Monday, March 26, 2018

தர்பூசணி நிஜமாகவே நல்லதா?

Published : 24 Mar 2018 11:04 IST

டாக்டர் கு. சிவராமன்




முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா? மறைக்க முடியும் என்கிறது கோடையில் பெருகும் தர்பூசணி வியாபாரம். தாகம் தீர்க்கும், நிறைய கனிமச் சத்து கொண்டது, நிறமிச் சத்து அதிகம் என ஆரோக்கியத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்ட தர்பூசணி, இன்று வணிக வன்முறையால் நச்சு ரசாயனக் குவியலின் ஒட்டுமொத்த வடிவமாக மாறிவிட்டது.

வழக்கமாக மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் பலரும் கேட்கும் கேள்வி, “சரி, ஐஸ்கிரீம் நல்லதில்லை. தர்பூசணியாவது சாப்பிடலாமா டாக்டர்?”. அழகான கண்களை விரித்துக் கேட்கும் அந்தக் குழந்தைகளுக்கு, “அட! நம் ஊர் பழம்… என்ன செய்யப்போகிறது? பிரிட்ஜில் வைக்காமல் வாங்கிச் சாப்பிடுங்கள்” எனச் சொல்வது வழக்கம்.

ஆனால், சமீபத்தில் காதில் விழுந்த செய்திகளைக்கொண்டு பல விவசாயிகளிடமும் இயற்கை ஆர்வலர்களிடமும் விசாரித்ததில், இப்போது வரும் தர்பூசணிப் பழங்கள் இனிக்கவில்லை, கசக்கின்றன. மனதைக் குளிர்விக்கவில்லை, மாறாகக் கொதிப்படைய வைக்கின்றன.

60 நாள் தர்பூஸ்

ஜப்பானில் சில ஆண்டுகளுக்கு முன்னர், தர்பூசணி வணிகத்தில் பிரச்சினை ஏற்பட்டது. தர்பூசணிகளைக் கொள்முதல் செய்வதில் உள்ள போக்குவரத்து நடைமுறைகளால் லாபம் குறைகிறது என அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. ‘ரக்பி பந்து போல் இருப்பதால், அடுக்கிவைக்க முடியாமல், அங்கே இங்கே ஓடுவதால் 10 டன் கண்டெய்னரில் வெறும் 8 டன் எடையுள்ள தர்பூசணியைத்தான் அடுக்க முடிகிறது’ என்று இந்தப் பழ வியாபாரத்தில் இறங்கியவர்கள் நொந்துகொண்டார்கள்.

இதற்குத் தீர்வாக மரபணு மாற்றம்செய்து செவ்வக வடிவத்தில், லேத்தில் அடித்ததுபோல் பூசணியை உருவாக்கினார்கள் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் படித்த மேதைகள். இன்னும் என்னென்ன வடிவங்களில் எல்லாம் தர்பூசணி வரப்போகிறதோ என்று திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், நம் ஊரில் அகஸ்மாத்தாக ‘கஸ்டம் மேட்’ தர்பூசணிப் பழம், 60 நாட்களில் உருவாக்கப்படுவதைப் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை!

இனிப்பைக் கூட்ட மருந்து!

இப்போது வட மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் விவசாயிகளுக்கு தர்பூசணி பணப் பயிராகிவிட்டது. நன்றாகக் கொழுத்துச் செழித்த, வழவழ தோலுடன், உருண்டையாய் அதை உருவாக்குவதற்கு, அதை விளைவிக்கும் நிலத்தில் பெரும் அட்டூழியம் நடக்கிறது. அந்த 60 நாள் பயிருக்கு நிலத்தில் விரிக்கும் பிளாஸ்டிக் பேப்பர் (Mulch), தெளிக்கும் பூச்சிக்கொல்லி, மண்ணில் போடும் உரம், எல்லாவற்றுக்கும் மேலாக ஊசி மூலம் செலுத்தப்படும் ஊக்க மருந்துகள் என ஏகப்பட்ட ரசாயனக் கலவையில் பயிராக்கப்படும் இப்பழம் பெரும் அச்சத்தை உருவாக்குகிறது.

இயற்கையாய் விளைந்தால் நடுப்பகுதி மட்டும் கூடுதல் இனிப்புடன் இருக்கும். அதனால், பழத்தின் சிவப்பு நிறத்தையும் ஒட்டுமொத்த இனிப்பையும் கூட்டுவதற்கு, ஊக்க ரசாயனங்களை-ஹார்மோன் மருந்துகளை டிரிப்பில் கலந்து செலுத்துகின்றனர். கூடவே பழத்தை நன்றாகப் பருக்கவைக்க, வரப்புகளின் ஓரம் மாட்டு ஊசியுடன் மருந்தடிக்கும் பெண்கள் இந்தத் தொழிலில் ஆங்காங்கே இருக்கிறார்கள். சில நேரம் ஊசி போடும்போதே ‘பூசணி வெடிக்கும். அதனால் கொஞ்சம் சுளுவா பார்த்துச் செய்யணும்’ என்கின்றனர், இதில் அனுபவம் வாய்ந்த பெண்கள்.

