Thursday, March 29, 2018

சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c

ஜெ.நிவேதா     VIKATAN   28.03.2018

சர்க்கரைநோய்... பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம். இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் அடிப்படை. ஆனால், இந்த சாதாரண பரிசோதனை முறையைவிட துல்லியமாகக் கணக்கிடக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது, அது ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c).



2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, `உலகிலுள்ள பதினோரு பேரில் ஒருவருக்கு சர்க்கரைநோய் உண்டு’ என்கிறது. டைப் 2 டயாபட்டீஸ், வாழ்வியல் நோய்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. சர்க்கரைநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், அதன் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சர்க்கரைநோயை உறுதி செய்வதற்கும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இருக்கும் வழிமுறைகளில் முக்கியமான ஹெச்.பி.ஏ.1.சி சோதனை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் வழக்கமான முறையைவிட, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் துல்லியமாக இருக்கும். ஏனென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் முறைகளின் ரிசல்ட், பரிசோதனைக்குள்ளானவர் அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமும் என்ன சாப்பிட்டார் என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட்டில் கடந்த மூன்று மாதங்களாக குளூக்கோஸ் எந்த அளவுக்கு ரத்தத்தில் அதிகரித்திருக்கிறது, எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். இந்த அளவை சற்று அதிகரித்துப் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association). இந்தப் பரிசோதனை, அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் வலியுறுத்தும் புதிய அளவீடு குறித்து சர்க்கரைநோய் நிபுணர் ராம்குமாரிடம் பேசினோம்...

"நமது உடம்பிலுள்ள கணையம் எனும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் குறைவாக சுரக்கும் போதும், சரியாக வேலை செய்யாத போதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள், உடலிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்வதுக்கொள்வது போல், ஹெச்.பி.ஏ.1.சி. (HbA1c) பரிசோதனையையும் செய்துக்கொள்ளவது நல்லது. இந்த பரிசோதனையின் மூலம் கிடைக்கும் அளவு, ரத்தச்சிவப்பணுக்களிலுள்ள சர்க்கரை அளவைக் குறிக்கும். ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையில், ஹெச்.பி.எல்.சி. (HPLC) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதும், பாதிக்கப்பட்டுள்ளார் எனில் அவரின் சர்க்கரை அளவு கடந்த மூன்று மாதங்களில் எவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கேற்ப மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் அளவு, 5.6 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் பாதிப்பு இல்லை என்று அர்த்தம். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரைநோய் வரலாம் (Pre-Diabetes) என்று அர்த்தம். இவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.6.5 மேல் இருந்தால் சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட், வருடத்திற்க்கு இரண்டு அல்லது நான்கு முறை செய்யப்படும். 6.5 முதல் 7 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கிறது என்றும் பொருள். 7 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லை, 8 சதவிகிதத்துக்கு மேல் என்றால், மிக மோசமான நிலை என்று பொருள்.



ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்டின் இந்த அளவீடுகளில்தான் இப்போது சிக்கல் உருவாகியிருக்கிறது. இந்த 7 சதவிகிதம் என்ற அளவு, இப்போது அமெரிக்க மருத்துவர்கள் அமைப்பு (American college of physicians) மூலம் 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் க்ளினிக்கல் எண்டோக்ரைணாலஜி (American Association of Clinical Endocrinolog), 6.5 சதவிகிதம் தான் சரியான அளவெனக் கூறுகின்றனர். அமெரிக்கன் டயாபிடிஸ் அசோசியேஷன் (American Diabetes Association) 7 சதவிகிதத்தையே சரியெனக் கூறுகின்றனர்.

இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்கள் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவுகளை, நோயாளியின் வயது மற்றும் அவரது உடலில் ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளை வைத்துதான் அளவிடுவார்கள். பொதுவாக 6.5 முதல் 7 சதவிகிதம் வரை சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நோயாளிகள் அறிவுறுத்தப்படுவார்கள். உதாரணமாக, சர்க்கரைநோயைத் தவிர உடலில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் 7 சதவிகிதம் என்ற அளவை மிகத் துல்லியமாக வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். உடல் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், நோயாளியின் உடல் சிகிச்சைக்கு முழுவதுமாக ஒத்துழைக்காமல் போகும் என்பதால் அவர்கள், 8 சதவிகிதம் வரை இந்த அளவை வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். இதுபோன்ற சூழலில் சர்க்கரைநோயைத் தவிர உடல் சார்ந்த எந்த பாதிப்பும் இல்லாத ஒருவர் 8 என்ற சர்க்கரை அளவை சரியானதாக நினைத்துக்கொண்டு, அதைப்பின்பற்றுவது அவரது சர்க்கரை பாதிப்பை தீவிரப்படுத்தக்கூடும். இப்படி சர்க்கரைநோய்க்கான பாதிப்பு அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கும். உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்" என்கிறார் சர்க்கரை மற்றும் நாளமில்லா சுரப்பி மருத்துவர் ராம்குமார்.

ஏன் இந்தச் சிக்கல்?

சர்க்கரைநோய்க்கான அளவை அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் அதிகரித்ததுபோல், அண்மையில் ரத்த அழுத்தத்துக்கான அளவுகோலை அமெரிக்க இதயநல மருத்துவர்கள் சங்கம் குறைத்திருக்கிறது. இதுவரை 140/90 எம்.எம்.ஹெச்.ஜி என்று இருந்த அளவு, 130/80 என பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அளவு மாற்றங்கள் குறித்து பொது மருத்துவர் கு.கணேசனிடம் பேசினோம்...



"சர்க்கரைநோய்க்கான அளவு எட்டாகிவிட்டால், 7-8 சதவிகிதம் அளவிலிருப்பவர்கள், தாங்கள் சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, தங்களுடைய சிகிச்சை முறைகளைத் தளர்த்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அமெரிக்க சர்க்கரைநோய் சங்கத்தின் ஆய்வுகள், அங்கே வாழ்பவர்களின் வாழ்வியலைப் பொறுத்தது. அவர்கள் கூற்றுப்படி, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவு 7 முதல் 8 சதவிகிதம்வரை, எந்த அளவிலிருந்தாலும், அது ஏற்படுத்தும் பாதிப்புகளில் மாற்றமிருக்காது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தியாவின் உணவு, சூழல், தட்பவெப்பநிலை முதலியவற்றை ஒட்டி இந்த ஆராய்ச்சி அமையவில்லை. அப்படியென்றால், `நாம் இப்போது பின்பற்றும் 6.5 - 7 சதவிகிதம் என்ற அளவு யாரால் முன்மொழியப்பட்டது?’ என நீங்கள் கேள்வி எழுப்பலாம். அது, இந்தியாவைச் சுற்றியுள்ள சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளம் போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த கோட்பாடு. ஆக, நமக்குப் பொருந்தும் அளவுகோல் 6.5 - 7 சதவிகிதம்தான்.

இது போன்ற அளவு விரிவாக்கங்கள், ஒருவரின் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தவும், பாதிப்பே இல்லாதவர்களை நோயாளியாக்கவும் செய்துவிடும். இதெல்லாம் இன்று, நேற்று நடப்பதல்ல. சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு எனப் பல விஷயங்களில் அமெரிக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு, மாற்று அளவுகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. இப்படி நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மருந்து வியாபாரிகளுக்கு மட்டுமே நன்மை இருக்க முடியும். அமெரிக்க ஆய்வுகள் அனைத்தும், அனைத்து நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் பொருந்தாது. ஒவ்வோர் இடத்தைப் பொறுத்து மாறுபடும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, இந்திய அளவில் மருத்துவ ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். குறைந்தபட்சம், இப்போதைய தீர்வாக இந்த ஆய்வு முடிவுகளை ஏற்காமலாவது இருக்க வேண்டும். இந்தியாவில் செய்யப்படும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அளவு நிர்ணயங்கள் மாற்றப்படுவது மட்டுமே சரியான மாற்றமாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் கு.கணேசன் அழுத்தம் திருத்தமாக!

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...