்றோருக்கும், ஓரளவு ஆசிரியர்களுக்கும் உள்ளது.
இளைஞர்கள் அவர்களது எதிர்காலத்தை தாமே உருவாக்கிக் கொள்ள, பெற்றோர் கிரியா ஊக்கியாக செயல்பட்டு, அவர்களுக்கு சவால்களை எதிர்கொள்ளும் பழக்கத்தினை ஏற்படுத்தவும், சோதனை முயற்சிகளில் ஈடுபட அனுமதிக்கவும் வேண்டும்.
மாறுதல் என்பது ஒருவழிப் பாதை அல்ல. இங்கு பெற்றோரும் மாற்றங்களுக்கு தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; இளைஞர்கள் வளரும்போது அவர்களுக்குரிய இடத்தை தந்து, பல விஷயங்களில் தங்களது உரிமையை விட்டுத்தர பெரியவர்கள் முன்வர வேண்டும்.
பதின்பருவம் தாண்டி இருபதுகளை எட்டும் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் சில முக்கிய கேள்விகளை முன்வைக்கலாம். பல புதிய சூழல்களை கற்பனையாக உருவாக்கி, அதற்குத் தீவிரமாக பதில் தேட கற்றுத் தருதல் பெரும் பயனளிக்கும்.
நாளைக்கே நான் வேலையை இழந்தால்?... அல்லது, உடனடியாக தொலைதூர நகருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டால்? அடுத்த மாதம் நமக்கு சில லட்சம் பணம் கிடைத்தால்? ஒரு தொழிலில் பங்குதாரராக இருக்கும் வாய்ப்பு வந்தால்? ஒரு குடியிருப்பு வளாகத்துக்கு தலைவராகப் பொறுப்பேற்றால்? ஒரு விழாவினை நடத்தும் பொறுப்பு தரப்பட்டால்? மொழி தெரியாத வெளியூரில் வேலை கிடைத்தால்...என்ற பல கேள்விகளை எழுப்பி, அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களை தீட்டச் செய்யலாம். இவை புது சூழலை கற்பனை செய்யவும் அதற்கேற்ப சிந்தனையை விரிவுபடுத்தவும்
செய்யும்.
சில சவாலான வேலைகளை சுதந்திரமாக மேற்கொள்ள வைக்கும்போதும், இன்னும் ஐந்தாண்டுகள் - பத்தாண்டுகளுக்குப் பிறகு எந்த இலக்கினை அடையப் போகிறார்கள், அதற்கான தயாரிப்புகள், திட்டங்கள் எவை என்பன போன்ற கேள்விகளை சந்திக்கும்போதும் இளைஞர்கள் மாறுதல்களை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.
பழகிய பாதையில் பயணிப்பது இளைஞர்களுக்கு எளிதாக, பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அது மாறுதல்களை சந்திப்பதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாது.
மாறாதது மாற்றம் ஒன்றே என்ற பழஞ்சொல்லுக்கேற்ப அவர்கள் மனதைத் தயார் செய்ய வேண்டும். இளைஞர்களை மாற்றங்களுக்குத் தயார்ப்படுத்துவது மட்டுமல்ல, மாற்றங்களை ஏற்படுத்த தயார்ப்படுத்துவதும் மேலும் சிறந்ததாகும்.