கொஞ்சம் உற்றுப் பார்த்தால், தினம் ஆன்டிபயாட்டிக் மருந்து கொடுத்து வளர்க்கப்படும் 60 நாள் பிராய்லர் கோழிக்கும் 60 நாள் பயிரான தர்பூசணிக்கும் அதிக வித்தியாசமில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

நிலமும் நீரும் பாழ்…

ஒருபக்கம் இவ்வளவு மருந்தடித்த தர்பூஸ், அதைத் தின்பவரை என்ன பாடு படுத்துமோ என்ற அச்சம் வர, இன்னொரு பக்கம் அதை வளர்க்கும் நிலம் படும் பாடுதான் ரொம்பவே வலியைத் தருகிறது. ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என உணவுக்கு நுட்பமான பொருள் தந்த சமூகம், தமிழ்ச் சமூகம். ஆனால், இன்றைக்கு உணவுக்காக நிலத்தையும் நீரையும் மொத்தமாக அழிக்கும் வணிகம் இதே மண்ணில்தான் பெரும் கிளை பரப்புகிறது.

தர்பூசணி அறுவடை முடிந்தபின், நிலத்தின் மேல் படிந்திருக்கும் அத்தனை ரசாயன நச்சும், அடுத்த உழவுக்காக உழும்போது மேல் மண்ணிலிருந்து உள்ளே இறங்கும். உள்ளே செல்லும் நச்சு அந்த நிலத்தில் வாழும், நமக்கான உணவைத் தயாரிக்க இடைவிடாமல் உழைக்கும் அத்தனை நுண்ணுயிர்களையும் மண்புழுக்களையும் சேர்த்தே அழிக்கும். நிலத்தடி நீர் வழியே கரைந்து ஓடி, அருகில் உள்ள எல்லா நிலத்துக்குள்ளும் பயிருக்குள்ளும் போய், மனிதரின் நல்வாழ்வுக்குச் சவாலாய் அமையும்.

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். முறையாக மண்ணிலிருந்து அகற்றப்படாத ‘பிளாஸ்டிக் மல்ச்’ 20 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை, நிலத்துக்குள் திணிக்கப்படுகிறது. மிச்சமிருக்கும் பிளாஸ்டிக் மல்ச் எரிக்கப்பட்டு, காற்றில் நச்சு பரப்பப்படுகிறது. அத்துடன் இந்த நவீன தர்பூசணி பயிரிடும் முறைக்காக வயலின் வரப்புகள் அழிக்கப்பட்டு, வயலின் வளமான விளைச்சலுக்குக் காரணமாக இருக்கும் மேல்மண்ணும் தொடர்ச்சியாக அழிந்துபோகிறது.

பயன் தராத இலைகள்

சென்னை முதலான பெருநகருக்குத் தினம் ஆயிரக்கணக்கான டன் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் இந்த தர்பூசணியை, மருந்திட்டு வளர்க்கும் ‘பயிர் வணிகர்கள்’ (விவசாயிகள் என்று அழைப்பது நியாயமானதா?) ஒரு தர்பூசணியைக்கூடச் சாப்பிடுவதேயில்லை என்ற உண்மை, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

உழவின் அடிநாதமே, உழவின் சக பயனைக் கால்நடைக்கு அளிப்பதுதான். இந்தப் பயிரின் இலைகள், கால்நடைக்கு ஒருபோதும் உணவாவதில்லை. மாறாக 80 சதவீதத்துக்கும் மேலாக நீருள்ள இக்கனி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டு, பதிலாக நஞ்சையும் பிளாஸ்டிக்கையும் பூமித் தாய்க்குப் பூசிவிட்டுச் செல்லும் கொடிய செயலை வேறு எந்த இனமும் செய்வதில்லை.

மாற்று என்ன?

இப்படிச் சூழலியலைச் சீர்கெடுத்து விளைவிக்கப்படும் தர்பூசணிக்குப் பின்னால் போவதைவிட நீர்மோர், கம்பங் கூழ், பதநீர், இளநீர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை மட்டுமே கோடைக்குப் பருகலாம் எனத் தோன்றுகிறது.

‘நம் அன்றாடப் பசிக்கு, எப்போதும் நம் நிலம் போதும். ஆனால், பேராசைக்கு நிச்சயமாகப் போதாது’ என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். ஊரெங்கும் குவிந்து கிடக்கும் இனிப்பும் சிவப்பும் நிறைந்த தர்பூசணியின் பின்னால் மறைக்கப்படும் இந்தச் செய்திகளைத் தாகத்துடன் காத்திருக்கும் நுகர்வோருக்கு வேகமாகச் சொல்ல வேண்டிய நேரம் இது. அரசும் பல்கலைக்கழகங்களும் இதுகுறித்து ஆய்வுசெய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இப்பூசணி வணிகத்தால் உறிஞ்சப்படப் போவது, நிலத்தின் நலவாழ்வு மட்டுமல்ல… நம் நலவாழ்வும் சேர்த்துத்தான்!

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...